இரத்தினபுரி மாவட்ட தமிழர் அரசியல்…! :  கடந்த கால தவறுகள் சீர்செய்யப்படல் அவசியம்

10 Jun, 2024 | 10:50 AM
image

சிவலிங்கம் சிவகுமாரன்  

ரத்தினபுரி மாவட்டம் வாழ் தமிழர்கள் மீது   தமிழ் அரசியல்வாதிகளின் கரிசனை முக்கியமானது. முக்கியமாக தமிழ் முற்போக்குக் கூட்டணியானது  அங்கு இம்முறை ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றே தீருவோம் என்று  களத்திலிறங்கியுள்ளது. இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்டம் வாழ் தோட்டத்தொழிலாளர்கள்  மீது ஒரு பக்கம் பேரினவாத தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் மறுபக்கம் தோட்ட நிர்வாகத்தினரும்  தொழிலாளர்களை அடிமைகளைப் போல நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழ்ப்பிரதிநிதித்துவம் இருந்தால் இப்படியெல்லாம் நடக்காது என்பது அரசியல்வாதிகளின் கருத்தாக உள்ளது. எனினும் அங்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை உருவாக்கவும் கிடைத்த சந்தர்ப்பத்தை தக்க வைத்துக்கொள்ளவும் கடந்த காலங்களில் மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தவறியுள்ளன என்று தான் கூற வேண்டும்.

இரத்தினபுரி தேர்தல் மாவட்டமானது, எஹலியாகொடை, பலாங்கொடை, நிவித்திகலை, கொலன, கலவானை, இரத்தினபுரி, பெல்மதுளை, இறக்குவானை ஆகிய எட்டு தேர்தல் தொகுதிகளை கொண்ட மாவட்டமாகும்.  இத்தொகுதிகளில் பலாங்கொடை , இறக்குவானை, பெல்மதுளை ஆகிய பிரதேசங்களில்  அதிக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதற்கடுத்து நிவித்திகல மற்றும் இரத்தினபுரி நகரங்களை குறிப்பிடலாம்.

முதல் பிரதிநிதித்துவம்

இரத்தினபுரி மாவட்டத்துக்கு  முதல் தமிழ்ப் பிரதிநிதித்துவமானது 1988 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல்கள் மூலம் கிடைத்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் ஏ.எம்.டி. ராஜன், போனஸ் ஆசனம் மூலம் சப்ரகமுவ மாகாண சபைக்கு தெரிவானார். அச்சந்தர்ப்பத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் அமைச்சராக விளங்கினார். முதலாவதாக இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் அவரது செல்வாக்கினால் மேற்படி போனஸ் ஆசனம் கிடைக்கப்பெற்றது. அதன் பிறகு 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக அதனுடன் இணைந்து போட்டியிட்டது. ஐ.தே.கவுக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனங்களின் மூலம் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஏ.எம்.டி ராஜன் ஆகியோர் எம்.பிக்களாகினர். இதில் ராஜன் இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த அரசியல் பிரதிநிதித்துவமானது தமிழ் வாக்காளர்கள் குறைவாக இருந்த இரத்தினபுரி மாவட்டத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்ததுடன் அதன் பிறகு இங்கு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை கட்டியெழுப்புவதற்கு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க  ஒரு வாய்ப்பாக இருந்தது.  ஆனாலும் 2000 ஆம் ஆண்டு  பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை அதற்கான எந்த முயற்சிகளையும் இரத்தினபுரி மாவட்டத்தில் இ.தொ.கா மேற்கொள்ளவில்லை. 2000 ஆம் ஆண்டுக்குப்பிறகு, இரத்தினபுரி மாவட்டமானது மலையகம் என்ற பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாவட்டமாக விளங்கியதுடன் அங்கு வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் மாவட்டத்தின் சிங்கள பிரதிநிதிகளை ஆதரிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

மலையகம் என்றால் அது நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தியதான அரசியல் முன்னெடுக்கப்பட்டது.  2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஒரு வருட இடைவெளிக்கும் சந்திரிகா அம்மையார் பாராளுமன்றை கலைத்ததால்    2001 ஆம் ஆண்டு  இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று தமிழர்களும், பதுளை மாவட்டத்தில் ஒருவருமாக நான்கு உறுப்பினர்கள் தெரிவானதோடு, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் தேசிய பட்டியல்கள் மூலம் நான்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். அக்காலகட்டத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எட்டு  பிரதிநிதிகளும் இரத்தினபுரி மாவட்டத்தை எட்டியும் பார்க்கவில்லை.

சமூக ஊடகங்கள் தோற்றம் பெறாத இக்காலகட்டத்தில் காவத்தை,இறக்குவானை  போன்ற பகுதிகளில் தொழிலாளர்கள், பெரும்பான்மை இனத்தவர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் தாராளமாக இடம்பெற்றன. ஆனால் அது குறித்து குரல் கொடுக்க அங்கு பிரதிநிதிகள் எவரும் இருக்கவில்லை. இங்கு உள்ளவர்களும் கண்டு கொள்ளவில்லை.

மலையக கட்சிகளின் ஒன்றிணைவு

சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் நிரந்தரமாக இல்லாது போகும் ஆபத்து ஏற்படுவதை உணர்ந்த சிவில் சமூகத்தினர்  மலையக கட்சிகள் ஒன்றிணைந்து தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்த ஆரம்பித்தன.    2012 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல்கள் பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் இந்த கோரிக்கைகள் முனைப்புப் பெற்றன.

இதையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி  என்பன தமக்குள் ஒரு உடன்பாட்டுக்குள் வந்ததில் தமது வேட்பாளர்களுக்கு அனைவரும் இணைந்து வாக்களிக்கும் வகையில் ஒன்றிணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதை அப்போது பலரும் வரவேற்றிருந்தனர். வேட்பாளர்கள் இ.தொ.காவின் சேவல் சின்னத்திலேயே போட்டியிட்டனர்.   இதன் மூலம் அத்தேர்தலில்  கேகாலை மாவட்டத்தில் 8,971 வாக்குகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 17,014 வாக்குகளும் பெறப்பட்டு இரு தமிழ் உறுப்பினர்கள் சப்ரகமுவ மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.  

எனினும் தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுநாளே ‘இது  எமது  தனித்துவ வெற்றி’ என  இ.தொ.கா அறிவிக்க ஒன்று சேர்ந்திருந்த கட்சிகள் மீண்டும் பிரிந்து சென்றன. அதன் பிறகே தனித்து இயங்குதல் மலையக மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் செயற்பாடு என்பதை உணர்ந்த மனோ கணேசன், பி.திகாம்பரம் , வே.இராதாகிருஷ்ணன் ஆகிய கட்சித்தலைவர்கள் ஒன்றிணைந்து சிவில் சமூகங்களின் உதவியுடனும் ஆலோசனைகளுடனும் தமிழ் முற்போக்குக் கூட்டணியை உருவாக்கினர்.  2015 ஆம்   ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில்  இக்கூட்டணியானது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு  நுவரெலியாவில் 3 , கண்டியில் 1, கொழும்பில் 1, பதுளையில் 1 என 6  உறுப்பினர்களை  பெற்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கூட்டணியின் வேட்பாளர் மூ.சந்திரகுமார் 30 ஆயிரம் வரையான வாக்குகளைப்பெற்றார். கூட்டணியானது பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை தேசிய பட்டியலில் தாக்கம் செலுத்தியிருந்தது எனலாம். குறித்த தேர்தலில் ஐ.தே.கவுக்கு 13 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்தன. ஆனால் அதில் இரத்தினபுரி மாவட்டத்துக்கு ஒன்றை கேட்டு வாங்குவதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி பின்னின்றது.

அதே போன்று 2020 பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டது. இரத்தினபுரியில் ஆசிரியர் சந்திரகுமாரே மீண்டும் நிறுத்தப்பட்டார். இம்முறை அவர் 36 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். தமிழ் முற்போக்குக் கூட்டணியில் ஆறு பேர் வெற்றி பெற்றனர். ஆனால்   ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்த 7 தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்றை இரத்தினபுரி மாவட்டத்துக்கு வழங்க சஜித்தும் முன்வரவில்லை, தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அதை கேட்டுப்பெறவில்லை. நுவரெலியா மற்றும் பதுளைக்கு வெளியே கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முற்போக்குக் கூட்டணி பெற்றுக்கொண்ட கணிசமான வாக்குகளுக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முக்கிய பங்காற்றியிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே அவர் தலைவராக உள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய பட்டியலில் உள்ளவர்களை பரிசீலித்திருக்கலாம்.  தேசிய பட்டியலில் உள்வாங்கப்படுபவர்கள் தீவின் எப்பகுதியிலும் சென்று குறித்த பிரதேசத்தின் பிரதிநிதியாக அரசியல் செய்வதற்கு எந்த தடைகளும் இல்லை.

  மேற்குறிப்பிட்ட இரண்டு தேர்தல்களிலும்   இரத்தினபுரி மாவட்டத்துக்கு   தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது என்பதை விட இல்லாமலாக்கப்பட்டது என்று தான் கூற வேண்டும்.

 இப்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி இரத்தினபுரி மாவட்டத்தில் சந்திரகுமாரை எம்.பியாக்குவோம் என சூளுரைக்கின்றது. அதே வேளை வேறு எவராவது வாக்குகளை சிதறடிக்க வந்தால் தலையில் இடி விழ வேண்டும் என கூட்டணித் தலைவர் மனோ கணேசன் சாபமும் விடுகின்றார். இலங்கையின் எப்பாகத்திலும் எவரும் தேர்தல்களில் போட்டியிடுவது அவரவர் உரிமை. இதை எவராலும் தடுக்க முடியாது. ஆனால் தேசிய கட்சிகளுக்கு தமிழ் வாக்குகளை கணிசமாக பெற்றுக்கொடுத்து விட்டு யாரோ முகந்தெரியாத ஒருவருக்கு அதன் மூலம் தேசிய பட்டியல் ஒன்றை தியாகம் செய்யும் உரிமையை தமிழ்க் கட்சிகளுக்கு வாக்காளர்கள் வழங்கவில்லையென்பதை கட்சித்தலைவர்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். 

மலையக மக்களின் பிரதிநிதிகளாக தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு உள்வாங்கப்பட்டவர்களின்  மூன்று சந்தர்ப்பங்களை இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது. 

1) முதலாவதாக  1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட ஈரோஸ் அமைப்பு தேசிய பட்டியல் மூலம் கிடைத்த இரண்டு ஆசனங்களில் ஒன்றை நுவரெலியா மாவட்டத்துக்கு வழங்கியது. அதன் மூலம் ராகலை பிரதேசத்தைச் சேர்ந்த மலையப்பன் ராமலிங்கம்   எம்.பியானார்.

2) இரண்டாவதாக  1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில்  இ.தொ.கா தலைவர்  அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் இரத்தினபுரி மாவட்டத்துக்கு ஏ.எம்.டி ராஜனை  தேசிய பட்டியல் மூலம் எம்.பியாக்கினார். 

3) மூன்றாவதாக, 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில்  மக்கள் விடுதலை முன்னணி, ராமலிங்கம் சந்திரசேகரனை தேசிய பட்டியல் மூலம் எம்.பியாக்கியது.  

தற்போது இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் வாக்காளர்கள் தொகை அதிகரித்துள்ளது.  சுமார்  ஒரு இலட்சத்து முப்பதாயிரம் தமிழர்கள் வாழ்ந்து வரும் இரத்தினபுரி மாவட்டத்தில் சராசரியாக 75 ஆயிரம் தமிழ் வாக்குகள் உள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாராளமாக தெரிவு செய்யும் எண்ணிக்கை இது. ஆனால் அவர்களை ஒன்றிணைப்பதில் சவால்கள் இருக்கின்றன. பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக்கொள்வதில் கடந்த காலங்களில் மலையக கட்சிகள் விட்ட தவறுகள் பற்றி சிந்திக்கும் இரத்தினபுரி மக்கள் அக்கட்சிகளின் மீது எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்பது பற்றி கூற முடியாது. சில நேரங்களில் அவர்கள் சிங்கள வேட்பாளர்களை தெரிவு செய்யும் முடிவை எடுப்பதற்குக் காரணம் தமது இருப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அல்ல.    மலையக கட்சிகளின் மீதுள்ள நம்பிக்கையின்மையாகும்.

2015 ஆம் ஆண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட போது   7 பேர்ச் காணியில் தனிவீட்டுத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான உறுதியை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தியது மாத்திரமல்லாது அதை சாத்தியமாக்கியது. அதே போன்று அடுத்த பாராளுமன்றத் தேர்தலில்  கூட்டணியானது இரத்தினபுரி மாவட்டத்துக்கான  தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தாம் ஆதரவு தரும் கூட்டணிக்கோ அல்லது தேசிய கட்சிக்கோ எழுத்து மூலமான உறுதியைப் பெற வேண்டும். 

இரத்தினபுரி மாவட்ட தமிழர் அரசியல் என்பது அம்மக்களின் மனதில் நம்பிக்கையை விதைப்பதில் தங்கியுள்ளது. கடந்த கால கசப்பான அனுபவங்களுக்கு முகங்கொடுத்துள்ள  இரத்தினபுரி மாவட்ட தமிழ் வர்த்தகர்கள் மற்றும் பெருந்தோட்ட மக்களின் மனங்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் சவாலான அரசியலை யார் முன்னெடுக்கப்போகின்றனர் என்பது தெரியவில்லை. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள செயற்கை நுண்ணறிவு...

2024-07-19 17:44:24
news-image

இருண்ட உலகில் 18 வருட போராட்டம்...

2024-07-18 10:54:36
news-image

குழந்தைகள், சிறுவர்களின் எரியுண்ட தசைகளின் மணத்தையும்...

2024-07-17 17:49:49
news-image

வலப்பக்கம் கைகாட்டி, இடப்பக்கம் திரும்பிய பிரெஞ்சு...

2024-07-17 12:19:02
news-image

தொன்மங்களைப் பறிக்கும் பௌத்தம்

2024-07-16 12:49:27
news-image

தகவல் தொழில்நுட்ப கல்வி வளங்களை பயன்படுத்துகிறோமா?

2024-07-16 11:55:46
news-image

வடக்கில் தேர்தல், நல்லிணக்கப் பிரச்சினைகள்

2024-07-16 09:31:33
news-image

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் மீது...

2024-07-15 12:27:03
news-image

இலங்கை தமிழர் அரசியல் சமகால வரலாற்றில்...

2024-07-15 11:14:17
news-image

இளைஞர்களுக்கான உத்தரவாதங்கள் இல்லாத கடன்கள்

2024-07-14 17:31:25
news-image

இங்கிலாந்து தேர்தலின் விபரிப்பு

2024-07-14 17:39:59
news-image

சம்பந்தனின் அரசியல் தலைமைத்துவமும் தவறவிடப்பட்ட வாய்ப்புகளும்

2024-07-14 16:39:53