(மா. உஷாநந்தினி)
படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்
'புத்தகங்கள், வாசிப்பு, பரவலாக்கம்' என்கிற நீண்டகால செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வாக ஆய்வரங்கும் புத்தக கண்காட்சியும் வெள்ளிக்கிழமை 21ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை 23ஆம் திகதி வரை கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெறுகிறது.
லண்டன் மானுடம் அமைப்பின் ஏற்பாட்டில், மதகு அமைப்பின் ஒருங்கிணைப்பில், மூன்று நாட்களிலும் நிகழும் ஆய்வரங்குகளில் பங்கேற்க, தமிழகத்திலிருந்து எழுத்தாளரும் பேச்சாளரும் சிறந்த கதை சொல்லியுமான பவா செல்லத்துரை ('பிக் பொஸ்' போட்டியாளர்), பேச்சாளரும் எழுத்தாளருமான பெருமாள் முருகன், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, தமிழ் ஆய்வாளர் முனைவர் இரா. வெங்கடாசலபதி, பதிவாளர் கண்ணன் சுந்தரம் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
முதல் நாள் நிகழ்வில் இலக்கியவாதிகளான மேமன் கவி, முல்லை முஸ்ரிபா, கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் கல்விக் குழுத் தலைவர் த. இராஜரட்ணம், வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் உட்பட தமிழக இலக்கிய ஆளுமைகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இப்புத்தக கண்காட்சியில் இந்நாட்டு எழுத்தாளர்களின் நூல்களும் தமிழகத்திலுள்ள பல பதிப்பகங்களின் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எனினும், வாசகர்களின் வரவு சற்றே குறைந்திருந்ததையும் பார்க்க முடிந்தது.
அத்தோடு, நடைபெற்ற வி.ரி. தர்மலிங்கம் அரங்கில் தொடக்கவுரையினை நிகழ்வை நெறிப்படுத்திய சர்வதேச இணைப்பாளர் எம்.பெளசர் ஆற்றினார்.
வெளியீடு கண்ட முல்லை முஸ்ரிபாவின் 'என் மனசின் வரைபடம்' பத்திகளின் தொகுப்பு நூலுக்கான அறிமுக உரையினை கவிஞர் மேமன் கவி வழங்கினார். தமிழகத்தின் நன்னூல் பதிப்பாளர் மணலி அப்துல் காதர் நூல் வெளியீட்டுரை ஆற்றினார்.
அடுத்து, 'என் மனசின் வரைபடம்' நூல் வெளியீட்டின்போது, முதல் பிரதியை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஓய்வுநிலை ஆணையாளர் நாயகம் கவிஞர் சு.முரளிதரனிடமிருந்து சமூக செயற்பாட்டாளர் செ.ரவீந்திரன் பெற்றுக்கொண்டார்.
அடுத்து, ஏற்புரையினை முல்லை முஸ்ரிபாவும் வி.ரி. தர்மலிங்கம் நினைவுரையை மல்லியப்பு சந்தி திலகரும் ஆற்றினர்.
அடுத்து, அரசியல் சமூக செயற்பாட்டாளர் சரத் அத்துகோரல சிங்கள மொழியில் ஆற்றிய உரையின் சுருக்கத்தை தமிழில் வழங்கினார், எழுத்தாளர் பொன். பிரபாகரன்.
"'கதை கேட்பது' வாசகர்களை வாசிப்பிலிருந்து விலக்கிவிடக்கூடாது"
"ஒரு நல்ல வாசகன் சங்கீதம் கேட்பது போல் புத்தகத்தை வாசிக்க வேண்டும்" என்ற கருத்தினை நிகழ்வில் முன்வைத்த எழுத்தாளர், கதை சொல்லி பவா செல்லத்துரை தொடர்ந்து உரையாற்றுகையில்,
"கதை சொல்வதோ கதை கேட்பதோ, ஒருபோதும் தீவிர வாசிப்பிலிருந்து வாசகர்களை விலக்கிவிடக் கூடாது என்பதில் நான் மிகுந்த கவனத்துடன் இருக்கிறேன்.
கதை சொல்வதிலுள்ள எனது நோக்கம், ஒரு புத்தகத்தைப் பற்றி நான் சொல்லும் கதையை இலட்சம் பேர் கேட்கிறார்கள் என்றால், அவர்களில் பத்தாயிரம், இருபதாயிரம் பேராவது அந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். அதுதான் எனது மிகப் பெரிய நோக்கம். அது எவ்வளவு தூரம் சாத்தியமாகியுள்ளது என்பது எனக்குத் தெரியும்.
நான் ஒரு எழுத்தாளர் என்பது மருவி, 'கதை சொல்லி' என்கிற அடையாளம் வர ஆரம்பித்துவிட்டது. இதில் 'நான் யார்' என்கிற ஆராய்ச்சிக்குள் நான் போக விரும்பவில்லை. நான் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
பவா ஒரு பயங்கர 'கதை சொல்லி' என்கிறார்கள். சரிதான். நான் வேறு எதுவுமாக இல்லையே... ஏதோ ஒரு வகையில் இலக்கியத்தோடு தொடர்புடைய ஒருவராக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.
ஓர் எழுத்தாளன் தான் எழுதிய வார்த்தைகளை, வரிகளை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. எழுதும் விடயம் அச்சிலேற்றப்பட்டு, எப்போது நூலாக வந்துவிடுகிறதோ, அப்போதே அங்கிருந்து அவன் விடுபட்டுப்போய்விடுவான். பல நேரங்களில் அவன் எழுதிய கதையே அவனுக்கு ஞாபகத்தில் இருக்காது.. 'இது நான் எழுதிய கதையா' என்று கேட்பார்கள். எனக்கே கூட அப்படியொரு அனுபவமுண்டு.
ஒரு முறை பிரபஞ்சன் எழுதிய ஒரு கதையை நான் சொன்னபோது, அதைக் கேட்டுக்கொண்டிருந்த பிரபஞ்சன் உணர்ச்சிவசப்பட்டு எழுந்து நின்று, 'சார்... யார் எழுதின கதை சார் இது' என்று கேட்டார். அதற்கு நான் 'இது உங்க கதைதான் சார்' என்றேன். அப்போதும் அவர் அந்தக் கதை தன்னுடையது என்பதை நம்பவில்லை.
ஏன் வாசிக்க வேண்டும்?
"ஏன் வாசிக்க வேண்டும்? இந்த ஊரில், இத்தனை லட்சம் பேரில் நூறு பேராவது வந்து உட்கார்ந்து ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டும். ஏன்?
பொன், பொருள் என்று தேடிகிற இந்த உலகத்தில் புத்தகங்களை வாங்கி நாம் வாசிக்க வேண்டும் என்றால், இந்த வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறை நமக்கு அருளப்பட்டிருக்கிறது. இயற்கை நமக்கு அப்படியொரு வழியை ஆரம்பித்துக்கொடுத்திருக்கிறது.
ஒரு வாழ்க்கையை மட்டுந்தான் ஒரு மனிதன் இந்த உலகத்தில் வாழ முடியும். அந்த ஒரு வாழ்க்கையில் அவன் பல்வேறு அனுபவங்களை அடைகிறான். விதவிதமான மனிதர்களை, உறவுகளை, வாழ்க்கை முறைகளை, பருவ நிலைகளை, மழையை, வெயிலை... எல்லாவற்றையும் இந்த ஒரே ஒரு வாழ்க்கையில் மனிதன் அடைந்துவிடுகிறான்.
ஆனால், அந்த மனிதன் ஒரு நாவலை வாசிக்கிறபோது அல்லது வேறொரு புத்தகத்தை படிக்கிறபோது அல்லது ஒரு கவிதையூடாக பயணிக்கிறபோது அவன் வாழ்நாளில் இன்னொரு உலகத்தை தன்னுடையதாக மாற்றிக்கொள்கிறான்.
என் வாழ்க்கையில் நான் 200 புத்தகங்களை வாசித்திருக்கிறேன் என்றால், 200 பேரின் வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கிறேன். இந்த அனுபவத்தை, 'வாசிப்பு' தவிர வேறு எதுவும் தந்துவிடாது என தெரிவித்தார்.
அதை தொடர்ந்து, பவா செல்லத்துரை வீரகேசரிக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டதாவது:
'விதைநெற்கள்' போன்ற வாசகர்களை பார்க்கிறேன் - பவா செல்லத்துரை
கேள்வி : தமிழ்நாட்டில் நடைபெறும் புத்தக கண்காட்சிகளையும் இலங்கையில் நடைபெறும் இதுபோன்ற புத்தக கண்காட்சிகளையும் பார்க்கிறபோது ஏதேனும் வித்தியாசத்தை உணர்கிறீர்களா?
பதில் : இங்கு நடக்கிற புத்தக கண்காட்சிக்கு ரொம்ப ஆத்மார்த்தமாக, 'விதைநெற்கள்' மாதிரி மக்கள் வந்திருக்கிறார்கள். இதை விட அதிகமாக தமிழ்நாட்டில் பரவலாக எல்லாத் தரப்பிலிருந்தும் மக்கள் புத்தக கண்காட்சிகளுக்கு வருவார்கள். ஆனால், இங்கு நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு வரும் வாசகர்களை பற்றி சொல்வதானால், 'விதைநெல்' என்கிற வார்த்தையை நான் பயன்படுத்த விரும்புகிறேன். மிகத் தேர்ந்தெடுத்த வாசகர்கள் வந்திருப்பதை நான் பார்க்கிறேன்.
