அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்து, நாட்டில் துரித வளர்ச்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் - ஜனாதிபதி

Published By: Vishnu

13 Jun, 2024 | 10:29 PM
image

அனைத்துப் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதுடன், முழு நாட்டையும் துரித அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் இலக்குகளை அடைய அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

அந்த இலக்குகளை அடைவதற்காக  அரசியலமைப்பிற்குள் இருந்து செயற்படும் வகையில் பொருளாதார மாற்ற சட்டத்தில் அதனை உள்ளடக்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, எனவே அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்படுவதாக எவரும் குற்றம் சுமத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டில் தற்போதுள்ள ஜனநாயக சோசலிசக் கோட்பாடுகளிலிருந்து தாம் ஒருபோதும் விலகவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (13) ஆரம்பமான சார்க்  நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களின் “SAARCFINANCE” மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிராந்தியத்தில் பல நாடுகளில் தேர்தல்கள் முடிந்து புதிய அரசாங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையும் தேர்தலை நடத்த தயாராவதாகவும் குறிப்பிட்டார்.

வழமை போன்று ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை அரசாங்கத்தை மாற்ற முயற்சிப்பதா அல்லது நாட்டை வெற்றி பெறச் செய்வதா என்பதை இந்தத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் இலங்கையின் செயற்பாடுகள் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார். 

2023 டிசம்பர் மாத இறுதியில் சமூக நலன்புரி செலவுகள் தவிர சகல இலக்குகளையும்  இலங்கை நடைமுறைப்படுத்தி இருப்பதாகவும் 2024 ஏப்ரல் மாத இறுதியில் அநேகமான இலக்குகள்  தாமதத்துடனேனும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நெருக்கடியில் இருந்து இலங்கை இவ்வளவு துரிதமாக மீண்டு வரும் என்று பலர் நினைக்காத நேரத்தில்,   எதிர்பார்த்ததை விட இந்த நிலைமை சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த பெறுபேறுகளை அடைய தன்னுடன் நம்பிக்கையுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

"உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மத்திய வங்கிகளின் செயற்பாடுகள்" எனும்  தொனிப்பொருளில் 45ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  ஆற்றிய முழுமையான  உரை,

''இன்று காலை நற்செய்தியொன்று கிடைத்தது. சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தின் கீழ் எங்களின் செயல்திறன் வலுவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், நான் எதிர்பார்த்ததை விட இது சிறப்பாக  நிலைமையாகும். டிசம்பர் 2023 இன் இறுதியில் இருந்து சமூக செலவினங்களுக்கான இலக்கைத் தவிர அனைத்து அளவு இலக்குகளும் எட்டப்பட்டுள்ளன என்றும், பல கட்டமைப்பு இலக்குகள் ஏப்ரல் 2024 இறுதிக்குள் தாமதமாகவேனும் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து இலங்கை இவ்வளவு துரிதமாக மீளும் என்று பலரும்  நினைக்காத நேரத்தில், கடந்த இரண்டு வருடங்களில் அதற்கான  சிறப்பான பணியை செய்துள்ளோம். இது தொடர்பில் நான் மிகவும் நம்பிக்கையுடன்  செயற்பட்டேன். இந்த நம்பிக்கையை என்னுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய  குழுவொன்றிருப்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகும். குறிப்பாக மிகவும் கடினமான சூழ்நிலையில் இந்தக் குழுவை வழிநடத்துவதில் இலங்கை மத்திய வங்கி ஆற்றிய பங்கை நான் பாராட்ட வேண்டும். அவர்கள் இலங்கைக்கு பழக்கமில்லாத செலவைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளை முன்னெடுத்தார்கள்.

வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடுகளுக்குள் கொள்கைகளை வகுப்பதற்காக மத்திய வங்கியுடன் இணைந்து பணியாற்றிய நிதி அமைச்சின் செயலாளருக்கும் நிதி அமைச்சின் ஊழியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும், இந்திய அரசு, அதன் ரிசர்வ் வங்கி, பங்களாதேஷ் அரசு, அதன் மத்திய வங்கிக்கு ஆகியவற்றுக்கும் எனது நன்றிகள். அவர்கள் கொடுத்த மூன்றரை பில்லியன் டொலர் தொகையும் 200 மில்லியன் டொலர் தொகையும் இலங்கைக்கு உயிர் காக்கும் தொகையாக அமைந்தது. இல்லாவிட்டால் இன்று இந்த ஸ்திரத்தன்மையை அடைந்திருக்க  முடியாது.

அவர்களின் ஆதரவுடன் உரத்தை கொள்வனவு செய்ய முடிந்தது. அதற்கு, யுஎஸ்எயிட் மற்றும் உலக வங்கியின் ஆதரவும் கிடைத்தது. இது ஒரு கடினமான ஆண்டாக மாறியது. அதனை ஒரு புத்தகமாக எழுதலாம்.

பல உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் வங்கியின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக இன்று நாம் இங்கு கூடியுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் எமது வலயத்தில் ஆழமாக ஆராய வேண்டும். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததில் இருந்து நிதிக் கொள்கை ஆற்றிய பங்கு மற்றும் கொவிட் தொற்றுநோயிலிருந்து மீள எடுக்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நான் விபரிக்க வேண்டியதில்லை.

இலங்கை என்ன சாதித்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். நெருக்கடியின் ஆழத்தை விளக்குவதற்கு, நான் சில விடயங்களைச் சொல்கிறேன். நான் 1949 ஆம் ஆண்டு பிறந்தேன். அப்போது நிலையான மாற்று விகிதம் 3 ரூபாய் 32 சதங்கள். 1978 இல், நான் அமைச்சரவையில் இருந்தபோது, நிலையான மாற்று விகிதத்தை நீக்கிவிட்டு, டொலருக்கு நிகரான 16 ரூபாய் என்ற மிதக்கும் மாற்று விகிதத்திற்கு மாற்றினோம்.

மகாவலி அபிவிருத்தித் திட்டம் போன்ற விரிவான திட்டங்கள் இருந்தபோதிலும், அச்சிடுவதற்குப் பணம் தேவைப்பட்ட போதிலும், 2009 ஆம் ஆண்டளவில் நாம் டொலருக்கு 116 ரூபாவை செலுத்த வேண்டிய நிலையை எட்டியிருந்தோம். அப்போது சர்வதேச நாணய நிதியம் வெளிநாட்டுக் கடன் நெருக்கடிக்கு மிதமான ஆபத்து இருப்பதாக அறிவித்திருந்தது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், மகாவலி திட்டத்தின் ஊடாக  அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தி, நாட்டை அரிசியில் தன்னிறைவு அடையச் செய்தோம். எமது சுதந்திர வர்த்தக வலயங்கள், எங்களின் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை உறுதி செய்தன. எங்களிடம் வளமான சுற்றுலாத் துறை இருந்தது. 2024இல் ஒரு டொலரின் விலை 400 ரூபாயாக உயரும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இன்று டொலரின் பெறுமதி 300 ரூபாய். எனவே, 1949  - 2024 வரையிலானபொருளாதார வளர்ச்சியானது மத்திய வங்கிக் கொள்கையை விட பணத்தை பெரும்பாலும் அச்சிடுவதை மையப்படுத்தியதாகவே இருந்துள்ளது. கடன் பெறும் தரப்பு  என்ற வகையில் நாம் கடன் வாங்குதல், பணத்தை அச்சிடுதல் உள்ளிட்டச் செயற்பாடுகளையே முன்னெடுத்திருக்கிறோம்.

அதன்படி, நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலேயே புதிய மத்திய வங்கி சட்டத்தினை சமர்பித்திருக்கிறோம். அதன்படி மத்திய வங்கியிடம் கடன் வாங்குவும், பணம் அச்சிடவும் முடியாது. அரச வங்கிகளிடத்திலிருந்தும் கடன் பெற முடியாது. அதனால் வருமான வழிமுறைகளை மேம்படுத்துவதற்காக தூண்டப்படுவோம். அதேபோன்று பணவீக்கம் தொடர்பிலான இலக்குகளும்  உள்ளன.

நம்மிடம் தற்போது மூன்று சட்டங்கள் உள்ளன. மத்திய வங்கிச் சட்டம், பொதுக் கடன் முகாமைத்துவ சட்டமூலம் மற்றும் பொது நிதிச் சட்டமூலம். இவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதனால் அடுத்த தசாப்தம் அல்லது அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் நாணய மற்றும் நிதி ஸ்திரத்தன்மை இலங்கைக்குள் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. 

அடுத்தபடியாக இலங்கையில் ஊழல் குறிப்பிடத்தக்க பிரச்சினையாக மாறியுள்ளது. அதற்கான தீர்வுகள் குறித்து பேசப்படுகிறது. ஆனால் தீர்வை எவரும் சொல்லவில்லை. அதுவே பிரச்சினையாகவுள்ளது. எனவே எனது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. அவர்களின் உதவியும் எங்களுக்குத் தேவைப்பட்டதுடன், அவர்களிடமிருந்து இலங்கையின் நிர்வாகக் கட்டளைகள் தொடர்பான அறிக்கையினையும் பெற்றுக்கொண்டுள்ளோம்.

நாம் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஊழல் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டாவதாக, குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. ஏனையச் சட்டங்களும் உள்ளன. 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு சில தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளை விடவும் வலுவான ஊழல் எதிர்ப்பு பொறிமுறையை நாம் கொண்டிருப்போம்.

அடுத்தபடியாக தொழில் வாய்ப்புகள் தொடர்பிலான பிரச்சினையுள்ளது.  இந்த பிரச்சினை அரசியல் வாதிகளை பெருமளவில் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது.  எவ்வாறு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது? நாட்டில் தொழில் வாய்ப்புக்களுக்காக பலர் காத்திருக்கிறார்கள். கல்வித்தரம் உயர்வடைகிறது. அதனால் கீழ் மட்ட தொழில் வாய்ப்புக்களினால் திருப்தி அடைய முடியாத நிலைமை உருவாகியுள்ளது.  

பலரும் திருப்திகரமான தொழிலை எதிர்பார்க்கிறார்கள். நம் நாட்டில் பெரும்பாலானோரிடம் ஒன்று அல்லது இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் உள்ளன. இருப்பினும் தொழில் குறித்த எதிர்பார்ப்பு என்னவென்ற கேள்விக்குரியும் உள்ளது. இந்த கட்டமைப்புக்குள் தொழில் வாய்ப்புக்களை பலப்படுத்தும் அதேநேரம் தனி நபர் வருமானத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.  

2024 ஆம் ஆண்டு உலக வங்கி அறிக்கையில் தெற்காசியா இவ்வருடத்தில் 6% வளர்ச்சியை எட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உயர்வான இலக்கு என்பதோடு, காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான முயற்சிகளுக்கும், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முயற்சிகளுக்கும் தடையை ஏற்படுத்தும். அதனால் தொழில் வாய்ப்புக்களை உருவாக்காத வளர்ச்சிக்குள் கட்டுப்பட்டு கிடப்பதா அல்லது, வளர்ச்சி குறித்து கவனம் செலுத்துவதாக என்பதை தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் இலங்கை இருக்கிறது.  

நாம் பாரம்பரிய பிரித்தானிய முறைமையை பின்பற்றுகிறோம். அவற்றில் பிரதானமான கொள்கையை நாம் மாற்றுவதில்லை. ஒரு ஆணைக்குழுவை உருவாக்க அல்லது இரத்துச் செய்வதற்காக புதிய சட்டங்களை நிறைவேற்றுகிறோம். ஆனால் அதற்குரிய முழுமையான பொறிமுறையை உருவாக்கவில்லை. மற்றைய நாடுகளில், பொருளாதார மேம்பாடு மற்றும் நிதி கட்டமைப்பு பற்றிய சட்டங்கள் உள்ளன.இலங்கையில் அந்த நிலைமை இல்லை. அதற்கு தடையாகவுள்ள பிரித்தானிய கொள்கைகளையே நாம் பின்பற்றுகிறோம். 

பிரித்தானியாக சுதந்திரமான வர்த்தகச் சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்கிறது. இவை அனைத்தும் கேள்விக்கு உள்ளாக்கப்படும் நாடுகளுடனேயே நாம் வாழ்கிறோம். அதனால், சந்தைப் பொருளாதாரம், சோசலிசப் பொருளாதாரம், மார்க்சியப் பொருளாதாரம், மூடிய பொருளாதாரம் அல்லது சீன, வியட்நாம் தன்மைகளை கொண்ட சோசலிசம் வேண்டுமா? என்பதை நமது இலக்குகளை கருத்தில் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

அதன்படி சட்ட உருவாக்கத்தின் போது மூன்றாவது அத்தியாத்தில், முக்கியமான விடயத்தை உள்ளடக்க எதிர்பார்த்தோம். அன்படி .பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய, இறக்குமதி பொருளாதாரத்திற்கு மாறாக ஏற்றுமதி பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும்.

சர்வதேச நாணய நிதிய அறிக்கையின்படி, "பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது.  அதற்கு மத்தியில் மேற்கொள்ளப்படும் கடன் நிலைத்தன்மைக்கான முயற்சிகள் கத்தி முனையை போன்றவையாகும். எனவே, கடன் மறுசீரமைப்பு, சீர்திருத்த நடவடிக்கைகளின் வேகத்தை தக்க வைத்தல் என்பன நிலைத்திருக்ககூடிய பொருளாதார மேம்பாடு மற்றும் கடன் நிலைத்தன்மையை நோக்கிய பாதையின் முக்கிய அம்சங்களாக அமைந்திருக்கும்." அதன்படியே பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை கொண்டு வர தீர்மானித்திருக்கிறோம். 

பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலிருந்தே, தோட்டங்களைச் சார்ந்து காலனித்துவ சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்கும் சட்டங்கள் எம்மிடன் உள்ளன. 1972 இல், மூலதன உருவாக்கத்தின் சரிவு மற்றும் இறுக்கமாக கையாளப்பட்ட பொருளாதாரம் காணப்பட்டது. 1977க்குப் பின்னரே படிப்படியாக பொருளாதாரத்தை திறக்க ஆரம்பித்தோம்.

ஆனால் தேவையான சட்டத்தை நாம் உருவாக்கவில்லை. 1972 பொருளாதாரச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நாம் அவற்றிலிருந்து விலகிச் சென்றோம். அவற்றை விட்டு வெளியேறிய ஒவ்வொரு முறையும் எதிர்ப்புகளும் எழுந்தன. இல்லாவிட்டால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டன. இருப்பினும் அவற்றிலிருந்து தப்பித்துக்கொண்டோம். 

ஆனால் இப்போது நாம் புதிய பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் அதற்காக வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதை நாம் செய்து முடிக்க வேண்டும். ஜேர்மனியில் எர்ஹார்ட் அதையே செய்தார். போருக்குப் பிறகு ஜப்பானியர்களும் அதனை செய்துள்ளனர். சீனாவும் செய்தது. வியட்நாமும் அதையே செய்தது. அதனால் நாம் அச்சப்பட வேண்டியதில்லை. 

ஆனால் நாட்டின் ஜனநாயக சோசலிச அமைப்பின் கொள்கைகளிலிருந்து நான் ஒருபோதும் விலகவில்லை. மக்களுக்கு போதியளவான வாழ்வாதாரத்தை உருவாக்குதல், பொது நலன் மற்றும் தனியார் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் முழு நாட்டினதும் விரைவான வளர்ச்சியை ஊக்குவித்தல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டே செயற்படுகிறோம். 

இந்த இரண்டு முயற்சிகளையும் முன்னெடுத்தால் இலங்கையின் பொருளாதாரக் கொள்கையை மாற்றி அமைக்க முடியும். அரசியலமைப்பிற்கு அமைய செயற்படுவதாக சட்டபூர்வமாக உறுதி அளித்திருப்பதால், அதற்கு முரணாக செயற்பாடுவதாக எவரும் சொல்ல முடியாது. 

3 ஆவது பிரிவின் 3 ஆவது உறுப்புரையில் பொருளாதார மாற்றத்திற்கான தேசியக் கொள்கையின் ஊடாக அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்புக்கு இடமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2032 ஆம் ஆண்டளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுக் கடன் விகிதம் 95% க்கும் குறைவாக இருக்க வேண்டும். இவைதான் சர்வதேச நிதியத்தின் இலக்குகளாகும். 2032 ஆம் ஆண்டுக்குள், அரசாங்கத்தின் மொத்த நிதித் தேவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13%க்கும் குறைவாக இருக்க வேண்டும். என்பதை தற்போது சட்டத்தில் குறிப்பிட்டுள்ளோம். 

 2027 ஆம் ஆண்டாகும் போதும்  அதற்குப் பின்னரும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்ப மத்திய அரசின் வருடாந்த கடன் 4.5% இற்கும் குறைவாக இருக்க வேண்டும். இது தேசிய பொருளாதார மாற்றத்தின் ஒரு பகுதியாகும். தேசிய பொருளாதார மாற்றத்தில் வழங்கப்பட வேண்டிய பல காரணிகள் உள்ளன.

இரண்டாவது பகுதி, இலங்கையை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதியை இலக்காகக்கொண்ட   டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதாகும். இது போட்டித்தன்மையை அதிகரிக்க தேசிய பொருளாதாரத்தின் பல்வகைப்படுத்தல் மற்றும் ஆழமான கட்டமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட சட்டப்பூர்வ கடமையாகும். நாம் ஆழமான கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆழமான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்யாவிட்டால், யாராவது நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும். 2050 ஆம் ஆண்டாகும்போது  பூஜ்ஜிய உமிழ்வை அடைதல், உலகப் பொருளாதாரத்துடன் ஒன்றிணைதல், நிலையான பாரிய பொருளாதார நிலுவைகள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைதல், விவசாய உற்பத்தித்திறன், வருமானம் மற்றும் விவசாய ஏற்றுமதியை அதிகரிக்க விவசாயத்தை நவீனமயமாக்குதல் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் ஆகியவை இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பொருளாதார மாற்றத்திற்கான தேசிய கொள்கையை உருவாக்கும் போது, அமைச்சரவை பின்வரும் இலக்குகளை உறுதி செய்ய வேண்டும். மொத்தத் தேசிய உற்பத்தியின்  வளர்ச்சியானது 2027 ஆம் ஆண்டாகும்போது, வருடாந்தம் 5% ஆகவும் அதன்பின்னர் 5% வீதத்தை விடவும் அதிகரிக்கப்பட வேண்டும்.

2025 ஆம் ஆண்டாகும்போது, நாட்டில் வேலையின்மை தொழிற்படையில் 5%இற்கு குறைவாக இருக்க வேண்டும். பெண் தொழிலாளர் பங்கேற்பு 2030 ஆம் ஆண்டாகும்போது, 40%இற்கு குறையாமலும் 2040இற்குள் 50%இற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

நடைமுறைக் கணக்கின்  கொடுப்பனவுகளின் இருப்புப் பற்றாக்குறை வருடாந்தம் மொத்தத் தேசிய உற்பத்தியில் 1% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. 2025 ஆம் ஆண்டாகும்போது, பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி, மொத்தத் தேசிய உற்பத்தியின் சதவீதமாக 25%இற்கும் குறைவாக இருக்கக்கூடாது. மேலும் அது 2030 இல் 40%இற்கு குறையாமலும் 2040 இல் 60% வீதத்தை அடையவும்  வேண்டும். நிகர  நேரடி அந்நிய முதலீடு, மொத்தத் தேசிய உற்பத்தியின் 5% இற்கு குறைவாக இருக்கக்கூடாது.

