பெட் கமின்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் ஹெட்-ட்ரிக்; ஆனால் ஆஸியை அதிரவைத்தது ஆப்கான்!

23 Jun, 2024 | 10:11 AM
image

(நெவில் அன்தனி)

சென். வின்சென்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற குழு 1க்கான சுப்பர் 8 ஐசிசி உலகக் கிண்ணப் போட்டியில் சகலதுறைகளிலும் அவுஸ்திரேலியாவை விஞ்சிய ஆப்கானிஸ்தான் 21 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இருவகை உலகக் கிண்ண வரலாற்றில் (50 ஓவர் மற்றும் ரி20) அவுஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.

அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு அரை இறுதிக்கு செல்வதற்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தப் போட்டி முடிவை அடுத்து குழு1 இல் இடம்பெறும் நான்கு அணிகளுக்கும் அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸ்தரான் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், 8ஆவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்பட்ட குல்பாதின் நய்பின் 4 விக்கெட் குவியல் என்பன ஆப்கானிஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

அத்துடன் இப்போட்டியில் பிடிகள், ரன் அவுட் வாய்ப்புகள், ஸ்டம்ப் வாய்ப்பு ஆகியன தவறவிடப்பட்டமை அவுஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் பொறுமையாகவும் திறமையாகவும் துடுப்பெடுத்தாடி 118 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ரஹ்மானுல்லா குர்பாஸ் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைப் பெற்றதுடன் இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் அவர் குவித்த 3ஆவது அரைச் சதம் இதுவாகும்.

இப்ராஹிம் ஸத்ரான் 51 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆனால், குர்பாஸின் விக்கெட் உட்பட முதல் 4 விக்கெட்கள் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிய ஆப்கானிஸ்தான் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டதுடன் கடைசி ஓவரிலும் 2 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன.

ஆரம்ப வீரர்களைவிட வேறு எவரும் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தவில்லை.

இதனிடையே பெட் கமின்ஸ் தனது 2ஆவது தொடர்ச்சியான ஹெட் - ட்ரிக்கைப் பதிவு செய்து வரலாறு படைத்தார். முன்னைய ஹெட் - ட்ரிக்கைப் போன்றே இந்த ஹெட் - ட்ரிக்கையும் அவர் இரண்டு ஓவர்களில் பதிவுசெய்தார்.

பெட் கமின்ஸ்   28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்பா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

149 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் க்ளென் மெக்ஸ்வெல் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 106 ஓட்டங்களாக இருந்தபோது மெக்ஸ்வெல் 6ஆவதாக ஆட்டம் இழந்ததும் அவுஸ்திரேலியாவின் எதிர்பார்ப்பு தகர்ந்தது.

இறுதியில் அவுஸ்திரேலியா 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

பந்துவீச்சில் குல்பாதின் நய்ப் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி சர்வதேச ரி20 போட்டிகளில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

ஆரம்ப பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்கும் திறமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன்: குல்பாதின் நய்ப்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18 வயதின் கீழ் தெற்காசிய கூடைப்பந்தாட்டம்...

2024-07-14 09:59:27
news-image

18இன் கீழ் ஆசிய கிண்ண தகுதிகாண்...

2024-07-13 16:31:51
news-image

கென்ய மரதன் ஓட்ட வீரரான லோரன்ஸ்...

2024-07-13 13:03:12
news-image

37 வருட கால உலக சாதனையை...

2024-07-13 12:08:33
news-image

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் இன்று...

2024-07-13 10:49:25
news-image

பங்களாதேஷை இலகுவாக வென்றது இலங்கை; மாலைதீவுகளை...

2024-07-12 01:25:11
news-image

ரி20 அணிதலைவர் பதவியிலிருந்து வனிந்து இராஜினாமா

2024-07-11 19:57:29
news-image

ஆர்ஜென்டீனாவில் பாலியல் குற்றச்சாட்டினால் பிரெஞ்சு றக்பி...

2024-07-11 13:04:22
news-image

மேற்கு ஆசிய இளையோர் விரைவு செஸ்...

2024-07-11 12:34:03
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற...

2024-07-11 11:59:25
news-image

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் அரை இறுதியில்...

2024-07-11 12:01:24
news-image

கத்தாரிடம் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி

2024-07-11 13:35:29