கேள்வி : உங்கள் சிந்தனைப் போக்கை மாற்றிய ஒரு புத்தகம்?
பதில் : அப்படி குறிப்பிட்டு ஒரு புத்தகத்தை சொல்ல முடியாது. பத்து புத்தகங்களை சொல்லலாம். அதை விட எழுத்தாளர்களை பற்றி சொல்ல முடியும். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், புதுமைப்பித்தன், நாராயணசாமி, ராஜ நாராயணன்... இப்படி ஒரு பத்து பேர் இருக்கிறார்கள் என்றார்.
'என் மனசின் வரைபடம்' - முல்லை முஸ்ரிபா
முல்லை முஸ்ரிபா தனது நூலை பற்றியும் நூல் வாசிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குறைகள் தொடர்பாகவும் வீரகேசரிக்கு கருத்துரைக்கையில், "'என் மனசின் வரைபடம்' என்கிற பத்தி எழுத்துத் தொகுதி, 'எங்கள் தேசம்' என்ற பத்திரிகையில் நான் எழுதிய 50 கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 31 பத்திகளின் தொகுப்பாக அமைகிறது. இந்த நூல் எனது வாழ்வியல் சார்ந்த அனுபவங்களின் வெளிப்பாடாக அமைந்துள்ளது" என்றார்.
"வாசிக்கும் முறை மாறிவிட்டது"
அத்தோடு, "இன்றைய சூழலில் வாசிப்பு பழக்கத்தில் ஏறுபட்டுள்ள மாற்றத்தை இரு விதமாக பார்க்கலாம். ஒன்று, வாசிக்கும் முறை மாறியிருக்கிறது. முன்பு ஓலைச்சுவடிகளை, புத்தகங்கள், பனுவல்களை வாசித்தோம். ஆனால், இன்றோ தொழில்நுட்ப வளர்ச்சியின் பாரிய முன்னேற்றமானது வாசிப்பினை கையடக்கத் தொலைபேசிக்குள் கொண்டுவந்துவிட்டது. அதனால் புத்தகங்களின் தாள்களை புரட்டி வாசிக்கும் முறை குறைந்துவிட்டது.
தற்போது வாசிப்பு இடம் மாறி மின்னெழுத்துக்களை வாசிக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது. இதில் காத்திரமான விடயங்களை வாசிக்கிறார்களா, இல்லையா என்பது விமர்சனத்துக்குரிய விடயம்.
எவ்வாறாயினும், வாசிப்பு பழக்கம் என்பது தற்போதும் இருக்கிறது. ஆனால், வாசிக்கும் முறை மாறியிருக்கிறது.
நான் ஓர் இலக்கியவாதி என்ற ரீதியில் இலக்கிய வாசிப்பு மிக முக்கியமானது என்பேன். இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் 'மின்னெழுத்துக்களை விட புத்தகத் தாள்களை புரட்டி வாசிப்பதுதான் உயிரோட்டமானதாக இருக்கும்' என்பார்கள். அந்த உயிரோட்டமான வாசிப்பு இன்றிருக்கிறதா என்பது பெரியதொரு கேள்வி.
ஆகவே, புத்தகங்களை வாசிக்கும் பண்பாடு பாடசாலையிலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டும். இளைஞர்களிடத்தில் வாசிப்பு பழக்கம் அதிகரிக்க வேண்டும்.
தற்காலத்து நூல்களில் கூட முந்தைய காலத்து மொழி நடை, எழுத்து நடையை பார்க்க முடியாது. நிறையவே மாறிவிட்டன.
வாசிப்புதான் ஒரு வாசகனை ஓரிடத்தில் தேங்கியிருக்க விடாமல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நதியோட்டம் போல நகர்த்திச் செல்லும். ஆகவே, வாசிப்பு பண்பாடு வளர்ச்சியடைய வேண்டும்.
நூல்களின் விலைச்சுமையும் பொருளாதார சிக்கலும்
"புத்தகங்களை வாங்கி வாசிப்பவர்கள் எண்ணிக்கையில் குறைபாடுகள் இருக்கின்றன. அத்தோடு, புத்தகங்களின் விலைச்சுமையும் இதற்கொரு காரணம். பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு புத்தகங்களை வாங்குவதென்பது பெரும் சிரமமான விடயமே.
ஒரு வெளியீட்டாளராக சொல்வதானால், இலங்கையில் புத்தகங்களை வெளியிடுவதிலும், வெளியிட்ட புத்தகங்களை விற்பனை செய்வதிலும், அதற்கான சந்தைவாய்ப்பை பெற்றுக்கொள்வதிலும் அனுபவ ரீதியாக பெரும் சிரமங்களை நானும் எதிர்கொண்டிருக்கிறேன்..." என்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM