விருது வழங்கலும் முடிவுக்கு வராத வழக்கும் : கம்பன் விழா நிறைவு நாள் நிகழ்வுகள் 

Published By: Nanthini

20 Jun, 2024 | 02:08 PM
image

(மா.உஷாநந்தினி)

படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்

லங்கை மண்ணில் கம்பனின் புகழ் பரப்பும் கம்பன் விழா 2024 அகில இலங்கை கம்பன் கழகத்தினது கொழும்பு கிளை கழகத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை ( 17) மாலை வேளை நிகழ்வோடு இனிதே நிறைவடைந்தது.

கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமான கம்பன் விழா, 15, 16, 17 ஆகிய தினங்களில் காலை 9.30 மணி மற்றும் மாலை 5.30 மணி ஆகிய இரு வேளையும் நாட்டிய அரங்கு, விவாத அரங்கு, கவியரங்கு, நாடக அரங்கு, கருத்தரங்கு, பட்டி மண்டபம், சிந்தனை அரங்கு, வழக்காடு மன்றம், விருது வழங்கல், சான்றோர் கெளரவம் என பல்வேறு நிகழ்வுகளை தாங்கியிருந்தது.

கம்பன் விழா - இறுதி நாள் நிகழ்வுகள்

17.06.2024 திங்கட்கிழமை - காலை நிகழ்வு

திங்கட்கிழமை (17) காலை நிகழ்வினை ரவி ஜுவலர்ஸ் அதிபர் ஆர். மகேஸ்வரன் தம்பதியர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்துவைக்க, நிவாஷினி சக்திவேல் கடவுள் வாழ்த்து பாடினார்.

அடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையுரை ஆற்றினார்.

பின்னர், ஏசியான், தெற்காசியா - ஸ்டான்டட் அன்ட் சார்ட்டட் வங்கியின் பிராந்தியத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான வி. மகாலிங்கம் தொடக்கவுரை ஆற்றினார்.

'தன்னையே தொழுதவன்'

அவரையடுத்து, இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் (தமிழ்நாடு) 'தன்னையே தொழுதவன்' என்ற தலைப்பில் கம்ப இராமாயணத்தில் வரும் பரதன் கதாபாத்திரத்தின் பெரும் குணங்களை எடுத்துரைத்தார்.

இராமாயணத்திலேயே தன்னை ஈர்த்த கதாபாத்திரம் பரதனே என வீரகேசரிக்கு அளித்த பேட்டியிலும் பகிர்ந்துகொண்ட த. இராமலிங்கம், "கம்பனை நயம் பார்க்க நிறைய விடயங்கள் உள்ளன. ஆனால், வாழ்க்கைக்கு தேவையான செய்திகள் அங்கங்கே கிடக்கின்றன. வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய பாத்திரமாகவே வாழ்ந்தவன் பரதன். 'எனக்கு உரிமையில்லாத பதவி எனக்கு வேண்டாம்' என்று தன்னைத் தேடி வந்த பதவியை வேண்டாமென்று தர்க்கம் செய்தவன். அந்த பதவியில் இருக்கக்கூடிய சூழ்நிலை வந்தபோதும் கூட பதவியின் சுகம் தன் மீது ஒட்டாமல் இருந்தவன். பதினான்கு வருடங்கள் முடிந்ததும் பதவியை தூக்கிப் போட்டுவிட்டு நான் சாவதற்கு தயார் என்று போனான். தூய்மையிலும் தூய்மையானவன். 'நின்னினும் நல்லவன்' என இராமனிடமே அவனை பெற்ற தாயான கோசலை சொல்லக்கூடிய அளவுக்கு பரதன் உயர்ந்தவன். அதனால் பரதன் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்" என்றார்.

'கம்ப ஆடியில் கண்டனம் இவர்களை...'

தனியுரைக்குப் பின்னர் 'கம்ப ஆடியில் கண்டனம் இவர்களை' என்கிற பொருளில் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் தலைமையில் சிந்தனை அரங்கு இடம்பெற்றது.

இதில் கம்ப ஆடியில் கண்டனம் 'பாரதியை' என ந.விஜயசுந்தரமும், 'ஒளவையாரை' என இரா.மாதுவும், 'சேக்கிழாரை' என ஆறு. திருமுருகனும், 'இளங்கோவை' என ஸ்ரீ. பிரசாந்தனும், 'வள்ளுவரை' என பர்வீன் சுல்தானாவும் உரையாற்றினர்.

17.06.2024 திங்கட்கிழமை - மாலை நிகழ்வு

மாலை வேளை (5.30 மணி) நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ராமர், கம்பருக்கான பூஜையை தொடர்ந்து, தாரணி ராஜ்குமார் கடவுள் வாழ்த்து பாடினார்.

பின்னர், தேவி ஜுவலரி அதிபர் என்.எஸ்.வாசு மங்கல விளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்தார்.

அடுத்து, மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையுரையையும், புதுச்சேரி சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து தொடக்கவுரையினையும் ஆற்றினர்.

சான்றோர் விருது

தொடர்ந்து, சமூக நிதி உதவி வழங்கப்பட்டது. அடுத்து, சான்றோர் விருதுகள் ஆறு ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டன. வட மாகாண பிரதம செயலாளர் லட்சுமணன் இளங்கோவனுக்கு 'கம்பவாணர் அ. அருணகிரி' விருது, தமிழறிஞர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸுக்கு 'பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்' விருது, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சண்முகம் ஸ்ரீதரனுக்கு 'கம்பகலாநிதி இரா. இராதாகிருஷ்ணன்' விருது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு 'மகா வித்துவான் சி. கணேசையர்' விருது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு 'கம்பன் அடிப்பொடி சா. கணேசன்' விருது, இலங்கை தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு 'வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை' விருது வழங்கப்பட்டன. இவ்விருதுகளை டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறுவருக்கும் வழங்கி கெளரவித்தார்.

"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" - மஹிந்த தேசப்ரிய

இதன்போது சபையில் கருத்துரைத்த மஹிந்த தேசப்பிரிய, விருதாளர்களோடு இணைந்து தானும் கம்பன் விழாவில் விருது பெற்றதையிட்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக தெரிவித்ததோடு, "கடந்த 30 வருடங்களாக திருமண நிகழ்வுகளிலோ மரணச் சடங்குகளின்போதோ ஜனநாயகத்தை பற்றி குறைந்தது இரண்டு வசனங்களையேனும் பேசுவேன்..." என்றவர், "என் சிறு தமிழறிவுக்கு எட்டியளவில் மூன்று வார்த்தைகளில் கூறுவதானால், 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு'" என்று தமிழ் பழமொழியை சொல்லி இருக்கையில் அமர்ந்தபோது சபையில் கைதட்டல் ஓங்கி ஒலித்தது.

'கம்பன் புகழ்' விருது

இவ்வருடம் தமிழக எழுத்தாளர் சிவசங்கரிக்கு 'கம்பன் புகழ்' விருதினை கொழும்பு கம்பன் கழகத் தலைவர் ஈ. கணேஷ் தெய்வநாயகத்தின் குடும்பத்தினர் வழங்கி கெளரவித்தனர்.

"நான் எழுத்தாளராக பிறக்கவில்லை; ஒரு மனுஷியாகத்தான் பிறந்தேன்" - எழுத்தாளர் சிவசங்கரி

"மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. இப்படியொரு நாடு போற்றும் உயரிய விருதை, தனித்தன்மை வாய்ந்த விருதை பெறுவதற்காக என்னை தேர்ந்தெடுத்த ஐயா கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களுக்கும் இலங்கை கம்பன் கழகத்துக்கும் அதன் தலைவருக்கும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

காலத்தை வென்று நிற்பது இலக்கியம். ஆம். நம் சமுதாயத்தில் இருக்கும் நல்லது, கெட்டதை ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி போல் பிரதிபலிப்பது இலக்கியம் என்றால் அதுவும் சரியே. ஆனால், எல்லாவற்றையும் விட, எந்த ஒரு எழுத்து, வாசகருக்கு உள்ளே சென்று, அவரது நெஞ்சத்திலிருந்து சிந்தைக்கு சென்று சுழன்று சுழன்று அவரை மனித நேயத்தோடு ஆக்கபூர்வமாக சிந்திக்க தூண்டுகிறதோ அதுதான் மிகச் சிறந்த எழுத்து.

