21 ஆம் நூற்றாண்டில் கல்வியானது சர்வதேச ரீதியில் பல்வேறு மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றது. நம் இலங்கை நாட்டிலுள்ள கல்விமுறையிலும் இவ்வாறான மாற்றங்கள் துரிதமான கல்வி வளர்ச்சிக்கு உதவுகின்றன. இருப்பினும் ஏனைய நாடுகளில் இல்லாத அளவிற்கு இலங்கையில் ஒரு புதுமை என்னவென்றால் மாணவர்களின் திறமையை வெளிக்கொணர நடாத்தப்படும் பரீட்சைகளின் பெறுபேறுகளானது, பெற்றோரின் கௌரவத்திற்கான பெறுபேறாகவும், வியாபார நோக்கில் இலாபம் ஈட்டும் தொழிலாகவும் உள்ள பரீட்சை மையக் கல்வியில் “பிரத்தியேக வகுப்புகள்” பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளமையேயாகும். உண்மையில் பிரத்தியேக வகுப்பென்பது மாணவர்களின் அறிவு, திறன், ஆளுமை என்பவற்றை விருத்தி செய்வதாகவே அமைய வேண்டும், ஆனால் இன்று அவ்வாறான சூழல் இல்லை. இத்தகைய கல்விமுறை எந்த அளவிற்கு சமூகத்திற்கு பொருத்தமானதாகவும், மாணவர்களிடையே எவ்வாறான சாதக, பாதகத்தன்மையை தோற்றுவிக்கின்றது என்பதை இக்கட்டுரை விமர்சன ரீதியாக ஆராய்கிறது.
இன்றைய அவசர உலகில் மாணவர்களும், பெற்றோர்களும் பாடசாலை கல்வியிலும் பார்க்க பிரத்தியேக வகுப்புக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இலங்கை கல்வி முறையில் காணப்படுகின்ற மூன்று தேசிய பரீட்சைகளாகும். இப்பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோரையும் பிள்ளைகளையும் ஏமாற்றி பணம் பறிக்கும் வியாபாரிகள் எம் மத்தியில் ஆசிரியர்களாக வேடமிட்டுள்ளனர். முதலில் ஒரு பிள்ளை தன், பிள்ளைப் பருவத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் 10 வயதில்இ தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்கொள்ள நேரிடுகின்றது. இப்பரீட்சை சிறுபிள்ளைகளின் உளவியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது, மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனாலேயே அரசு புலமைப் பரிசில் பரீட்சைக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை குறைப்பதற்காக பல்வேறு நுட்பங்களை கையாண்டுள்ளது. இதில் குறிப்பாக “70 புள்ளிகளுக்கு மேல் பெற்றால் அவர்கள் தேர்ச்சி அடைந்தவர்களாக கருதப்படுவர் என்றும் மாணவர்களும் பெற்றோரும் விரும்பினால் மட்டும் குறித்த பரீட்சையை எழுதலாம்” எனவும் முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் சட்டபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு பிள்ளை தன்னுடைய பத்து வயதில் சகபாடிகளுடன் ஆடிப்பாடி விளையாடுவதே அப்பிள்ளையிடம் சீரான விருத்தியை ஏற்படுத்துகின்றது. ஆனால் இன்று பாடசாலை முடிவடைந்ததும் பல மணி நேரம் பிரத்தியேக வகுப்பிற்குச் செல்கின்றனர். பிரத்தியேக வகுப்புக்களில் காணப்படும் போட்டி மற்றும் பணம் ஈட்டும் நோக்கம் என்பன பெற்றோர்களிடையே போட்டியை ஏற்படுத்துகின்றது. இந்த போட்டியின் விளைவாக தமது பிள்ளை இந்த ஆசிரியரிடம் கற்றால்தான் பரீட்சையில் சித்தியடையும் அதுவே கௌரவம் என்ற மனநிலையினை பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இவை அந்தப் பிள்ளையிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. பிரத்தியேக வகுப்புகளில் கற்பிக்கின்ற பல ஆசிரியர்கள் பாடசாலைகளிலும் கற்பிக்கின்றனர். ஆனால் பிரத்தியேக வகுப்புகளில் கற்பிக்கும் போது அவர்கள் காட்டுகின்ற ஆர்வத்தை பாடசாலைகளில் காண்பிப்பதில்லை இது அவர்களிடம் காணப்படுகின்ற பணத்தின் மீதான மோகத்தையே எடுத்துக்காட்டுகின்றது. இப்பரீட்சை பெறுபேறானது பின்தங்கிய பாடசாலைகளில் கற்கின்ற திறமையான மாணவர்களுக்கு நகர்ப்புற பாடசாலைகளிலும்இ தேசிய பாடசாலைகளிலும் இடைநிலை கல்வி கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் 10 வயதில் ஒரு பிள்ளையின் நுண்ணறிவு விருத்தியடைய ஆரம்பிப்பதனால் அதனை அளவீடு செய்வதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அந்த நோக்கம் முற்றிலும் மாறி ஒரு போட்டிப் பரீட்சைக்கு கொடுக்கின்ற அதே முக்கியத்துவம் இப்பரீட்சைக்கும் வழங்கப்படுகின்றதென்றால் அது இந்த பிரத்தியேக வகுப்புக்கள் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் கொடுக்கின்ற உயரிய அழுத்தமே காரணமாகும்.
இன்றைய பெற்றோர் மத்தியில் பிரத்தியேக வகுப்பு ஒரு போதை என்றே கூற வேண்டும். அந்த போதையினை உருவாக்குவதற்காக ஒரு பல்தேசிய கம்பெனி எவ்வாறு தன்னுடைய உற்பத்தியை விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்கின்றதோ! அது போலவே பிரத்தியேக வகுப்புகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் தன்னிடம் உள்ள அறிவை அதிக இலாபத்துக்கு விற்பதற்காக விளம்பரம் செய்கின்றனர். பட்டப் படிப்பை முடித்துவிட்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வேலையில்லாத நிலையில் வாழ்கின்ற போது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைகின்ற ஒரு பிள்ளை அடையக்கூடிய தொழில்சார் இலக்குகள் என்று எதுவும் இருக்க முடியாது. ஆனால் இதனை மிகப்பெரிய வெற்றியாக சித்தரிக்கும் ஆசிரியர்கள் பிள்ளைக்கு அறிவை வழங்குவதிலும் பார்க்க அவர்களிடமிருந்து பணத்தை சுரண்டுவதையே நோக்காகக் கொண்டுள்ளனர். இதனால் அப்பிள்ளைக்கு மன அழுத்தமும், தேவையற்ற செலவுமே இலாபமாக கிடைக்கின்றது.
சில பெற்றோர்கள் கேட்கலாம் “என்னுடைய பிள்ளை தேசிய பாடசாலையில் அல்லது நகர்ப்புறப்பாடசாலையில் கற்பதற்கு இப்பரீட்சை உதவி செய்கின்றதே அதனால் இப்பரீட்சைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் என்ன தவறு” என்று, ஆனால் இன்று “கற்றலில் சமவாய்ப்பு”, “எல்லா மாணவர்களும் சமம்”, “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” மற்றும் “1000 பாடசாலை நிகழ்ச்சித்திட்டம்” போன்ற திட்டங்கள் அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படுத்தப்படுகின்றது. இதனால் அனைத்து பாடசாலைகளிலும் வளங்கள் ஓரளவு சமமாக பகிரப்படுவதுடன், பின் தங்கிய பாடசாலைகளும் சிறந்த கல்விமான்களை உருவாக்குகின்றன. எனவே பிள்ளை எந்த பாடசாலையில் படித்தாலும் தன்னுடைய திறமையால் சிறந்த அடைவைப் பெற்றுக் கொள்ளும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. உயர் அந்தஸ்த்து உள்ளவர்களுக்கு தங்களுடைய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு வழியாகவே இப்பரீட்சை காணப்படுகின்றது. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்கள் அவர்களிடமிருந்து பணத்தை சுரண்டுகின்றனர். இது அன்றாடம் கூலி வேலை செய்து தன்னுடைய பிள்ளையை கற்பிக்கும் பெற்றோர்களையும் அவர்களுடைய பிள்ளைகளையும் பாதிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனையடுத்து பிரத்தியேக வகுப்புக்களின் வலையில் சிக்கிய அடுத்த பரீட்சை முறையாக கா.பொ.த சாதாரண தர பரீட்சையை கூறலாம். இப் பரீட்சையினை மையமாகக் கொண்டு தரம் 6 இல் இருந்தே பிரத்தியேக வகுப்புகளும் ஆரம்பிக்கப்படுகின்றன. பாடசாலையில் தாம் கற்பிக்கின்ற அதே மாணவர்களை பிரத்தியேக வகுப்பிற்கு அழைத்து பணம் பிடுங்கும் செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. பாடசாலையில் ஆறு மணி நேரம் கற்பிக்காத எதை அவர்கள் பிரத்தியேக வகுப்பில் கற்பித்து விடப் போகின்றார்கள் என்பது கேள்விக்குரியதாகும். எனவே இவ்வாறு செயலாற்றும் ஆசிரியர்களின் நோக்கம் கற்பிப்பதல்ல பணம் சம்பாதிப்பதாகும். “நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான்கள் போல….” பார்க்கும் இடமெல்லாம் பிரத்தியேக வகுப்புகளும் அதில் எவ்வித தகுதியும் இல்லாத ஆசிரியர்களும் முளைத்து கொண்டிருக்கின்றனர்.
“யு” சித்தி என்று கூறி வீதிகளில் விளம்பரம் செய்வதும் யாரிடம் கூடுதல் மாணவர்கள் வருவது யார் அதிகம் சம்பாதிப்பது என போட்டி போட்டுக் கொண்டு சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போலி ஆசிரியர்களும் இங்கு ஏராளம். அது மட்டுமா! பிள்ளைகளின் பணத்தை மொத்தமாக சுரண்டுவதற்காக ஒரு ஆசிரியர் பல பாடங்களை கற்பிக்கும் புலமை வாய்ந்தவராக நாடகமாடி தன்னுடைய பணப்பையை நிரப்புவது நகைப்புக்குரியதாகும். மாணவர்கள் பாடசாலை முடிந்ததும் சற்றும் ஒய்வெடுக்க நேரமில்லாமல் அங்கும் இங்கும் பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்று தமது பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பதுடன் உடல், உள ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கின்றனர். பரீட்சை காலங்களில் அதிகாலை வேளையிலும் இரவு வேளையிலும் கற்பிக்கின்றனர். ஆனால் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு அக்கறையில்லை, அதுமட்டுமா! பாடசாலைகளுக்கு போக வேண்டாம் என்று கூறி அவர்களும் பாடசாலைக்கு சுகயீன விடுமுறை எடுத்து பிரத்தியேக வகுப்புகளை நடாத்தி பணம் சம்பாதிக்கும் பலர், பிரபல ஆசிரியர் என தம்மை விளம்பரப்படுத்திக் கொண்டு இன்றும் எம் மத்தியில் உலா வருகின்றனர்.
மேலும் இலங்கையின் பரீட்சை மையக் கல்வியின் முக்கிய மைல்கல்லான கா.பொ.த உயர்தர பரீட்சையானது போட்டிப் பரீட்சையாக இருப்பதால் பிரத்தியேக வகுப்புகளின் தேவை அதிகரிக்கின்றது. இதனால் மாணவர்கள் சாதாரண தர பரீட்சை எழுதியவுடன் உயர்தர பரீட்சை வகுப்புகளும் ஆரம்பமாகின்றன. கல்வியில் சம வாய்ப்பு என்பார்கள் ஆனால் மாணவர்கள் உயர்தரத்தில் எத்துறையை தெரிவு செய்ய வேண்டும் என்பதையே பிரத்தியேக வகுப்புகளே தீர்மானிக்கின்றன. திறமையிருந்தும் விஞ்ஞான துறையை பல மாணவர்கள் தெரிவு செய்ய தயங்குவது அதிகளவு பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்வதற்கு போதியளவு பணம் இல்லை என்பதற்காகவாகும். பொருளாதார ரீதியில் உயர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் மட்டும் பல வகுப்புகளுக்கு சென்று பணத்தை இறைத்து சிறப்பான அடைவினை பெற்றுக் கொள்கின்றனர். இந்த சூழ்நிலையில் வசதி குறைந்த மாணவர்கள் என்ன செய்வது என்பது கேள்விக்குரியதாகும். மாணவர்களில் பலர் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்வதால் பாடசாலை ஆசிரியர்கள் கூட சில வேளைகளில் ஒழுங்காக கற்பித்தலை மேற்கொள்வதில்லை. இந்த நிலையில் அன்றாடம் கூலி வேலை செய்து மூன்று வேளை தன் பிள்ளைக்கு உணவளிக்ககூட கஷ்டப்படும் பெற்றோர்கள் எப்படி இந்த பணமுதலைகளின் வாயை நிரப்ப முடியும்?
ஒரு மணித்தியாலத்துக்கு இவ்வளவு என்று பேரம் பேசும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களின் வரவை அதிகரிப்பதற்காக இரட்டை அர்த்த வார்த்தைகளையும், பாலியல் சார்ந்த வார்த்தைகளையும் வகுப்புகளில் பேசிக்கொள்வதும், மாணவர்களை சுற்றுலாக்கு அழைத்துச் செல்வதும் அவ்வப்போது எம் காதுகளுக்கு செய்திகளாக உலா வருகின்றன. சில ஆசிரியர்கள் தங்களுடைய வகுப்பிற்கு வரும் மாணவர்களின் தொகையை அதிகரிப்பதற்காக அதற்கு முன்னர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் தாமே காரணம் என வெளிப்படுத்தும் வகையில் பாதாகைகளை காட்சிப்படுத்துகின்றனர். இங்கு மாணவர்களின் திறமை, பெற்றோரின் அர்ப்பணிப்பு, பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களுடைய திறமை என்பன வெளிக்கொண்டுவரப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக அனைத்தும் அந்த பிரத்தியேக வகுப்பினை நாடாத்தும் ஆசிரியர்களின் திறமையே என வெளிப்படுத்தும் வகையில் இச்செயற்பாடுகள் காணப்படுகின்றன.
ஒட்டு மொத்தத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் மூன்று தேசிய பரீட்சைகளையும் எதிர்கொள்ளும் மாணவர்களை மையமாகக் கொண்டு தங்களுடைய பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக பல்வேறு நுட்பங்களை கையாண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். எது எவ்வாறாயினும் எல்லா தனியார் வகுப்பு ஆசிரியர்களையும் குற்றம் சொல்லிவிட முடியாது. பெற்றோரும் மாணவர்களும் இது தொடர்பாக சிந்திப்பதே இல்லை தன் பிள்ளை பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சித்தியடைந்தால் போதும் என செயற்படுகின்றனர். பணத்தை நோக்காக கொண்டு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களிடம் தங்களுடைய பிள்ளைகளை அனுப்புவது தொடர்பாக பெற்றோர் மீள்பரிசீலனை செய்து கொள்வது சிறந்ததாக அமையும்.
பல நல்லாசிரியர்கள் தங்களுடைய சமூக அபிவிருத்திக்காகவும் மாணவர்களின் பின்னடைவை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவும் சேவை நோக்கில் இலவசமாக பிரத்தியேக வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் பணி என்பது ஒரு புனிதமான சேவையாக கருதப்படுகின்றது. அத்தகைய சேவையை விற்கும் வியாபாரிகள் மத்தியில் மாணவர்களின் விருத்திக்காக அர்ப்பணிப்புடன் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பாடசாலைகள் பரீட்சையை மையமாகக் கொண்டு கற்பிக்கின்ற போது பிரத்தியேக வகுப்புகளும் அதையே கற்பிக்கின்றன என்றால் பாடசாலைகளின் தேவை எதற்கு? 1946 ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய ஊ.று.று. கன்னங்கரா அவர்களினால் வழங்கப்பட்ட இலவச கல்வி எங்கே? என்ற கேள்வியும் எம் ஆழ்மனதில் எழக்கூடும் அல்லவா! இவ்வாறான கேள்வி நியாயமானதே.
பாடசாலைகள் பரீட்சைக்கு தயார்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளதால் மாணவர்களின் திறன் சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமையளிப்பதில்லை. இக் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் வகையிலான பிரத்தியேக வகுப்புகள் வரவேற்கத்தக்கதாகும். குறிப்பாக இசை, நடனம், சித்திரம் போன்ற அழகியல் திறன்களை மாணவர்களிடம் விருத்தி செய்யும் வகையிலான திறன் விருத்தி வகுப்புகள் அவர்களின் எதிர்காலத்திற்குப் பலம் சேர்ப்பதாக மாறிவிடுகின்றது. அது மட்டுமின்றி யோகாசனம், தியானம், தற்காப்புக்கலை, மென்திறன், விளையாட்டுக்கள் மற்றும் இரண்டாம் மொழி பயிற்சி வகுப்புக்கள் போன்றவை இன்றைய உலகிற்கு பிரத்தியேக வகுப்புகளினால் வழங்ககூடிய சேவைகளாகும். ஒரு பிள்ளையிடம் சில திறன்கள் இயல்பாகவே காணப்படும் அத்திறன்களை தனித்தனியாக அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதை பாடசாலைகள் மேற்கொள்ள தவறிவிடுகின்றன. ஆகையால் இவ்வாறான திறன்களை கற்பிக்கும் பிரத்தியேக வகுப்புக்கள் வரவேற்கத்தக்கதாக இருப்பதுடன் அதனை இலவசமாகவும், சலுகை அடிப்படையிலும் செய்கின்றபோது மேலும் வலுவானதாகவும் சமூகத்தில் சிறப்பானதொரு விளைவுகளை ஏற்படுத்தி மாணவர்களிடையே கல்விச் சமூகமயமாக்கலை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது.
எனவே இன்றைய காலத்தை பொறுத்தவரையில் பாடசாலை கல்வியானது முற்றிலும் சம வாய்ப்பையும், சிறந்த சமூகமயமாக்கலையும் மேம்படுத்துகின்றது. ஆனால் பிரத்தியேக வகுப்புக்கள் அவ்வாறில்லை! இருப்பினும் இன்றைய கல்வியுலகிற்குத் தேவையான மாணவர்களின் திறன் மற்றும் ஆளுமையை மேம்படுத்தும் வகையில் பிரத்தியேக வகுப்புக்கள் மாற்றமடையுமெனில்இ இவை சிறந்த சமூகமயமாக்கலுக்கு உதவக்கூடியதாக அமையும். ஆகவே பாடசாலையில் கற்பிக்கின்ற விடயங்களை பிரேத்தியேக வகுப்புக்களில் கற்பிக்காமல் மாணவர்களின் திறன், ஆளுமைகளை விருத்தி செய்யக்கூடிய சமூகத்திற்கு ஏற்புடைய புதிய பாட நுட்பங்களை கற்பிப்பதன் ஊடாக எமது சமூகத்திற்கும், நாட்டிற்கும் தேவையான செழிப்பான கல்விச் சமூகமயமாக்கலை உருவாக்க முடியும்!!!
தியாகராசா புவிராஜ்
4ஆம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவன்
கல்வி, பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM