(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்த தேவையும் இல்லை. அவ்வாறு இருக்குமாக இருந்தால் பொதுத் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்திருப்பார் என தேச விடுதலை மக்கள் கட்சியின் பேச்சாளர் கலகம தம்மரங்ச தேரர் தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கைலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

எதிர்வரும் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு கட்சி ஆதரவாளர்கள் ஒன்றுபடவேண்டும்  என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஆனால் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கான எந்த தேவையும் இல்லை. ஏனெனில் கடந்த பொதுத்தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கப்போவதில்லையென பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.

அத்துடன் தலைமைத்துவத்துக்கு பொருத்தமான பேச்சுக்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து வருவதில்லை. அவர் சொல்வதை செய்வதில்லை. அதேபோன்று செய்வதை சொல்வதும் இல்லை. இது தலைமைத்துவத்துக்கு பொருத்தமில்லாத விடயமாகும். அத்துடன் அவர் மேற்கத்தியவாதிகளின் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றார் என்றார்.