(எம்.சி.நஜிமுதீன்)

அரசாங்கத்தின் உரிய திட்டமிடலில்லாத ஆட்சியினால் மக்கள் இம்முறை சித்திரைப் புத்தாண்டைக்கூட சிறந்த முறையில் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் உணவுப் பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. எனவே அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. ஆகவே எதிர்வரும் மே தினத்திலிருந்து அரசாங்கத்திற்கு எதிரான பரந்துபட்ட போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்> 

கடந்த காலங்களில் சித்திரைப் புத்தாண்டு அண்மிக்கும்போதே நாட்டில் குதூகலமான நிலை ஏற்பட்டுவிடும். இம்முறை அவ்வாறன குதூகலத்தை காணமுடியாதுள்ளது. ஏனெனில் நாடு பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளது. அதன் பாரதூரத்தினை மக்கள் அனுபவிக்கின்றனர். பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இன்னும் தீவிரமடையவுள்ளது. நாடு சந்திக்கவுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாம் ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தோம். 

எனவே அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. ஆகவே அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. எதர்வரும் மே தினத்திலிருந்து அரசாங்கத்திற்கு எதிரான பரந்துபட்ட போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். அவ்வாறு செய்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பாவிடத்து எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு நாட்டில் எதுவும் எஞ்சியிருக்காத துர்ப்பாக்கியம் ஏற்பட்டு விடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.