2030 ஆம் ஆண்டாகும்போதும், அதற்குப் பின்னரும் இது 40% இற்கு குறையாமல் இருக்க வேண்டும். அரச வரவு செலவுத் திட்டத்தின் முதன்மை இருப்பு 2032 வரை மொத்தத் தேசிய உற்பத்தியில் 2.3% ஆகவும், 2032 முதல் குறைந்தபட்சம் 2% ஆகவும் இருக்க வேண்டும். அரசாங்க வருமானம் 2027இற்கு அப்பால் மொத்தத் தேசிய உற்பத்தியில் குறைந்தது 15% ஆக இருக்க வேண்டும். பல பரிமாண வறுமை விகிதம் 2027 இற்குள் 15% ஆகவும் 2035 இற்குள் 10% இற்கும் குறைவாகவும் குறைக்கப்பட வேண்டும்.

இவை கடினமான இலக்குகளாகும். ஆனால் இந்தக் கடினமான விடயங்களை நாம் நிறைவேற்றவில்லை என்றால், நாம் வெற்றிபெற முடியாது. இதை செய்ய முடியாது என்று ஒரு அரசாங்கம் நினைத்தால், அவர்கள் பாராளுமன்றம் சென்று இந்த சட்டத்தை திருத்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் இந்த கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும். இந்த இலக்கை அடைய மத்திய வங்கி, திறைசேரி மற்றும் பொருளாதார ஆலோசகர்கள் அனைவரும் இணைந்து செயல்படுகின்றனர்.

இவை அனைத்திற்கும் ஆரம்பத்தில், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நாம் எடுத்த நடவடிக்கைகளின் முதன்மையான பயனாளிகள் இலங்கையின் பொது மக்களே என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். அவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். தொழிலை இழந்து, சொத்துக்களை அடகு வைத்து, நிலத்தை விற்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.  அதற்காகவே, பணம் கீழ் மட்டம் நோக்கிச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் குறிப்பிட்டேன். ரூபாவை ஸ்திரப்படுத்துவதும், வட்டி விகிதங்களைக் குறைப்பதும் நன்மைகளில் ஒன்றாகியுள்ளது.

உலக வங்கியின் உதவியுடன் சமூக நலன்புரி பயன்களை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம். 18 இலட்சம் குடும்பங்களில் இருந்து 24 இலட்சம் குடும்பங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் கீழ் மட்டம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. நாம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை  வழங்கினோம். தனியார் துறையினரும் அதை பின்பற்றியுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து, அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு தடையுத்தரவு கோரி தோட்ட நிறுவனங்களால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, குறைந்த பட்சத் தொகை கிடைக்கும் என்பதை உறுதி செய்துள்ளோம்.

மாவட்ட அபிவிருத்திக்கும் நிதி ஒதுக்கினோம். கிராமங்களில் வீதிகள் அல்லது கட்டிடங்களை நிர்மானிப்பதற்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் இவை வழங்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள சிறு ஒப்பந்தக்கார்களுக்கும்  மற்றும் ஏனையவர்களுக்கும் பணம் புழங்குவதற்காகத்தான். நியாயமான தொகை  மக்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

1935 ஆம் ஆண்டு முதல், அரசாங்கம் மக்களுக்கு விவசாயம் செய்ய நிலத்தை வழங்கியது. ஆனால் அதற்கான சட்ட உரிமைகளை அவர்களுக்கு ஒருபோதும் வழங்கவில்லை. உரிமம் மட்டுமே வழங்கப்பட்டது. அதேபோன்று, கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வீடுகள் நிர்மானித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு வீடு கட்டவோ அல்லது விவசாயம் செய்யவோ வழங்கப்பட்டுள்ள அனைத்துக் காணிகளையும் முழு உரிமையுள்ள காணிகளாக வழங்க கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுத்துள்ளோம்.

அதை இப்போது நாம் செயல்படுத்தி வருகிறோம். குறைந்த வருமானம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கும் நாங்கள் உரிமைப் பத்திரங்களை வழங்குகிறோம். அதாவது கூடுதலாக 20 இலட்சம் குடும்பங்களுக்கு இந்தப் பணம் செல்கின்றது. இவை வங்கியில் வைப்பு செய்ய முடியுமான சொத்துகள் என்பதைக் கூற  வேண்டும். தொழிற்பயிற்சிக் கல்வி முறையை மாற்ற புதிய சட்டங்களையும் கொண்டு வருகிறோம். ஏனெனில் பல்கலைக்கழகத்தை விட அதிகமானோர் தொழிலை எதிர்பார்த்து தொழில் பயிற்சிக் கல்வியை நாடிச் செல்கின்றனர். 

நமது மக்கள் தொகையின் கீழ் மட்ட மக்கள் பயன்பெறுவதை உறுதிசெய்ய நாம் இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். சமூகத்தின் உயர்மட்டத்தில் உள்ள ஒரு சிலருக்கு  இதைக் கட்டுப்படுத்த முடியாது. நாம் பாரிய நிறுவனங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டியுள்ளது. அவற்றில் அதிகமானவை மேலும் விரிவுபடுத்தப்படுவதை பார்க்க  நான் விரும்புகிறேன்.

மாலைதீவில் எமது ஹோட்டல்கள் உள்ளதுடன், நாம் இப்போது பங்களாதேஷில்  செய்ய முதலீடுகள் உள்ளன. இந்திய முதலீடுகள் இலங்கைக்கு வருவதை நாம் காண்கிறோம். நாம் விரிவடையும் போது, ஒத்துழைப்பு தொடர்பான பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். பிராந்தியத்தில் பல நாடுகள் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசாங்கங்களை நிறுவியுள்ளன. இலங்கையில் நாம் தேர்தலை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றோம். எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன. வழக்கமான முறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை  ஆட்சியை மாற்றப் போகிறோமா அல்லது உண்மையாகவே செயற்பட்டு காட்டப் போகிறோமா? என்று முடிவு செய்ய வேண்டும்.'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் கொலாம் சர்வார் (Ambassodor. MD Golam Sarwar), நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மகிந்த சிறிவர்தன, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் (Shaktikanta Das), பூட்டானின் ரோயல் நாணய அதிகார சபையின் ஆளுநர் தசோ பென்ஜோர் (Dasho Penjore), மாலைதீவு நாணய அதிகார சபையின் ஆளுநர் அலி ஹாஷிம் (Ali Hashim), நேபாள மத்திய வங்கியின் ஆளுநர் மகா பிரசாத் அதிகாரி (Maha Prasad Adhikari), பாகிஸ்தான் அரச வங்கியின் ஆளுநர் சலீம் உல்லாஹ் (Saleem Ullah)  மற்றும் சார்க் பிராந்திய நாடுகளின் திறைசேரிகளின் செயலாளர்கள் உட்பட சார்க் நாடுகளின் மத்திய வங்கி அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் 350 போதை...

2024-07-20 01:00:26
news-image

எல்ரோட் தீகல எல்ல வனப்பகுதியில் பாரிய...

2024-07-20 00:57:33
news-image

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும்...

2024-07-20 00:54:48
news-image

ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தில் அநுர...

2024-07-20 00:50:48
news-image

தேர்தல் சட்டங்களை மீறுவது மனித உரிமை...

2024-07-19 20:07:45
news-image

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான...

2024-07-19 23:11:07
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை...

2024-07-19 22:57:33
news-image

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால்...

2024-07-19 22:49:56
news-image

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள்...

2024-07-19 22:45:28
news-image

அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள் :...

2024-07-19 19:56:24
news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:35:12
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12