இதில் மனித நேயத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தில் நான் பேசியபோது,

சிவசங்கரி என்கிற எழுத்தாளரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் சிவசங்கரி என்கிற மனுஷியை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்த விரும்புகிறேன் என்றேன்.

அதற்கு நைஜீரியா எழுத்தாளர், "சிவா இரண்டும் ஒன்றுதானே, நீங்கள் குழப்பிக்கொள்கிறீர்கள்" என்றார்.

நான் சொன்னேன்... இல்லை. நான் எழுத்தாளராக பிறக்கவில்லை நண்பர்களே! நான் ஒரு மனுஷியாகத்தான் பிறந்தேன். என்னுடைய பல பருவங்கள்... நான் தவழ்ந்தது, நடந்தது, பள்ளி சென்றது, திருமணம் செய்தது... இப்படி பல பருவங்கள், பல அனுபவங்கள்... இவை ஒவ்வொன்றையும் அழகான முத்துக்கள் என வைத்துக்கொண்டால், அந்த முத்துக்கள் தனித்தனியாக இருந்தால் அதில் பயனில்லை. அத்தனை முத்துக்களையும் மெல்லிய நூலால் ஓடி, அதை மாலையாக்கி அணிந்துகொள்ளும்படி அர்த்தமுள்ளதாக்குகிறதே, அந்த நூல்தான் மனிதம். மனித நேயம். நாம் மனிதர்களாக பிறந்தோம். மனிதர்களாக வாழ வேண்டும். மனிதர்களாகவே இறக்க வேண்டும்.

'சிவசங்கரியா... அவர் சிறந்த எழுத்தாளர். ஆனால், மோசமான மனுஷி' என்ற பெயரை வாங்கினால் நான் பிறந்ததற்கே அர்த்தமில்லை. ஆகவே, மனித நேயம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

நாற்பது வருடங்களுக்கு முன்பே நான் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தேன்... 'சிவசங்கரி என்ற எழுத்தாளரின் எழுத்துக்கள் சிவசங்கரி என்ற மனுஷியின் நிம்மதியை, அமைதியை சிதைக்குமானால், அன்றைக்கு பேனாவை நான் மூடி வைப்பேன்.' என்று. ஆக, மனித நேயம், மனித மதிப்புகள் மிக அவசியம்.

எந்த துறையானாலும், எந்த பணியில் ஈடுபட்டாலும் பல இடங்களில் சீரழிவுகள் ஏற்பட காரணம் என்னவென்றால், மனித நேயம், மனித மதிப்புகளை தட்டிவிட்டு, அவரவர் துறைக்கான  எண்ணங்களை கொண்டிருக்கிறார்கள். professionalism தலைதூக்கிவிட்டது. ஏன் இதை சொல்கிறேன் என்றால், நாம் விழிப்புணர்வோடு இருந்தோம் என்றால், நம் குழந்தைகளுக்கு நாம் முன்னுதாரணமாக இருப்போம்.

நாம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும். இன்று எனக்கு கிடைத்திருக்கும் விருது என் வாழ்க்கையின் அர்த்தத்தை கூட்டியிருக்கிறது. நான் செய்யவேண்டிய பொறுப்புகளை நினைவூட்டியிருக்கிறது. என் வாழ்க்கையின் மதிப்புகளை மீண்டும் நினைவூட்டியிருக்கிறது.

நண்பர்களே, நம்மால் அனுமன் போல் விஸ்வரூபம் எடுத்து, பெரிய பெரிய சாதனைகளை செய்ய முடியாது. ஆனால், நம் ஒவ்வொருவராலும் ஒரு அணில் போல், சமுத்திரத்தில் குதித்து, மணலில் புரண்டு, அந்த மணலை சேற்றுப் பாலத்தில் உதிரி, தன் பங்குக்கு ஒரு சிறு உதவியை செய்ததோ அதே போல என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்காமல், நாம் ஒவ்வொருவரும் அந்த அணில் போல் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தால் நிச்சயமாக நாம், நம் குடும்பம், நம் பிள்ளைகள், நம் ஊர், நம் நாடு, உலகம், பிரபஞ்சம் நலமாக இருக்கும்" என தெரிவித்தார்.

வழக்காடு மன்றம் : கலைகட்டிய தர்க்கங்கள்

கம்பன் விழாவின் இறுதி நிகழ்வாக வழக்காடு மன்றம் கலைகட்டியது.

குற்றம் நீக்கி மந்தரையை மீட்டுத் தருக எனும் தலைப்பிலான வழக்கினை வழக்கறிஞர் கே. சுமதி தொடுத்து வாதாட, அதை மறுக்கும் தரப்பில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா எதிர்வாதம் புரிந்தார்.

இருவரது வலிதான வாதங்களுக்கு தீர்ப்பு வழங்கும் நீதி ஆயத்தில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் மற்றும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோர் அமர்ந்தனர்.

வழக்கு தீர்ப்பு

கம்பராமாயண கதாபாத்திரமான மந்தரை என்கிற கூனி 'குற்றமற்றவள்' என கே. சுமதியும், மந்தரை குற்றவாளி என பர்வீன் சுல்தானாவும் இரு வேறு கோணங்களில் வாதிட்டனர்.

இந்த வழக்கில் கூனிக்கு ஒரு மன்னிப்பை அளிக்கலாம் என நீதிமன்றம் நினைக்கிறது. ஆனால், மூன்று குற்றங்கள் சாட்டப்பட்டு ஒரு குற்றம் மட்டும் விசாரிக்கப்பட்ட நிலையில் மந்தரையை விடுதலை செய்வதென்பது முழுமையான நீதியாகாது என்பதால் அடுத்த கம்பன் விழாவில் மற்ற இரண்டு வழக்குகளையும் விசாரித்த பிறகு மந்தரைக்கான தீர்ப்பை சொல்வோம்" என அறிவித்தபோது எதிர்பாராத தீர்ப்பு வழங்கப்பட்டதில் சபையினரிடையே சலசலப்பும் சிரிப்பொலியும் எழுந்தது. நான்கு நாள் கம்பன் விழா பெரும் இலக்கிய விருந்தினை அளித்த திருப்தியோடு சபை கலைந்தது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு நவகம்புர புனித அந்தோனியார் தேவாலய...

2024-07-15 17:31:31
news-image

இந்து மதம் தொடர்பான விபரங்களை பெறுவதற்கான...

2024-07-15 17:33:17
news-image

அடம்படிவெட்டுவான் கண்டத்தில் சிறுபோக அறுவடை விழா

2024-07-15 16:58:53
news-image

அக்கரைப்பற்றில் மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம்...

2024-07-15 16:07:50
news-image

மலேசியா - தேவி ஸ்ரீ காப்பாரூர்...

2024-07-14 21:18:06
news-image

ஏ.கே.எஸ். ஆடையகம் கிரிக்கெட் வீரர் சனத்...

2024-07-13 12:57:19
news-image

தமிழில் தேசிய கீதம் பாடிய திருகோணமலையின்...

2024-07-13 13:42:12
news-image

உலகளாவிய கொந்தளிப்புகளுக்கு மத்தியில், குடிமக்கள் சமாதானத்துக்காக...

2024-07-11 14:32:03
news-image

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை...

2024-07-10 17:48:55
news-image

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப்...

2024-07-10 17:35:11
news-image

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்'...

2024-07-09 17:57:31
news-image

தெஹிவளை - கல்கிசை நகர்புற கடற்கரையை...

2024-07-09 17:58:24