(மா. உஷாநந்தினி)
படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்
அகில இலங்கை கம்பன் கழகத்தின் கொழும்பு கிளை கம்பன் கழகம் நடத்தும் 'கம்பன் விழா 2024' கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (14) மாலை 5 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமானது.
இவ்விழா, தொடர்ச்சியாக 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களிலும் காலை 9.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு என இரு வேளை நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.
கம்பன் விழா முதல் நாள் நிகழ்வின் ஆரம்ப கட்டமாக கம்பனின் திருவுருவப்படம் ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோவிலிலிருந்து இராமகிருஷ்ண மண்டபம் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விழா மேடையில் நிறுத்தப்பட்டு, பூஜை நடைபெற்றது.
அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ், தமிழ்நாடு கோவிலூர் ஆதீன கர்த்தர் நாராயண ஞானதேசிக சுவாமிகள், அகில இலங்கை கம்பன் கழக அறக்கட்டளை தலைவர் டாக்டர் கு. ஸ்ரீஇரத்தினகுமார், கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் ஜெ. விஸ்வநாதன், தமிழ்நாட்டின் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், மலேசியாவின் முன்னாள் அமைச்சரும் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினருமான 'டத்தோஸ்ரீ' எம்.சரவணன், புதுச்சேரி சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து, கொழும்பு கம்பன் கழகத் தலைவர் ஈ. கணேஷ் தெய்வநாயகம், பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர், மேமன் கவி, பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.
அவரை தொடர்ந்து கர்நாடக இசைக் கலைஞர் அ. ஆரூரன் கடவுள் வாழ்த்து பாடினார்.
அதனையடுத்து, கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் ஜெ. விஸ்வநாதன் தலைமையுரையும், ஈ.கணேஷ் தெய்வநாயகம் தொடக்கவுரையும், 'டத்தோஸ்ரீ' எம்.சரவணன் சிறப்புரையும் ஆற்றினர்.
நூல் வெளியீடு
கம்பன் அருளிய 'இராமாயணம்' என்கிற இதிகாசம் இரண்டு பாகங்களாக இந்தியாவில் அச்சிடப்பட்டு, 'கம்ப இராமாயணம்' இரண்டு பாகங்களாக விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விரு பாகங்களின் முதல் பிரதிகளையும் இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் நாராயண ஞானதேசிக சுவாமிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
விருதுகள்
கம்பன் விழா முதல் நாள் நிகழ்வில் அறக்கட்டளை விருதுகள் ஐந்து ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டன. அதன்படி, 'சங்கீதபூஷணம்' பொன். ஸ்ரீவாமதேவனுக்கு 'விபுலானந்தர்' விருது, பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவுக்கு 'நுழைபுலம்' ஆய்வு விருது, கவிஞர் மேமன் கவிக்கு 'மகரந்தச் சிறகு' விருது, கிரிக்கெட் வீரர் வி. வியாஸ்காந்துக்கு 'ஏற்றமிகு இளைஞர்' விருது, (தமிழ்நாடு) சிவாலயம் ஜெ. மோகனுக்கு 'நாவலர்' விருது வழங்கப்பட்டன.
இவர்களில் விருதுகளை பெற்றுக்கொள்ள சிவாலயம் ஜெ. மோகன் மற்றும் கிரிக்கெட் வீரர் வியாஸ்காந்த் ஆகிய இருவரும் வருகைதராத நிலையில், அவர்களுக்கான விருதுகளை சிவாலயம் சார்பில் செந்தில்குமாரும், வியாஸ்காந்தின் தாயாரும் பெற்றுக்கொண்டனர்.
விசேட கெளரவம்
அடுத்து, விழா மேடையை அலங்கரித்த நாராயண ஞானதேசிக சுவாமிகள், அபிராமி கைலாசபிள்ளை, 'டத்தோஸ்ரீ' எம்.சரவணன், புதுச்சேரி சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து, கர்நாடக இசைக் கலைஞர் அ.ஆரூரன், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோரும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
காத்திருத்தல் ஒரு தவம்! - பாரதி பாஸ்கரின் எழிலுரை
அடுத்து, அரங்கமே காத்திருக்க, பேச்சாளர் பாரதி பாஸ்கர் 'கம்பனில் காத்திருத்தல்' என்கிற தலைப்பில் எழிலுரை ஆற்றினார்.
"'கம்பனில் காத்திருத்தல்' என்கிற தலைப்பை நான்தான் தேர்ந்தெடுத்தேன். என்ன காரணம்....?!
கம்ப இராமாயணத்தை ஒரே சொல்லில் சொல்ல முடியுமா என்று யாராவது சவால்விட்டால் என்ன சொல்வது?
வள்ளுவத்தை ஒரு சொல்லில் சொல் என்றால் 'அறம்'
மகாபாரதத்தை ஒரு சொல்லில் சொல் என்றால், 'முரண்கள்'. ஒரு அறத்துக்கும் இன்னொரு அறத்துக்குமான முரண்களால் நிரம்பியிருப்பது மகாபாரதம்.
கம்ப இராமாயணத்தை ஒரே சொல்லில் சொல்வதென்றால், 'காத்திருத்தல்கள்' என்றே நான் சொல்வேன்.
கம்பனின் காப்பியத்தினூடாக நீங்கள் பயணம் செய்கிறபோது தொடர்ந்து இதைத்தான் சந்தித்துக்கொண்டேயிருப்பீர்கள்.
எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதே தெரியாமல் காத்திருப்பவர்கள் ஒரு ரகம். அகலிகை அப்படித்தான் காத்திருந்தாள். கல்லாக காத்திருந்தாள். இராமன் பாதம் படும் வரை காத்திருந்தாள்.
அடுத்து, சபரி, இராமன் வருவான் என ஒவ்வொரு நாளும் காத்திருந்தாள். இராமன் வருவான் என மதங்க முனிவர் சபரிக்கு சொல்லி, சபரி காத்திருக்க ஆரம்பித்தபோது இராமன் பிறக்கவேயில்லை.
கெடு வைத்து காத்திருந்தான் பரதன்... இராமனின் வருகையை எதிர்பார்த்து தென்திசையை பார்த்தபடியே பதினான்கு ஆண்டுகளாக காத்திருந்தான்.
கணக்குப் போட்டு காத்திருந்தவள் சூர்ப்பனகை. தனது அண்ணனான இராவணனை பழிவாங்க, சீதை என்கிற பகடையை உருட்டி, அண்ணனை விழவைக்கிற வாய்ப்பு வரும் வரை காத்திருந்தாள்.
காத்திருப்பதே தெரியாமல் காத்திருந்தான் வீடணன்.
காத்திருந்து ஏமாந்துபோன பிறகும் கூட காலம் எனக்கு கொடுத்தது இதுதான் என்று வாங்கிக்கொண்டவள், கோசலை. மகன் இராமன் மணிமகுடத்தோடு வருவான் என்று காத்திருந்தாள். மகன் வந்தான். மணிமகுடம் தலையில் இல்லை. பட்டாபிஷேகம் நடக்கவில்லை என்பதை புரிந்துகொண்டாள். காத்திருந்தது நடக்காமல் போனபோதும் கூட கிடைப்பதை பிரசாதமாக ஏற்றுக்கொண்டாள் கோசலை.
சீதையும் பத்து மாதங்கள் காத்திருந்தாள். காத்திருத்தலுக்கு முன்னிருந்த சீதையல்ல, காத்திருத்தலுக்கு பின்னிருந்த சீதை. பத்து மாத காத்திருப்புக்கு பின்னர், அனுமனுக்கு அறிவுரை சொல்கிற அளவுக்கு சீதை வளர்ந்தாள். இந்த பத்து மாத காத்திருப்பு அவளை அவளது ஆன்மாவை நேசிக்க வைத்தது.
எதற்கெல்லாமோ காத்திருக்கிறோம். நமது தனிப்பட்ட வெற்றிகளுக்காக மாத்திரமல்ல, நம் சமூகத்தின் வெற்றிகளுக்காகவும் காத்திருக்கிறோம். நம் வெற்றிகளுக்காக, நம் வாழ்க்கைக்காக, நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். காத்திருக்கிற நெஞ்சத்தை கடவுள் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நம்பிக்கையை கம்பன்தான் அளித்திருக்கிறார். காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனாலும் காத்திருத்தலே ஒரு தவம் என்றால், கிடைக்கின்ற வரத்தை கை நீட்டி வாங்கிக்கொள்கின்ற மனதையும் கம்பன்தான் கொடுத்திருக்கிறார்.
கம்பனின் கவிகள் நமக்கு எதை தருகிறது என்றால், வாழ்க்கை விரும்பியதை எல்லாம் தருகின்ற ஒரு ரோபோ கிடையாது. விரும்பாததையும் தரும். ஆனால், நமக்கு எது விருப்பமோ அதை நோக்கி இருக்கின்ற மனதை கம்பன் நமக்கு தருகிறார்.
நாம் கருவிகள் மாத்திரம் தான். நாம் காத்திருக்கிறோம். ஆனால், காலத்துக்கு, கால தேவனுக்கு தெரியும், கடவுளுக்கு தெரியும். நம்மை எதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று. எனவே, காத்திருத்தலை பார்த்து அஞ்சாதீர்கள். மயங்காதீர்கள்.
எவ்வளவு காலம்தான் காத்திருப்பது என்று ஏங்கி கண்ணீர் விடாதீர்கள். உங்கள் கணக்கு மேலே இருக்கிற யாரோ ஒருவருடைய கையில் இருக்கிறது. அந்த நாள் வருகிறபோது உங்கள் வாழ்க்கை எதை நோக்கிய பயணம் என்பது அவர்களுக்கு புரியும்.
ஒவ்வொரு காத்திருத்தலும் ஒரு தவம். ஒவ்வொரு காத்திருத்தலும் ஒரு வரம். இதை தமிழ் மண்ணுக்கு சொல்லிய எங்கள் கவி கம்பன் இன்றைக்கு மாத்திரமல்ல, கனவு நனவாகப்போகிற நாளைய உலகத்தில் சந்திர மண்டலத்தில் இருந்தும் கூட நம் பேரன்களும் பேத்திகளும் கம்பனை படித்துக்கொண்டுதான் இருப்பார்கள். நம் நீண்ட காத்திருத்தல் நம் பிள்ளைகளை கம்பனிடம் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையை இந்த நிகழ்வு எனக்கு கொடுத்திருக்கிறது...." என காத்திருத்தலின் வலிமையை பல கோணங்களில் மிக அழகாக எடுத்துரைத்தார்.
'இராமன் எத்தனை இராமனடி?' நாட்டிய அரங்கு
எழிலுரையை தொடர்ந்து, 'இராமன் எத்தனை இராமனடி?' நாட்டிய அரங்கு நடந்தேறியது.
'கல்யாண இராமன்' நாட்டியத்தை 'நாட்டியக் கலைமணி' பவானி குகப்பிரியாவும், 'தசரத இராமன்' நாட்டியத்தை 'நாட்டிய பூரண கலாநிதி' நிர்மலா ஜோனும், 'ஆரண்ய இராமன்' நாட்டியத்தை 'கலைமாமணி' சிவானந்தி ஹரிதர்சனும், 'ராஜா இராமன்' நாட்டியத்தை 'கலாசூரி' வாசுகி ஜெகதீஸ்வரனும் நெறிப்படுத்தி மாணவியரின் நடனத்தினூடாக வழங்கினர்.
நடன ஆற்றுகையின்போது இசை வாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்திருந்தது.
அதன்படி, அ. ஆரூரன் மற்றும் தாரணி ராஜ்குமார் பாட, திபாகரன் (வயலின்), அபினவ் ரட்ணதுரை (மிருதங்கம்), ரட்ணம் ரட்ணதுரை (தாள தரங்கம்), செந்தூரன் (கீ போர்ட்) ஆகியோர் வாத்தியப் பங்களிப்பு வழங்கினர்.
நாட்டிய அரங்கில் நடனங்களை நெறிப்படுத்தி வழங்கிய நடன ஆசிரியர்களான பவானி குகப்பிரியா, நிர்மலா ஜோன், சிவானந்தி ஹரிதர்சன், வாசுகி ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு ஜெ. விஸ்வநாதன் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM