யுத்தக் குற்றங்கள் எவையும் இழைக்கப்படவில்லை அதனால் யுத்தக் குற்ற விசாரணைகளும் தேவையில்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று தெரிவித்துள்ளார்.

அவ்வாறான யுத்தக் குற்ற விசாரணைகள் என்கின்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளினால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் யார் விசாரணைகளை மேற்கொள்வது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

வடக்கிற்கு இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்தின இன்று காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலி விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அச் சந்திப்பின் முடிவில் ஊடகவியியலாளர்களுக்கு  அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் போது போர்க்குற்ற விசாரணையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த ஊடகவியியலாளர்களால் எழுப்பப்ட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலையே ராஜித சேனாரத்தின மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை அவ்வாறு குற்றங்கள் இடம்பெற்றதென்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையினால் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் தேவையற்றது. இருந்தும் யுத்தக் குற்ற விசாரணைகள் என்கின்ற போது புலிகளின் குற்றங்களை விசாரிப்பது யார் என்றும் அவர்களில் யாரை விசாரிப்பது அவர்களின் தலைவர்கள் இருக்கின்றனரா என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.

மேலும் புலிகளின் ஊடக இணைப்பாளராக முன்னர் இருந்த தயாமாஸ்ரர் அருகில் இருக்கின்றார். ஆகவே நாம் யாரை யார் விசாரிப்பதென்பதற்கப்பால் இந்த நாட்டில் மீளவும் கடந்த கால நிலைமைகள் ஏற்படாத வகையில் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழக்கூடிய வகையில் அரசியற் தீர்வொன்றை முன்வைக்கவும் அதிகாரங்களைப் பகிரவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

மேலும் இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் தமிழ் இமுஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களுக்கும் இருக்கின்ற வகையிலான தீர்வொன்றையும் உருவாக்க இருக்கின்றோம். அத்தோடு மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்த வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.