(மா.உஷாநந்தினி)
"பசித்த குரல், பசியால் பரிதவிக்கவிடப்பட்ட ஒற்றைக் குரல் இந்த உலகத்தில் எங்கும் கேட்காமலிருக்க சமத்துவம், மானுடம், உலகளாவிய தன்மை, ஒற்றுமை, ஓர்மை, அறம், ஒழுக்கம் தேவை. இவை இருந்தால் இந்த உலகில் போர்களே இருக்காது" என தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில், கொழும்பு கம்பன் விழா 2024 நிறைவு நாளான திங்கட்கிழமை (17) 'கம்ப ஆடியில் கண்டனம் இவர்களை' என்கிற பொருளில் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் தலைமையில் சிந்தனை அரங்கு நடைபெற்றது.
இதில் கம்ப ஆடியில் கண்டனம் 'பாரதியை' என ந.விஜயசுந்தரமும், 'ஒளவையாரை' என இரா.மாதுவும் (தமிழ்நாடு), 'சேக்கிழாரை' என ஆறு. திருமுருகனும், 'இளங்கோவை' என ஸ்ரீ. பிரசாந்தனும், 'வள்ளுவரை' என பர்வீன் சுல்தானாவும் (தமிழ்நாடு) உரையாற்றினர்.
பேச்சாளர்களின் கருத்துக்களை தொடர்ந்து தீர்ப்பளிக்கும் தருணத்திலேயே பாரதி கிருஷ்ணகுமார் இப்பொதுவுடமை சிந்தனையை அரங்கில் முன்வைத்தார்.
"எனக்கு இந்த கணம் நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவு பகைமை, வேற்றுமை இருந்தாலும் தமிழை யாராலும் அழிக்க முடியாது. ஒருவேளை அதை தமிழன் அழிப்பானே தவிர.... அந்த பெருமையை தமிழன் வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டான். நீங்கள் தமிழை காப்பாற்றுவீர்கள்...
ஐவர் பேசிய பேச்சிலிருந்தும் சாராம்சமாக ஒவ்வொரு சொல்லை எடுத்திருக்கிறேன். கம்பனையும் பாரதியையும் ஒப்பிட்ட ஆடியில் விஜயசுந்தரம் சமத்துவத்தை பேசினார். ஒளவையையும் கம்பனையும் ஒப்பிட்ட ஆடியில் மாது மானுடத்தை எடுத்துச் சொன்னார். சேக்கிரையும் கம்பனையும் ஒப்பிட்ட ஆடியில் ஆறு.திருமுருகன் உலகளாவிய தன்மையை எடுத்தார். இளங்கோவையும் கம்பனையும் ஒப்பிட்ட ஆடியில் பிரசாந்தன் ஒற்றுமையை எடுத்தார். வள்ளுவனையும் கம்பனையும் ஒப்பிட்ட ஆடியில் பர்வீன் சுல்தானா அறத்தையும் ஒழுக்கத்தையும் எடுத்தார். இந்த ஐந்தும் இன்றைக்கு மானுட குலத்துக்கு தேவையானது.
சமத்துவமும் மானுடமும் உலகளாவிய தன்மையும் ஒற்றுமையும் அறமும் ஒழுக்கமும் இருந்தால் இந்த உலகில் போர்கள் இருக்காது.
கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்று எனக்கு தெரியும். உறவுகளையும் உற்றத்தையும் சுற்றத்தையும் பிரிந்தவர்களின் கண்ணீரினால் கடல் நீர் உப்பாகியிருக்கிறது. உடம்பில் ஓட வேண்டிய இரத்தம் வீதியில் ஓடக்கூடாது. ஓடவே கூடாது.
எங்கும் உலகத்தில் எந்த இடத்திலும் பழந்தமிழ் இலக்கியங்களைத்தான் இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று பலர் சொல்லக்கூடும். இல்லை. பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து இன்றைய வாழ்வை எப்படி வாழ்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
தற்போது உக்ரைனில் போர் நடக்கிறது. ஒரு கிராமம் தரைமட்டமாகிவிட்டது. இங்கே அதை காட்சிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், உங்களுக்கு அதைப் பற்றி நன்றாகத் தெரியும். அதைக் கண்டவர்கள் நீங்கள்.
நேற்று உயிர்ப்போடு இருந்தவன், நேற்று எல்லோருடனும் பேசி இன்புற்று இருந்தவன் இன்றைக்கு இல்லை. ஒருவரும் இல்லை. பலர் இறந்துபோனார்கள். பலர் இடம் விட்டு அகன்று போனார்கள்.
