தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் போராட்ட அமைப்புகள் பிளவுபட்டு நின்று எமது இலக்கை அடைய முடியாது என்பதை உணர்ந்துகொண்ட இடதுசாரி ஜனநாயகத்தின்மீது பற்றுக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் க.பத்மநாபா அவைகள் மத்தியில் ஒரு ஐக்கியத்தை உருவாக்குவதற்காக கடும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் அடைந்தார். என ஈழமக்கள் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது ,
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தோற்றுவித்தவர்கள் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளாக இருப்பினும் அன்றைய பூகோள அரசியல் சூழலில் அதற்கு எண்ணெய் ஊற்றி இனவாதத் தீயை அணையாமல் பார்த்துக்கொண்டது ஏகாதிபத்திய சக்திகள் என்பதை சரியாக இனங்கண்டு ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான புரட்சிகர அமைப்புகளுடன் கரம்கோர்த்து ஈழ மக்களின் நண்பர்களையும் எதிரிகளையும் சரியாக அடையாளம் காட்டினார். அதன் காரணமாகவே ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சிகளால் ஐக்கியம் சிதைக்கப்பட்டு, எது தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று தஞ்சம் அடைந்தோமோ அதே தமிழகத்தில் எமது செயலாளர் நாயகத்துடன் பதின்மூன்று தோழர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதன் விளைவே எமது செயலாளர் நாயகத்தின் மறைவிற்குக் காரணமாக அமைந்தது.
ஆயுதப் போராட்ட எழுச்சியின் விளைவே இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஏற்படுவதற்கும் மாகாணசபை உருவாகுவதற்கும் காரணமாக அமைந்தது. மாகாணசபை முறைமையை எப்படியாவது சீர்குலைத்துவிடவேண்டும் என்பதில் சிங்கள பௌத்த பேரினவாதமும் ஏகாதிபத்திய சக்திகளும் கங்கனம் கட்டி செயற்பட்டன. இதன் பின்விளைவுகளை எமது சமூகம் நன்கு அனுபவித்துள்ளது.
அவருடைய திசைவழியில் நின்று தொலைநோக்குச் சிந்தனையுடன் இன்று எமது உரிமைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் ஜனநாயகத்தின் ஊடாக எமது உரிமைகளை அடைவதற்கான சூழலை ஏற்படுத்த விரும்புகின்றோம். அந்த முயற்சியில் எமது தலைவர் தோழர் க.பிரேமச்சந்திரனின் தொலைநோக்குப் பார்வையில் உருவான ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் என்னும் எண்ணகரு மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துவரும் நிலையில் அதனைக் குழப்புவதற்கு தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் எமது மக்கள் தலைவர்களும் கரம்கோர்த்திருப்பது வேதனையளிக்கிறது.
இன்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கையின்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் தென்பகுதி ஜனாதிபதி வேட்பாளர்கள் நாட்கணக்கில் வடக்கில் தங்கியிருந்து தமது பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கும் தமிழ் பொதுவேட்பாளர் எண்ணக்கருவும் ஒரு காரணம் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ள நிலையில் அதனை வலுப்படுத்துவதற்கு அனைத்து அரசியல் தலைமைகளும் இதயசுத்தியுடன் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றோம்.
மக்களை வழிநடத்த வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு பொதுவான வேலைத்திட்டத்தின்கீழ் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இன்றைய அரசியல் சூழல் ஏற்படுத்தியுள்ளது. முப்பத்து நான்காவது தியாகிகள் தினத்திலும் தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியிலும் பொதுஅமைப்புகள் மத்தியிலும் இதயசுத்தியுடனான ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பற்றுறுதியுடன் ஈடுபட்டு வருகின்றது.
எமது பாசமிகு தோழனும் நேசமிகு ஆசானுமான தோழர் பத்மநாவின் கூற்றுக்கு அமைய ஐக்கியம் என்னும் தளத்தில் நின்று இறுதி வெற்றிவரை உறுதியுடன் போராடுவோம் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 34ஆவது தியாகிகள் தினத்தில் உறுதியளிக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM