"நான் எழுத்தாளராக பிறக்கவில்லை; ஒரு மனுஷியாகத்தான் பிறந்தேன்" - கொழும்பில் 'கம்பன் புகழ்' விருது பெற்ற எழுத்தாளர் சிவசங்கரி

Published By: Nanthini

19 Jun, 2024 | 05:59 PM
image

(மா.உஷாநந்தினி)

படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன் 

"நான் எழுத்தாளராக பிறக்கவில்லை; ஒரு மனுஷியாகத்தான் பிறந்தேன்" என எழுத்தாளர் சிவசங்கரி, கொழும்பு கம்பன் விழாவில் தெரிவித்தார்.

கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் திங்கட்கிழமை (17) மாலை 'கம்பன் விழா 2024' இறுதி நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் உயரிய 'கம்பன் புகழ்' விருதைப் பெற்ற எழுத்தாளர் சிவசங்கரி தொடர்ந்து உரையாற்றுகையில், 

"மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இப்படியொரு நாடு போற்றும் உயரிய விருதை, தனித்தன்மை வாய்ந்த விருதை பெறுவதற்காக என்னை தேர்ந்தெடுத்த ஐயா கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களுக்கும் இலங்கை கம்பன் கழகத்துக்கும் அதன் தலைவருக்கும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

காலத்தை வென்று நிற்பது இலக்கியம். ஆம். நம் சமுதாயத்தில் இருக்கும் நல்லது, கெட்டதை ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி போல் பிரதிபலிப்பது இலக்கியம் என்றால் அதுவும் சரியே. ஆனால், எல்லாவற்றையும் விட, எந்த ஒரு எழுத்து, வாசகருக்கு உள்ளே சென்று, அவரது நெஞ்சத்திலிருந்து சிந்தைக்கு சென்று சுழன்று சுழன்று அவரை மனித நேயத்தோடு ஆக்கபூர்வமாக சிந்திக்க தூண்டுகிறதோ அதுதான் மிகச் சிறந்த எழுத்து.

இதில் மனித நேயத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தில் நான் பேசியபோது,

'சிவசங்கரி என்கிற எழுத்தாளரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் சிவசங்கரி என்கிற மனுஷியை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்' என்றேன்.

அதற்கு நைஜீரியா எழுத்தாளர், 'சிவா இரண்டும் ஒன்றுதானே, நீங்கள் குழப்பிக்கொள்கிறீர்கள்' என்றார்.

நான் சொன்னேன்... 'இல்லை.'

நான் எழுத்தாளராக பிறக்கவில்லை நண்பர்களே! நான் ஒரு மனுஷியாகத்தான் பிறந்தேன். நான் தவழ்ந்தது, நடந்தது, பள்ளிக்குச் சென்றது, திருமணம் செய்தது... இப்படி பல பருவங்கள், பல அனுபவங்கள் எனக்குண்டு... இவை ஒவ்வொன்றையும் அழகான முத்துக்கள் என வைத்துக்கொண்டால், அந்த முத்துக்கள் தனித்தனியாக இருந்தால் அதில் பயனில்லை. அத்தனை முத்துக்களையும் மெல்லிய நூலால் ஓடி, அதை மாலையாக்கி அணிந்துகொள்ளும்படி அர்த்தமுள்ளதாக்குகிறதே, அந்த நூல்தான் மனிதம். மனித நேயம்.

நாம் மனிதர்களாக பிறந்தோம். மனிதர்களாக வாழ வேண்டும். மனிதர்களாகவே இறக்க வேண்டும்.

'சிவசங்கரியா... அவர் சிறந்த எழுத்தாளர். ஆனால், மோசமான மனுஷி' என்ற பெயரை வாங்கினால் நான் பிறந்ததற்கே அர்த்தமில்லை. ஆகவே, மனித நேயம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

நாற்பது வருடங்களுக்கு முன்பே நான் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தேன்... 'சிவசங்கரி என்ற எழுத்தாளரின் எழுத்துக்கள் சிவசங்கரி என்ற மனுஷியின் நிம்மதியை, அமைதியை சிதைக்குமானால், அன்றைக்கு பேனாவை நான் மூடி வைப்பேன்' என்று. ஆக, மனித நேயம், மனித மதிப்புகள் மிக அவசியம்.

எந்த துறையானாலும், எந்த பணியில் ஈடுபட்டாலும் பல இடங்களில் சீரழிவுகள் ஏற்பட காரணம் என்னவென்றால், மனித நேயம், மனித மதிப்புகளை தட்டிவிட்டு, அவரவர் துறைக்கான  எண்ணங்களை கொண்டிருக்கிறார்கள். professionalism தலைதூக்கிவிட்டது.

நாம் விழிப்புணர்வோடு இருந்தால், நம் குழந்தைகளுக்கு நாம் முன்னுதாரணமாக இருப்போம். நாம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும். இன்று எனக்கு கிடைத்திருக்கும் விருது என் வாழ்க்கையின் அர்த்தத்தை கூட்டியிருக்கிறது. நான் செய்யவேண்டிய பொறுப்புகளை நினைவூட்டியிருக்கிறது. என் வாழ்க்கையின் மதிப்புகளை மீண்டும் நினைவூட்டியிருக்கிறது.

நண்பர்களே, நம்மால் அனுமன் போல் விஸ்வரூபம் எடுத்து, பெரிய சாதனைகளை செய்ய முடியாது. ஆனால், ஓர் அணில் சமுத்திரத்தில் குதித்து, மணலில் புரண்டு, அந்த மணலை சேற்றுப் பாலத்தில் உதிரி, தன் பங்குக்கு ஒரு சிறு உதவியை செய்தது. அதே மாதிரி, என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்காமல், நாம் ஒவ்வொருவரும் அந்த அணில் போல் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தால் நிச்சயமாக நாம், நம் குடும்பம், நம் பிள்ளைகள், நம் ஊர், நம் நாடு, உலகம், பிரபஞ்சம் நலமாக இருக்கும்" என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25
news-image

திருமண தடையை அகற்றி, மங்கல்ய யோகம்...

2024-11-15 16:38:08
news-image

இழப்பிலிருந்தே படைப்பு பீறிட்டுக் கிளம்புகிறது! –...

2024-11-06 05:11:38
news-image

கந்தன் துணை : கந்த சஷ்டி...

2024-11-02 13:18:19
news-image

தமிழர்கள் என்பதால் நாம் தமிழ் இலக்கியங்களோடு...

2024-07-15 11:23:10
news-image

யாழ். வட்டுக்கோட்டை சிவபூமி தேவார மடம் ...

2024-07-15 11:57:52