செய்து வரும் தொழிலில் போட்டி அதனால் லாபக் குறைவு உயர்கல்வியை தொடர்வதில் தடை- பொருத்தமான வரன் கிடைக்காமல் திருமணத்தடை- திருமணத்திற்குப் பிறகு ஆண்டுகள் பல கழிந்தும் புத்திர பாக்கியம் கிடைக்காமை- என பல்வேறு அசுப பலன்காரணமாக எம்மில் பலரும் பல வகையான பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பர்.
ஜோதிட நிபுணர்களை அணுகி அவர்கள் பரிந்துரைக்கும் பரிகாரங்களை செய்த பிறகும் நிவாரணம் என்பது முழுமையாக கிடைத்திருக்காது.
இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் அதிகாலையில் எழுந்தவுடன் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய நாளாந்த கடமைகள் குறித்து விரிவாக குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். அதில் உங்களது வாழ்க்கைக்கான சுப பலன்களில் தடையை ஏற்படுத்தும் நவகிரகங்களின் தோஷங்களை நீக்கும் சூட்சமங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உங்களது ஜாதகத்தில் சூரியன் நீச்சமடைந்தோ அல்லது வலிமையிழந்தோ தோஷம் பெற்றிருந்தால் நீங்கள் நீராடும் நீரில் சிறிதளவு குங்குமப்பூ அல்லது சிவப்பு வண்ண பூக்களை போட்டு சிறிது நேரம் கழித்து நீராட வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்களுடைய நாளாந்த குளியலைத் தொடரலாம்.
இதனை நாளாந்தம் மேற்கொள்ளலாம் அல்லது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மேற்கொள்ளலாம். இதனால் உங்களது சூரிய பகவானால் உண்டான தோஷம் விலகி, நன்மை பயக்கும்.
உங்களுடைய ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்திருந்தாலோ அல்லது அஸ்தங்கம் அடைந்திருந்தாலோ தோஷம் ஏற்பட்டு அசுப பலன்கள் தொடரும்.
இவர்கள் நீராடுவதற்கு முன் சிறிதளவு தயிரை எடுத்துக்கொண்டு முகம் அல்லது உடலின் வேறு பகுதியில் பூசிக்கொண்டு, சிறிது நேரம் கழித்து நீராட வேண்டும். சிலர் முகப் பொலிவிற்காக முகத்தில் தயிரை பூசிக்கொள்வர் அது வேறு. ஆனால் சந்திர பகவானால் ஏற்பட்டிருக்கும் தோஷத்தால் அசுப பலன்கள் தொடர்ந்தால் இவர்கள் மேற்கூறிய பரிகாரத்தை திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளலாம் அல்லது வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இதனை மேற்கொண்டால் சுப பலன் கிட்டும்.
உங்களது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தோஷமடைந்து திருமணத்தடை ஏற்பட்டிருந்தால் நீராடுவதற்கு முன் அந்த நீரில் வில்வ பழத்திலிருந்து கிடைக்கும் வில்வ கொட்டையை நன்றாக இடித்து தூளாக்கி அதனை நீரில் கலந்து, அந்த நீரில் முதலில் நீராட வேண்டும். இதனால் செவ்வாய் தோஷம் விலகி, திருமணத்தடை நீங்கி, நினைத்த வரன் கிடைத்து இல்வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கலாம். இந்த குளியல் பரிகாரத்தை செவ்வாய்க்கிழமைகளிலும் அல்லது வாரந்தோறும் வரும் செவ்வாய்க்கிழமைகளிலும் மேற்கொண்டால் விரைவான பலன் கிடைக்கும்.
வியாபாரத்தில் தடை -தாமதம்- மந்தம், சாமர்த்தியமாக முடிவெடுப்பதில் இடையூறு, தாய்மாமன் உறவின் விரிசல், உயர்கல்வி கற்பதில் தடை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி, உங்களது ஜாதகத்தில் புதன் பகவான் தோஷம் பெற்றிருந்தால் நீங்கள் புதன் பகவானால் ஏற்பட்ட தோஷத்தை நீக்க கடல் நீரை சிறிதளவு எடுத்து வந்து அதனை நீங்கள் நாளாந்தம் நீராடும் நீரில் கலந்து நீராடலாம்.
மேலும் உங்களது உறவினர்களோ நண்பர்களோ யாரேனும் வட இந்தியாவிற்கு புனித யாத்திரை சென்று அதிலும் குறிப்பாக கங்கையில் நீராடி, 'கங்கா நதி' தீர்த்தத்தை தாயகத்திற்கு எடுத்து வந்திருந்தால், அவர்களிடத்தில் சொல்லி வைத்து அந்த நீரையும் நீங்கள் நீராடுவதற்கு பயன்படுத்தினாலும் புதன் பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்கும். மேலும் நீராடுவதற்கு முன் சிறிதளவு தண்ணீரில் மஞ்சள் தூள் -கடுகு -தேன் ஆகியவற்றை கலந்து, அதனை முதலில் நீராடுவதற்கு பயன்படுத்த வேண்டும். புதன்கிழமைகளில் அல்லது வாரந்தோறும் வரும் புதன்கிழமைகளில் இத்தகைய குளியல் பரிகாரத்தை தொடர்ச்சியாக செய்து வந்தால் புத பகவான் ஏற்பட்ட தோஷம் நீங்கி சுப பலன் கிட்டும்.
வியாழ பகவானால் அதாவது குரு பகவானால் பாதிக்கப்பட்டு, தோஷம் ஏற்பட்டிருந்தால் இவர்கள் நீராடுவதற்கும் முன் ஏலக்காயை எடுத்து அதனை உடைத்து அதில் இருக்கும் விதைகளை தனியாக எடுத்து அதனைத் தூளாக்கி அந்த நீரை சூடு படுத்தி, அதன் பிறகு நாம் நீராடுவதற்காக தயார் செய்து வைத்திருக்கும் நீரில் கலந்து பின் நீராட வேண்டும். இதனை வியாழக்கிழமைகளிலும் அல்லது வாரந்தோறும் வரும் வியாழக்கிழமைகளிலும் தொடர்ச்சியாக செய்து வந்தால், குரு தோஷம் மற்றும் குருவாக இருப்பவர்களால் உண்டான தோஷம் ஆகியவை நீங்கி சுப பலன்கள் கிடைக்கும்.
உங்களது ஜாதகத்தில் சனி பகவான் நீச்சமடைந்தோ அல்லது பலவீனமாகவோ இருந்தாலும் சனி தோஷம் ஏற்படும். நீராடுவதற்கு முன் சிறிதளவு தண்ணீரில் கருப்பு எள்ளை கலந்து அதனை முதலில் நீராடுவதற்கு பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு வழமையான நீரில் நீராட வேண்டும். இதனை சனிக்கிழமைகளில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தால் சனி பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும்.
உங்களது ஜாதகத்தில் சுக்கிர தோஷம் இருந்தால் நீராடுவதற்கும் முன் பசும்பாலை சிறிதளவு நீரில் கலந்து விட்டு, அதனை முதலில் நீராட பயன்படுத்த வேண்டும். பிறகு இயல்பான முறையில் நீராடலாம் . இதனை வெள்ளிக்கிழமைகளிலும் வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தால் சுக்கிர பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.
உடனே எம்மில் சிலர் சாயா கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் தோஷம் இருக்கிறது அல்லது ராகு தோஷம் இருக்கிறது அல்லது கேதுவின் தோஷம் இருக்கிறது. இதனை எப்படி நீக்குவது? என கேட்க நினைப்பர்.
நீங்கள் நீராடுவதற்கு முன் சிறிதளவு அருகம்புல் மற்றும் தர்ப்பை புல்லை சேகரித்து வைத்துக் கொண்டு, அதனை சிறிதளவு தண்ணீரில் போட்டு அதனை சூடு படுத்திட வேண்டும். இளம் சூடு ஏற்பட்ட பிறகு அதனை நீராடுவதற்காக பயன்படுத்தப்படவுள்ள நீரில் கலந்து நீராட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்யும் போது ராகு மற்றும் கேதுவின் தோஷம் நீங்கும்.
இந்த குளியல் பரிகாரத்தை ஆண் - பெண் என இருவரும் வயது வித்தியாசமின்றி எந்த தருணத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் பரிகாரத்திற்காக ஏதேனும் ஆலயத்திற்கு சென்றிருக்கும் போது அங்குள்ள புனித தீர்த்தத்தில் இந்த குளியல் பரிகாரத்தை பின்பற்றக் கூடாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும், நீராடும் போது நதியில் நாம் எப்படி நீராட தொடங்குவோமோ அதனைப் போல் இல்லத்தில் நீராடும் போதும் அதே வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்ன குளியல் பரிகாரத்தின் மூலம் நீராடிய பிறகு இறைவனை அல்லது அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று நவகிரகத்தினை வணங்கினால் உங்களது தோஷம் அகன்று சுப பலன்கள் கிடைக்கும்.
தொகுப்பு :சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM