(நெவில் அன்தனி)
ஐக்கிய அமெரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகளும் கூட்டாக நடத்தும் 9ஆவது ரி -20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த குழு 2க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை நையப்புடைத்து 10 விக்கெட்களால் வெற்றிபெற்றதன் மூலம் இங்கிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
கிறிஸ் ஜோர்டன் பதிவு செய்த ஹெட்-ட்ரிக் உடனான 4 விக்கெட் குவியல், அணித் தலைவர் ஜொஸ் பட்லரின் அதிரடி துடுப்பாட்டம் என்பன இங்கிலாந்தின் வெற்றியை மிகவும் இலகுவாக்கியதுடன் நிகர ஓட்ட வேகத்தையும் கணிசமான அளவு அதிகரிக்கச் செய்தது.
தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான நாளைய போட்டியில் வெற்றிபெறும் அணி குழு 2இலிருந்து 2ஆவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.
இன்றைய சுப்பர் 8 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு நல்ல நிலையில் இருந்த ஐக்கிய அமெரிக்கா அதன் பின்னர் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் எஞ்சிய 7 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் நிட்டிஷ் குமார் (30), கோரி அண்டசன் (29), ஹாமீத் சிங் (21) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
போட்டியின் 19ஆவது ஓவரில் ஹெட் - ட்ரிக் முறையில் கிறிஸ் ஜோர்டான் விக்கெட்களைக் கைப்பற்றி வரலாறு படைத்தார்.
ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இது 9ஆவது ஹெட்-ட்ரிக் ஆகும். அத்துடன் இந்த மைல்கல் சாதனையை நிலைநாட்டிய 8ஆவது வீரர் கிறிஸ் ஜோர்டான் ஆவார்.
ப்றெட் லீ (2007), கேர்ட்டிஸ் கெம்ஃபர் (2021), வனிந்து ஹசரங்க (2021), கெகிசோ ரபாடா (2021), கார்த்திக் மெய்யப்பன் (2022), ஜொஷ் லிட்ல் (2022), பெட் கமின்ஸ் (2024 - 2 தடவைகள்) ஆகியோரே ஹெட் - ட்ரிக் பதிவுசெய்த மற்றைய 7 வீரர்களாவர்.
இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் 3ஆவது ஹெட் - ட்ரிக்கை கிறிஸ் ஜோர்டான் பதிவு செய்தார்.
அவர் 2.5 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆதில் ரஷித் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாம் கரன் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
116 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜொஸ் பட்லர் 38 பந்துகளில் 6 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 83 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அவருக்கு பக்கபலமாக பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய பில் சோல் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த வெற்றியுடன் குழு 2க்கான சுப்பர் 8 சுற்று அணிகள் நிலையில் இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் 1.992 என்ற நிகர ஓட்ட வேகத்துடன் முதலாம் இடத்தைப் பெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
ஆட்டநாயகன்: ஆதில் ரஷித்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM