(நெவில் அன்தனி)
ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்படும் 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் டி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது 3ஆவது போட்டியில் நேபாளத்தை ப்ளோரிடா, லௌடஹில் விளையாட்டரங்கில் எதிர்த்தாடவுள்ளது.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஏற்கனவே தனது முதல் இரண்டு போட்டிகளில் மோசமான துடுப்பாட்டங்களினால் தென் ஆபிரிக்காவிடமும் பங்களாதேஷிடமும் தோல்விகளைத் தழுவியதால் துவண்டு போயுள்ள முன்னாள் சம்பியன் இலங்கையின் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக தனது எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெறவேண்டும் என்ற இக்கட்டான நிலையை இலங்கை எதிர்கொண்டுள்ளது.
நேபாளத்தையும் அதனைத் தொடர்ந்து நெதர்லாந்தையும் மிகப் பெரிய நிகர ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிகொண்டாலும் அதன் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு ஏனைய போட்டி முடிவுகளிலேயே தங்கியிருக்கிறது.
லொளடர்ஹில் விளையாட்டரங்கில் இலங்கை விளையாடிய இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் கணிசமான ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனவே இந்த ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்துள்ள இலங்கை திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷுடனான போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் நேபாளத்துடனான போட்டியிலும் இலங்கை அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வேளைகளில் கமிந்து மெண்டிஸுக்கு பதிலாக சதீர சமரவிக்ரமவும் மஹீஷ் தீக்ஷனவுக்குப் பதிலாக டில்ஷான் மதுஷன்க அல்லது துனித் வெல்லாலகேயும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
இதேவேளை, வனிந்து ஹசரங்கவின் தவறான தீர்மானங்களும் வியூகங்களுமே இலங்கையின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இந்தப் போட்டியில் அவர் சிறந்த அணுகுமுறைகளைப் பின்பற்றி அணியை வெற்றிபெறச் செய்யவேண்டும். அல்லது அவரிடமிருந்து தலைமைத்துவம் பறிபோக நேரிடும்.
உலகக் கிண்ணப் போட்டியில் நேபாளம் மழலையாக இருக்கின்ற போதிலும் அவ்வணியைக் குறைத்து மதிப்பிட முடியாது.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லாததால் நேபாளம் துணிச்சலுடன் விளையாடும்.
அணிகள்
இலங்கை (பெரும்பாலும்): பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் அல்லது சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க (தலைவர்), மஹீஷ் தீக்ஷன அல்லது டில்ஷான் மதுஷன்க, மதீஷ பத்திரண, நுவன் துஷார.
நேபாளம்: குஷால் பூட்டெல், ஆசிப் ஷெய்க், அனில் சாஹ், ரோஹித் பௌடெல் (தலைவர்), குஷால் மல்லா, டிப்பேந்த்ரா சிங் அய்ரீ, சோம்பால் கமி, குல்சான் ஜா, கரண் கே.சி., சாகர் தக்கால், அபினாஷ் பொஹாரா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM