சுப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள்; தர்மசங்கடமான நிலையில் நியூஸிலாந்து

13 Jun, 2024 | 11:11 AM
image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத்  தீவுகளுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று காலை நடைபெற்ற சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் மேற்கிந்தியத் தீவுகள் 4ஆவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

தென் ஆபிரிக்கா (டி குழு), அவுஸ்திரேலியா (பி குழு), இந்தியா (ஏ குழு) ஆகிய அணிகள் ஏற்கனவே சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தன.

மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி அடைந்த நியூஸிலாந்து பெரும்பாலும் சுப்பர் 8 சுற்று வாய்ப்பை இழக்கக்கூடிய தர்மசங்கடமான நிலையில் இருக்கிறது.

ஏனெனில், இக் குழுவில் இரண்டாம் இடத்திலுள்ள ஆப்கானிஸ்தான் 2 வெற்றிகளுடன்  கொண்டுள்ள   5.225 என்ற மிகச் சிறந்த நேர்மறை நிகர ஓட்ட வேகத்தை நியூஸிலாந்து கடப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். அதேவேளை, ஆப்கானிஸ்தான் தனது எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடையும் என எதிர்பார்க்க முடியாது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் 11 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆனால், தனி ஒருவராக போராடிய ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பின்வரிசை வீரர்களுடன் இணைந்து கடைசி 9 ஓவர்களில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.

8ஆவது விக்கெட்டில் ரோமாரியோ ஷெப்பர்டுடன் 27 ஓட்டங்களைப் பகிர்ந்த ரதர்ஃபர்ட், பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் குடாகேஷ் மோட்டியுடன் 37 ஓட்டங்களைப் பகிர்ந்தார். கடைசி 13 பந்துகளில் மோட்டி ஒரு பந்தை மாத்திரம் எதிர்கொண்டு ஓட்டம் பெறாமல் இருந்தார்.

ரதர்ஃபர்ட் 39 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைவிட நிக்கலஸ் பூரன் (17), அக்கீல் ஹொசெய்ன் (15), அண்ட்றே ரசல் (14), ரொமாரியோ ஷெப்பர்ட் (13) ஆகிய நால்வர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டிம் சௌதீ 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லொக்கி பேர்கசன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

150 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆரம்பத்திலிருந்து ஓட்டங்களைப் பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நியூஸிலாந்து 11 ஓவர்கள்  நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 63 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

அதன் பின்னர் மேலும் 4  விக்கெட் கள் சரிந்ததுடன் மேலதிகமாக 76 ஓட்டங்களே பெறப்பட்டது.

துடுப்பாட்டத்தில் க்ளென் பிலிப்ஸ் (40), பின் அலன் (26), மிச்செல் சென்ட்னர் (21) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் அல்ஸாரி ஜோசப் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் குடாகேஷ் மோட்டி 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06
news-image

வட மாகாணத்தில் மேசைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டம்

2025-01-14 14:11:23
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக்...

2025-01-13 22:15:59
news-image

தனது பதவியை இடைநிறுத்தியதற்கு நியாயம் கோரி...

2025-01-13 15:21:48
news-image

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப...

2025-01-13 10:05:18
news-image

மெல்பேர்ன் டெஸ்டுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து...

2025-01-13 10:05:39