இந்த உக்ரைன் போர் இடிபாடுகளை ஒரு மானுட மேன்மையுள்ள ஒரு கலைஞன் புகைப்படம் எடுத்துக்கொண்டே போகிறான். அவனது நோக்கம் போரின் தீமையை உலகுக்கு சொல்வதே தவிர, போரின் துன்பத்தை காட்சிப்படுத்தி காசு பார்ப்பது அல்ல. அந்த தீமையை காட்சிப்படுத்துவதன் வழியாக மக்களை மேன்மைப்படுத்த விரும்புகிறான். புகைப்படம் எடுத்துக்கொண்டே போகிறான்.
புழுதி பறக்கிற, மனிதர்கள் யாருமே இல்லாத, தரைமட்டமாகிவிட்ட அந்த ஊருக்குள் போகிறபோது அழுகுரல் கேட்கிறது. தேடிப் பார்க்கிறான். அழுகுரல் தொடர்ந்து கேட்கிறது. அக்குரலை தேடிப்போய் கண்டடைகிறான்.
அழுக்காக, துணியெல்லாம் கிழிந்து, தலை கலைந்து, உடம்பெல்லாம் தூசியும் மண்ணுமாய் ஒரு பத்து வயது பெண்குழந்தை நிற்கிறாள். அவன் பத்தடி தூரத்தில் அவளை பார்க்கிறான்.
அவனை பார்த்ததும் குழந்தை மேலும் அச்சத்தில் அழுகிறாள். அவளை நெருங்க அஞ்சி, பத்தடி தூரத்தில் நின்று குழந்தையை பார்த்து கேட்கிறான், "நீ உக்ரைனா, ரஷ்யாவா" என்று.
குழந்தை பதில் சொல்லாமல் இன்னும் உரக்க அழுகிறது. அவனுக்கு மனக் குழப்பமாகிவிட்டது. ஆழ்ந்து யோசிக்கிறான்.
'ஒருவேளை குழந்தை உக்ரைனியராக இருந்து, என்னை ரஷ்யனாக கருதியதாலோ அல்லது குழந்தை ரஷ்யராக இருந்து, என்னை உக்ரைனியராக கருதியதாலோ, பயத்தில் குழந்தை பதில் சொல்லாமல் இருக்கலாம். எனவே, பதில் சொல்ல முடியாத கேள்வியை குழந்தையிடம் கேட்டது நம் பிழை' என்று கருதினான்.
ஆனாலும், அந்த குழந்தையிடம் எப்படியாவது பேசி, அவள் கண்ணீரை துடைக்க வேண்டும் என்ற ஆசையில் கொஞ்சம் குழந்தையின் பக்கத்தில் சென்று, அவளுக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமான ஒரு கேள்வியை கேட்கலாமே என்று கேட்டான்... "நீ கிறிஸ்தவரா, முஸ்லிமா" என்று.
ஏனென்றால், அந்த மண்ணில், அந்த குழந்தை ஒன்றில் கிறிஸ்தவ குழந்தையாக இருக்க வேண்டும் அல்லது இஸ்லாமிய குழந்தையாக இருக்க வேண்டுமல்லவா!
ஆனால், இப்போதும் குழந்தை அழுகிறது.
'உன் நாடு எது' என்று கேட்டபோது குழந்தை பதில் சொல்லவில்லை. 'உன் கடவுள் எது' என்று கேட்டபோதும் குழந்தை பதில் சொல்லவில்லை. 'என்னதான் நீ சொல்வாய்' என்ற பரிதவிப்போடும் கண்ணீரோடும் குழந்தையை நோக்கிப் போனான்.
இப்போது மீண்டும் கேட்டான். "தயவு செய்து சொல்... நீ ரஷ்யரா அல்லது உக்ரேனியரா, கிறிஸ்தவரா அல்லது முஸ்லிமா? தயவு செய்து சொல்" என்று.
அதற்கு குழந்தை சொன்னாள்... "எனக்கு பசிக்கிறது" என்று.
இந்த பசித்த குரல், பசியால் பரிதவிக்கவிடப்பட்ட ஒற்றைக் குரல் இந்த உலகத்தில் எங்கும் கேட்காமல் இருப்பதற்காகத்தான் சமத்துவம், மானுடம், உலகளாவிய தன்மை, ஒற்றுமை, ஓர்மை, அறம், ஒழுக்கம் வேண்டும்" என்று தீர்ப்பு வழங்கியபோது சபையில் ஒட்டுமொத்த முகங்களும் சுருங்கிப்போயின.
இவற்றையும் பார்க்க...
கம்பன் விழா 2024 - கோலாகல ஆரம்பம்
விருது வழங்கலும் முடிவுக்கு வராத வழக்கும் : கம்பன் விழா நிறைவு நாள் நிகழ்வுகள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM