(நெவில் அன்தனி)
சென். லூசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் பரபரப்புக்கு மத்தியில் நிறைவுபெற்ற குழு 2க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை 7 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது.
ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இங்கிலாந்தை 6ஆவது தடவையாக சந்தித்த தென் ஆபிரிக்கா ஈட்டிய 5ஆவது வெற்றி இதுவாகும்.
இன்றைய வெற்றியுடன் குழு 2இல் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள தென் ஆபிரிக்கா அரை இறுதியில் விளையாடும் தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.
அத்துடன் இந்த உலகக் கிண்ணத்தில் தென் ஆபிரிக்கா இதுவரை தோல்வி அடையாத அணியாக இருக்கிறது.
குவின்டன் டி கொக், டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள், கேஷவ் மஹாராஜின் சிறப்பான பந்துவீச்சு, அன்ரிச் நோக்யாவின் சாதுரியமும் கட்டுப்பாடும் கலந்த கடைசி ஓவர் என்பன தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தன.
அதேவேளை, இங்கிலாந்தின் முன்வரிசை வீரர்களின் மோசமான துடுப்பாட்டமும் தென் ஆபிரிக்காவுக்கு சாதகமான முடிவு கிடைக்க வழிவகுத்தன.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது
குவின்டன் டி கொக்கின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் பவர் ப்ளே நிறைவில் தென் ஆபிரிக்கா விக்கெட் இழப்பின்றி 63 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
எவ்வாறாயினும் பவர் ப்ளேயின் பின்னர் சுழல்பந்துவீச்சாளர்கள் பந்துவீச ஆரம்பித்ததும் தென் ஆபிரிக்காவின் ஓட்டவேகம் சற்று குறைந்தது.
குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ் ஆகிய இருவரும் 59 பந்துகளில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். இதில் ரீஸா ஹெண்ட்றிக்ஸின் பங்களிப்பு வெறும் 19 ஓட்டங்களாக இருந்தது.
மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 6 ஓட்டங்கள் சேர்ந்தபோது குவின்டன் டி கொக் 65 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். சுப்பர் 8 சுற்றில் அவர் குவித்த இரண்டாவது தொடர்ச்சியான அரைச் சதம் இதுவாகும். 38 பந்துகளை எதிர்கொண்ட குவின்டன் டி கொக் 4 பவுண்டறிகளையும் 4 சிக்ஸ்களையும் விளாசினார்.
ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் டேவிட் மில்லர் மாத்திரமே திறமையை வெளிப்படுத்தி 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களைக் குவித்தார்.
மத்திய வரிசையில் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
163 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
கவனக்குறைவான மற்றும் தவறான அடி தெரிவுகள் காரணமாக இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
9 ஓவர்களுக்குள் பில் சோல்ட் (11), ஜொனி பெயாஸ்டோவ் (16), அணித் தலைவர் ஜொஸ் பட்லர் (19) ஆகிய முக்கிய துடுப்பாட்ட வீரர்களை இங்கிலாந்து இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (54 - 3 விக்.)
5 ஓவர்கள் நிறைவில் தென் ஆபிரிக்கா விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இங்கிலாந்து ஒரு விக்கெட்டை இழந்து 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
10 ஓவர்கள் நிறைவில் தென் ஆபிரிக்கா ஒரு விக்கெட்டை மாத்தரம் இழந்து 87 ஓட்டங்களைப் பெற, இங்கிலாந்து 10 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
மொத்த எண்ணிக்கை 61 ஓட்டங்களாக இருந்தபோது மொயீன் அலி (9) ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் ஹெரி புறூக், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு புத்துயிர் கொடுத்தனர்.
லியாம் லிவிங்ஸ்டோன் 17 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட அன்றிச் நோக்யாவின் முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயற்சித்த ஹெரி புறூக் ஆட்டம் இழந்தார். அவர் 37 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்றார்.
கடைசி 5 பந்துகளில் இங்கிலாந்தினால் 6 ஓட்டங்களையே பெற முடிந்தது.
பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: குவின்டன் டி கொக்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM