தொழிலாளர்களின் நாட்சம்பளம் எவ்வளவாக இருத்தல் வேண்டும்?

23 Jun, 2024 | 12:56 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

வாழ்க்கைச் செலவுக்கேற்ப பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாட்சம்பளம் எவ்வளவாக இருத்தல் வேண்டும் என்ற எந்த ஆய்வு ரீதியாக தகவல்களை எப்போதும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் கைவசம் வைத்திருப்பதில்லை. 1998ஆம் ஆண்டு முதல் தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு வருகின்றது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கைச்சாத்திடப்படும் இந்த ஒப்பந்தத்தின் போது, தொழிற்சங்கங்கள் ஒரு தொகையையும் முதலாளிமார் சம்மேளனம் ஒரு தொகையையும் கூற, பேரம் பேசுதல் என நாட்களை கடத்தி இறுதியில் முதலாளிமார் சம்மேளனம் கூறும் ஒரு தொகைக்கே தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு வந்தன.

இந்தத் தொகையானது குறித்த காலகட்டத்தின் பொருளாதார நிலைமைகளை அடிப்படையாகவும் வாழ்க்கைச் செலவுக்கேற்ற தொகையாக இருக்கின்றதா என்பதையெல்லாம் இரு தரப்பினரும் ஆராய்ந்த பார்ப்பதில்லை. இறுதியாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 2019 டிசம்பர் வரையான காலம் வரை இந்த நிலைமை நீடித்தது.

இக்காலகட்டத்திலேயே சிவில் அமைப்புகளால் ‘வாழ்வதற்கான ஊதியம்’ என்ற விடயம் பேசுபொருளானது. அது தொடர்பான ஆய்வுகளும் முன்வைக்கப்பட்டன. நான்கு பேர் கொண்ட ஒரு தொழிலாளியின் குடும்பத்துக்கு மாதாந்த செலவீனத்தொகையை அடிப்படையாகக்கொண்டு அவருக்கு நாள் சம்பளம் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையினர் பல ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளனர். எனினும் அது குறித்து அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள 1700 நாட்சம்பள கோரிக்கையை சில கம்பனிகள் நிராகரித்திருக்கின்றன. இம்மாதம் 10 ஆம் திகதி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளமானது பழைய சம்பளத்திட்டத்தின் படியே (ஆயிரம் ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் புதிய சம்பளத்தொகையுடன் நிலுவைகளும் சேர்த்து வழங்கப்படுமா என்பது குறித்து எந்த நிச்சயத்தன்மைகளும் இல்லை. 

 எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றில் கம்பனிகள் முன்வைத்த இடைக்கால தடைஉத்தரவுக்கான மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து 1700 ரூபாய் வழங்க வேண்டுமென கூறப்பட்டாலும் சில கம்பனிகள் அத்தொகையை வழங்க முடியாத நிலையில் இருக்கின்றன.    இவ்வாறான கம்பனி நிர்வாகங்கள் குறித்து ஆராய அதாவது நீதிமன்ற செயற்பாடுகளுக்கு முன்பதாகவே கடந்த மே மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில யோசனைகளை சமர்ப்பித்திருந்தார். எனினும் அது குறித்து பெரியதாக பேசப்படவில்லை. 

1700 ரூபாய் நாட்சம்பளத்தை வழங்க முடியாதென்று அரசாங்கத்துக்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ள தோட்டக் கம்பனிகளின்    நிலைமையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக   ஜனாதிபதி   அன்றைய தினம்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை முக்கிய விடயம். 

1)     நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்களால்; சமகால வாழ்க்கைச் செலவு மற்றும் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர் ஒருவருக்குச் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தை மதிப்பீடு செய்தல்.

2)     அவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் சம்பளத்தைச் செலுத்துவது தொடர்பாக ஒவ்வொரு தோட்டக் கம்பனிகளிடம் காணப்படுகின்ற இயலுமைகளை பரிசீலிப்பதற்குக் குழுவொன்றை நியமித்தல்.

3)     அத்துடன், ஏதேனுமொரு தோட்டக் கம்பனி முறைகேடான முகாமைத்துவத்தால் சம்பளம் செலுத்துவதற்கு தவறினால், அவ்வாறான தோட்டக் கம்பனிகளுடனான  காணிக் குத்தகை ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான படிமுறைகளை மேற்கொள்ளல்.

இந்த யோசனைகளில் முதலாவது விடயம் முக்கியமானது. அதாவது தற்கால பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு தோட்டத்தொழிலாளி ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்த பட்ச சம்பளத்தை மதிப்பீடு செய்வதாகும். இதற்கு முன்பதாக பல தடவைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இறுதியாக கடந்த மே மாதம் 29 ஆம் திகதி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகமானது தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தது. இதன் போது பேராதனை பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் இது குறித்து ஆய்வு முடிவொன்றை சமர்ப்பித்திருந்தார். அதன் படி நான்கு பேர் கொண்ட ஒரு தொழிலாளர் குடும்பத்துக்கு ஆகக்குறைந்த நாளாந்த வருமானமாக ரூபாய் 2,321 ரூபாய் இருக்க வேண்டும் என்பது அவரது ஆய்வின் முடிவாக இருந்தது.

இந்த ஆய்வானது புள்ளிவிபரவியல் திணைக்களம்,மத்திய வங்கி, நுகர்வோர் வாழ்க்கைச் சுட்டெண் ஆகிய தரவுகளையும் நேரடி கள விஜயத்தின் போது தொழிலாளர்களிடம் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர் குடும்பமொன்றின் மாதாந்த உணவு ,வீட்டுப்பராமரிப்பு, மருத்துவச் செலவு, பிள்ளைகளின் கல்வி ஆகியவற்றுக்கான செலவீனங்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. ஒரு குடும்பத்தின் சராசரியாக 1.5 பேர் உழைப்பின் வருமானத்தை அடிப்படையாகக்கொண்டு இவ் ஆய்வு கணிக்கப்பட்டது. 

இந்த ஆய்வு முடிவுகள் ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டதில் அவை மும்மொழி தேசிய பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தன. ஆகவே ஜனாதிபதியின் யோசனைகளில் முதலாவது விடயத்துக்கு பதில் கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும். ஆனால் இதை அவரிடத்தில் எடுத்துக் கூறுவதற்கு எவருமில்லாத நிலையே உள்ளது. 

இரண்டாவது மூன்றாவது யோசனைகளை செயற்படுத்த அரசாங்கம் குழுக்களை நியமிக்கலாம். ஆனால் இதுவரை அவ்வாறானதொரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் இல்லை. அவ்வாறு நியமிக்கப்பட்டாலும் கூட, முடிவுகளை உடனடியாகப் பெற முடியாது. முடிவுகளைப் பெற்றாலும் அதை சாத்தியப்படுத்துவதற்குப் பல தடைகள் உள்ளன. ஏனென்றால் இலங்கையில் தேசிய மட்ட பிரச்சினைகளை ஆராய நியமிக்கப்பட்ட குழுக்களின் முடிவுகளே இன்று ஆட்சியாளர்களால் குப்பையில் வீசி எறியப்பட்டிருக்கும் நிலையில்  தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு குழு அமைத்து ஏன் பணத்தை செலவு செய்ய வேண்டும் என அரசாங்கம் நினைத்திருக்கலாம். தற்போது கூட்டு ஒப்பந்தம் அமுலில் இல்லாத காரணங்களினால், நாள் ஒன்றுக்கு எடுக்கப்பட வேண்டிய கொழுந்தின் அளவு,  வேலை வழங்கப்பட வேண்டிய நாட்கள், தொழிலாளர்களின் ஏனைய சலுகைகள் குறித்து எந்த எழுத்துபூர்வமான ஆவணங்களையும் தோட்ட நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. மாதத்தில் 25 நாட்கள் வேலை வழங்கினால் ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் படி    தொழிலாளி ஒருவருக்கு எவ்வளவு  சம்பளம் கிடைக்குமோ அதே அளவை 1700 ரூபாய் படி வழங்குவதற்கு கம்பனிகள் திட்டம் தீட்டியுள்ளதாகவே தெரிகின்றது. அதாவது மாதத்தில் 15 நாட்கள் வேலை வழங்கினாலும் கேட்பதற்கு எவருமில்லை. சில கம்பனிகள் தமது தோட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதை நிறுத்தியுள்ளன.  

இதை மற்றுமொரு சவாலான விடயம் என்னவென்றால், கூட்டு ஒப்பந்தமானது இரண்டு வருடங்களுக்கொரு தடவை செய்து கொள்ளப்படல் வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆனால் சம்பள நிர்ணய சபை மூலம்  தீர்மானிக்கப்படும் சம்பள விகிதங்கள் எத்தனை வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றங்களுக்குள்ளாகும் என்பது குறித்து அரசாங்கத்தினாலும் கூற முடியாது. அதாவது தற்போதைய பொருளாதார சூழலில் தொழிலாளி ஒருவருக்கு நாட்சம்பளமாக 2,321 ரூபாய் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மட்ட ஆய்வுகள் கூறினாலும் 1700 ரூபாய் வழங்க வேண்டுமென அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. ஆகவே அடுத்த சம்பள உயர்வு குறித்து எப்போது கதைக்கப்படல் வேண்டும் என தொழில் ஆணையாளரோ , தொழில் அமைச்சோ அல்லது சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்க அமைப்புகளோ எவரும் கூற முடியாது. தொழிலாளர்களின் சம்பள விவகாரமானது என்றுமே முற்றுப் பெறாத ஒரு தொடர்கதையாகவே உள்ளது.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அச்சுறுத்தலாக மாறும்...

2025-01-19 16:20:27
news-image

கிறிப்டோ கரன்சி என்றால் என்ன? இலங்கையில்...

2025-01-19 16:10:32
news-image

பனிப்பாறைகளின் இறையாண்மை

2025-01-19 15:56:51
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக்கட்சியின் அஸ்தமித்துப்போன கனவா?...

2025-01-19 15:45:57
news-image

உயிர்களை பறிக்கும் வீதி விபத்துக்கள்

2025-01-19 15:33:13
news-image

தேவைப்படுவது தமிழ் மைய அரசியலே

2025-01-19 15:18:20
news-image

சேமிப்பாளர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய விதத்தில் புதிய நிதியியல்...

2025-01-19 15:13:50
news-image

அரசியல் கட்சிகளின் நிலைபேற்றை விடவும் சமூகத்தின்...

2025-01-19 15:06:36
news-image

புதிய அரசியல் யாப்பு அறிமுகமாகுமா?

2025-01-19 14:50:05
news-image

முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்கள்

2025-01-19 14:42:18
news-image

புதிய தலைமையில் பொருண்மிய மீட்சி பெறுமா...

2025-01-19 14:08:55
news-image

மீண்டும் பலமடையும் விமானப்படை

2025-01-19 13:46:36