பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் பாகிஸ்தானை 6 ஓட்டங்களால் வென்றது இந்தியா

Published By: Vishnu

10 Jun, 2024 | 01:33 AM
image

(நெவில் அன்தனி)

விளையாட்டு உலகில் பரம வைரிகள் என வருணிக்கப்படும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நியூயோர்க், நசவ் கன்ட்றி சர்வதேச விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற  மிகவும் பரபரப்பான ஏ குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா 6 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

That's the game - the Indian players celebrate a tough win, India vs Pakistan, T20 World Cup 2024, New York, June 9, 2024

இந்த வெற்றியுடன் 4 புள்ளிகளைப் பெற்று  ஏ குழுவுக்கான   அணிகள் நிலையில் முதல் இடத்தில் உள்ள இந்தியா சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

The Indian players console a distraught Naseem Shah after the game, India vs Pakistan, T20 World Cup 2024, New York, June 9, 2024

ஐக்கிய அமெரிக்காவிடம் சுப்பர் ஓவரில் தோல்வி அடைந்த பாகிஸ்தானுக்கு இந்தத் தோல்வியினால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 120 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் நிதானத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.

மொத்த எண்ணிக்கை 26 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் பாபர் அஸாம், மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 31 ஓட்டங்கள் சேர்ந்தபோது உஸ்மான் கான், தொடர்ந்து பக்கார் ஸமான் ஆகிய மூவரும் தலா 13 ஓட்டங்களுடன் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (73 - 3 விக்.)

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மொஹமத் ரிஸ்வான் 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அவரப்பட்டு பந்தை விசுக்கி அடிக்க விளைந்து போல்ட் ஆனார். (80 - 4 விக்.)

பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கையைக் கொடுக்கக்கூடியவர் என கருதப்பட்ட ஷதாப் கான் 4 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

ஜஸ்ப்ரிட் பும்ரா வீசிய 19ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் இப்திக்கார் அஹ்மத் 5 ஓட்டங்களுடன் 6ஆவதாக ஆட்டம் இழக்க கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு மேலும் 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்தில் இமாத் வசிம் (15) ஆட்டம் இழந்தார். (102 - 7 விக்.) அடுத்த 5 பந்துகளில் 11 ஓட்டங்களைக் கொடுத்த  அர்ஷ்தீப் சிங்,   இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஒரு கட்டத்தில் 12ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்று சற்று வலுவான நிலையில் இருந்த இந்தியா குறைந்தது 140 ஓட்டங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 7 விக்கெட்கள் 30 ஓட்டங்களுக்கு சரிந்தன.

வீரர்களின் கவனக்குறைவான அடிகளும் தவறான அடி தெரிவுகளே இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

மழை காரணமாக 45 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பமான போட்டியில் முதலாவது ஓவர் நிறைவில் இந்தியா 8 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை மீண்டும் பெய்ததால் ஆட்டம் மீண்டும் தடைப்பட்டது.

34 நிமிடங்களின் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது விராத் கோஹ்லி 4 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். விராத் கோஹ்லி ஆரம்பப் போட்டியிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 19 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந்திலையில் ரிஷாப் பான்ட், அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து நிதானம் கலந்த அதிரடியுடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அக்சார் பட்டேல் 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் நுழைந்த சூரியகுமார் யாதவ் 7 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கவனக் குறைவான அடியினால் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். அவரும் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார்.

அவரைத் தொடர்ந்து ஷிவம் டுபே 3 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஐபிஎல் போட்டிகளில் அசத்திய ஷவம் டுபே, இந்தியாவின் உலகக் கிண்ண அணியில் பெயரிடப்பட்டதிலிருந்து பிரகாசிக்கத் தவறியதுடன் அந்தக் குறை உலகக் கிண்ணத்திலும் தொடர்கிறது.

அடுத்த போட்டியில் சூரியகுமார் யாதவ்வுக்கும் ஷிவம் டுபேக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது சந்தேகமே.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ரிஷாப் பான்ட் 31 பந்துகளில் 6 பவுண்டறிகளுடன் 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து ரவீந்த்ர ஜடேஜா முதல் பந்திலேயே களம் விட்டகன்றார். (96 - 7 வி;)

ஹார்திக் பாண்டியா 3 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நேரத்தில் 2 ஓட்டங்களை மட்டும் பெற்று அடுத்த பந்தில் விக்கெட்டைத் தாரைவார்த்தார். அவர் 7 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

அவரைத் தொடர்ந்து ஜஸ்ப்ரிட் பும்ரா அடுத்த பந்திலேயே வெளியேறினார்.

அர்ஷ்தீப் ஷர்மா 9 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். மொஹமத் சிராஜ் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் நசீம் ஷா 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் ஆமிர் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஜஸ்ப்ரிட் பும்ரா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

LPLஇல் நான்காவது தடவையாக முடிசூடா மன்னனானது...

2024-07-22 00:12:05
news-image

ஜெவ்னா கிங்ஸ் நான்காவது தடவையாக சம்பியனானது

2024-07-22 01:29:19
news-image

வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர்...

2024-07-21 15:57:37
news-image

இந்தியாவுக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடர்;...

2024-07-21 11:48:02
news-image

கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய 2ஆவது தகுதிகாணில்...

2024-07-20 23:50:06
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்தில் விஷ்மி...

2024-07-20 22:36:30
news-image

20 வயதின் கீழ் மகளிர் மத்திய...

2024-07-20 11:44:10
news-image

இலங்கையுடனான 2ஆவது இளையோர் டெஸ்டில் இன்னிங்ஸால்...

2024-07-20 10:59:00
news-image

யாழ். மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 10...

2024-07-20 01:04:53
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-19 20:45:59
news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26