ஆடுகளங்களையோ, போட்டி அட்டவணையையோ குறைகூற - வனிந்து ஹசரங்க மறுக்கிறார்

Published By: Vishnu

17 Jun, 2024 | 08:47 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கையில் தோல்விகளுக்கு அமெரிக்க ஆடுகளங்களையோ போட்டி அட்டவணையையோ இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க குறைகூற மறுத்துள்ளார்.

'நாங்கள் விளையாடிய அதே ஆடுகளங்களில்தான் மற்றைய அணிகளும் விளையாடின. எங்களது விளையாட்டு வியூகங்களை மாற்றிக்கொள்வது எமது கடமை' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரி20 உலகக் கிண்ண போட்டி ஆரம்பமாவதற்கு சுமார் 10 தினங்களுக்கு முன்னர் இலங்கை அணி அமெரிக்கா சென்றடைந்தது. அத்துடன் அங்கு நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இரண்டு பயிற்சிப் போட்டிகளில்  இலங்கை விளையாடியிருந்தது.

ஆனால், அமெரிக்காவில் கொடுக்கப்பட்ட ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக்கொள்ள முடியாமல் போனதாக வனிந்து ஹசரங்க உணர்கிறார்.

துடுப்பாட்டத்தில் திடீர் சரிவு கண்டதால் இலங்கையின் உலகக் கிண்ண முயற்சி சிதைக்கப்பட்டது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நியூயோர்க் நசவ் கவுன்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் இலங்கை 77 ஓட்டங்களை மாத்தரமே பெற்றது.

அதனைத் தொடர்ந்து பங்களாதேஷுக்கு எதிராக டல்லாஸில் நடைபெற்ற போட்டியில் இலங்கை 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை எடுத்தது. ஆனால், டெத் ஓவர்களை வீசுவதற்கு முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாமல் போனதால் இலங்கை தோல்வியைத் தழுவியது.

நேபாளத்துடனான ஆட்டம் மழையினால் முழுமையாகக் கைவிடப்பட்டதும் இலங்கையின் சுப்பர் 8 சுற்று கனவு சிதறிப்போனது.

ஒருவாறு நெதர்லாந்துடனான போட்டியில் 83 ஓட்டங்களால் வெற்றிபெற்று இலங்கை ஆறுதல் அடைந்தது. அல்லது வெறுங்கையுடன் நாடு திரும்ப நேரிட்டிருக்கும்.

இந்த உலகக் கிண்ண போட்டியின்போது நெடுந்தூரம் பயணம் செய்ய நேரிட்டமை, நான்கு மைதானங்களில் விளையாட நெரிட்டமை உட்பட இலங்கை எதிர்கொண்ட அசௌகரியங்கள் பற்றி கூறப்பட்டது. ஆனால், அவற்றை எல்லாம் புறந்தள்ளி வைத்த ஹசரங்க, அணியின் வெளியேற்றத்திற்கு அணிதான் பொறுப்பு என்றார்.

'ஒரு போட்டியில் தோல்வி அடையும்போது ஆடுகளங்கள் மற்றும் பிற விடயங்களைக் குறை கூறலாம், ஆனால் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாக, அது சரியல்ல' என்றார் அவர்.

'மற்றைய அணிகளும் அதே ஆடுகளத்தில்தான் விளையாடின. நாங்கள் விளையாடும் முறையை மாற்றுவது எங்களது கடமையாகும்.. நாங்கள் ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நாங்கள் தேவையான மாற்றங்களைக் கடைப்பிடிக்கவில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. அதுதான் எமது பிரதான குறைபாடு' என அவர் மேலும் தெரிவித்தார்.

பயிற்சிப் போட்டிகளுக்கு முன்னர் நொர்த் கரோலினாவில் சிறிய பயிற்சி முகாமில் இலங்கை ஈடபட்டது. ஆனால் அது போதுமானதாக அமையவில்லை என்பதே ஹசரங்காவின் கூற்றாகும்.

'எங்களை பத்து தினங்களுக்கு முன்னர் இங்கு அழைத்துவந்து பயிற்சிகளில் ஈடுபட ஏற்பாடு செய்த கிரிக்கெட் சபைக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். அது ஒரு பெரிய விடயம். நிலைமைகள், காலநிலை, நேர மாற்றம் ஆகியவற்றுக்கு எங்களைப் பழக்கப்படுத்திக்கொள்வது முக்கியம்.

'என்றாலும், நாங்கள் அமெரிக்காவில் ஒரு பிராந்தியத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றபோது, ஆடுகளங்கள் ஒரே தன்மையாக இருக்கவில்லை. சில நாடுகளில் ஆடுகளங்கள் இடத்திற்கு இடம் ஒரே மாதிரியாக இருக்கின்றபோதிலும் அமெரிக்காவில் அப்படி இல்லை.

'நாங்கள் எங்களால் முடிந்தவரை எங்களை மாற்றிக்கொள்ள முயற்சித்தோம். துரதிர்ஷ்டவசமாக நியூயோர்க்கில் எங்களது முதல் போட்டி அமைந்தது. அது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இரண்டாவது போட்டிக்காக நாங்கள் டலாஸுக்குச் சென்றோம், அந்த ஆடுகளத்துக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ளவில்லை. அணி என்ற வகையிலும் அணித் தலைவர் என்ற வகை யிலும்   அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்கவேண்டும்' என வனிந்து ஹசரங்க மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக்...

2026-07-15 09:45:43
news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19
news-image

சாத்தியமான நான்கு உலகக் கிண்ண இறுதிப்...

2026-07-14 20:47:02
news-image

லங்கா பிறீமியர் லீக் 2026 போட்டிகளை...

2026-07-14 13:40:15
news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10
news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29