(நெவில் அன்தனி)
அன்டிகுவா, நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் மழை காரணமாக 32ஆவது ஓவருடன் கைவிடப்பட்ட குழு 1க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது.
ஒரே நேரத்தில் ஐசிசியின் 3 சம்பியன் கிண்ணங்களையும் முதலாவது அணியாக தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடும் அவுஸ்திரேலியா, சுப்பர் 8 சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கிண்ணம் ஆகிவற்றில் அவுஸ்திரேலியா கடந்த வருடம் சம்பியனாகியிருந்தது.
பெட் கமின்ஸின் ஹெட்- ட்ரிக், டேவிட் வோர்னர், ட்ரவிஸ் ஹெட், க்லென் மெக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்தன.
மழை காரணமாக சிறு தாமதத்தின் பின்னர் ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.
அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாடு மற்றும் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்ட பங்களாதேஷ் சார்பாக நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் அவர்களில் இருவர் 40 ஓட்டங்களை எட்டினர்.
தன்ஸித் ஹசன் (0) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்த பின்னர் லிட்டன் தாஸ் (16), அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்ததுடன் சிறந்த இணைப்பாட்டம் ஏற்படுத்தப்படவில்லை.
நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 41 ஓட்டங்களையும் தௌஹித் ரிதோய் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்வரிசையில் தஸ்கின் அஹ்மத் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
இதனிடையே பெட் கமின்ஸ் ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை சரித்தார்.
18ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளில் மஹ்முதுல்லா, மெஹெதி ஹசன் ஆகியோரையும் 20ஆவது ஓவரின் முதலாவது பந்தில் தௌஹித் ரிதோயையும் பெட் கமின்ஸ் ஆட்டம் இழக்கச் செய்து ஹெட் - ட்ரிக்கைப் பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் பெட் கமின்ஸ், ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் ஹெட்-ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்திய 7ஆவது வீரரானார்.
அத்துடன் ரி20 உலகக் கிண்ணத்தில் முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவு செய்த ப்ரெட் லீயைத் தொடர்ந்து ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது அவுஸ்திரேலியரானார்.
ப்ரெட் லீயும் பங்களாதேஷுக்கு (2007) எதிராகவே ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
141 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா இரண்டாவது தடவையாக மழையினால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு கைவிடப்பட்ட போது 11.2 ஓவர்களில் 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 11.2 ஓவர்களில் வெற்றி இலக்கு 78 ஓட்டங்களாக இருந்தது. இந் நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால் டக்வேர்த் லூயிஸ் முறைமை அமுலுக்கு வரும் என்பதை அறிந்த அவுஸ்திரேலியா அதிரடியாகத் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.
அவுஸ்திரேலியா 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடும் மழை பெய்ததால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் அவுஸ்திரேலியா 29 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.
25 நிமிடங்களின் பின்னர் மழை ஓய்ந்ததும் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது சீரான இடைவெளியில் ட்ரவிஸ் ஹெட் (21 பந்துகளில் 31), அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் (1) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர்.
அதன் பின்னர் டேவிட் வோர்னரும் க்லென் மெக்ஸ்வெலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்ட வேகத்தை அதிகரித்தனர்.
11.2 ஓவர்களில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்களை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் கடும் மழை தொடர்ந்ததாலும் கட் ஓவ் நேரம் தாண்டியதாலும் போட்டி கைவிடப்பட்டது.
டேவிட் வோர்னர் 35 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 53 ஓட்டங்களுடனும் க்லென் மெக்ஸ்வெல் 14
ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
ஆட்டநாயகன்: பெட் கமின்ஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM