அராலி வடக்கு நாகேந்திரமடம் திருவருள்மிகு புளியடி ஞானவைரவர் தேவஸ்தானத்தின் கும்பாபிஷேகப் பெருவிழாவின் கர்மாரம்பம் தமிழ்நாடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிவாச்சாரியார்கள் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூரியோதயத்திலிருந்து ஆரம்பமாகிறது.
எதிர்வரும் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எண்ணெய்க்காப்பு நடைபெறவுள்ளதோடு 12ஆம் திகதி புதன்கிழமை மகுஆ கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
தமிழர்களின் கட்டடக் கலைப்பாணியின் தோற்றுவாய்க்கு வித்திட்டவர்கள் பல்லவ மன்னர்கள்.
அவர்களில் கி.பி. 6-9ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை அரசாண்ட பல்லவ மன்னர்களில் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ,முதலாம் இராஜசிம்மன் ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்களால் வடிவமைக்கப்பட்ட ஆலயங்களை வரலாற்று ஆய்வாளர்கள் குடைவரைக் கோவில்கள், கற்றளிகள் அல்லது இரதக் கோவில்கள், கட்டுமானக் கோவில்கள் எனப்பகுத்துள்ளனர்.
பல்லரவர் கால அரசியலிலும் சரி கட்டடக்கலை மரபிலும் சரி சிங்கம் முக்கியம் பெற்றது. அதாவது முதலாம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ மன்னன் வடக்கே இருந்த ‘ஹதாபி’ என்ற இராச்சியத்தை வெற்றி கொண்ட பின்னர் தனது கொடியின் இலச்சினையாக இருந்த ரிஷபத்தை சிங்கமாக மாற்றியதாக வரலாறுகள் கூறுகின்றன.
இதனால் நரசிம்மவர்மனுக்குப் பின் வந்த பல்லவ மன்னர்களின் காலகட்டங்களில் சிங்கங்கள் முதன்மை வகிப்பதைக் காணலாம். இவ்வாறு பல்லவர் கால சிங்கமுக அடையாளங்களுடன் முற்று முழுக்க கருங்கற்களால் அமைக்கப்பட்டு காணப்படுகிறது கும்பாபிஷேகம் காணும் அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி ஞானவைரவர் ஆலயம்.
புளியடி ஞானவைரவர் தேவஸ்தானத்தின் வரலாறு நெடியது. வைரவர் என்ற வார்த்தையே பயங்கரவமானவர் என்ற பொருளுடையது. பாவம் செய்பவர்களுக்கு பயத்தைக் கொடுப்பவர் வைரவர். ஸ்ரீ வைரவர் எட்டு வகையான உருவம் கொண்டவர் என்றும் ஒவ்வொரு உருவமும் எட்டு விதமானவை என்ற அடிப்படையில் 64 வைரவர்களாக தம் முன்னோர்கள் வணங்கி வந்துள்ளதாக வைரவர் ஸர்வஸ்வம் என்ற சுவடி கூறுகிறது.
சிவபூமியான இலங்கைத் தீவின் வடக்கே இந்த ஞானவைரவர் ஆலயம் போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் தோற்றம் பெற்றதாகும். அராலி வடக்கைச் சேர்ந்த சைவப்பெரியார் வைரநாதர் கார்த்திகேசு, அராலி வடக்கிலுள்ள ‘அற்புதவாசா’ என்ற தனது வீட்டிலே ஐம்பொன்னாலான வைரவர் திரிசூலத்தை வைத்து வழிபட்டார்.
இவ்வழிபாடு வீட்டில் செய்வதைவிட தனியாக ஆலயம் அமைத்துச் செய்வதே சாலச்சிறந்தது என்பதை உணர்ந்து அராலி வடக்கு நாகேந்திர மடத்தடியில் உள்ள தனது சொந்தக் காணியின் புளியமரத்துக்கு கீழாக வழிபாடுகளை மேற்கொண்டார். அதன்பின்னர் அவ்வாலயம் புளியடி ஞானவைரவர் எனப் பெயர் பெற்றது.
வைரவநாதர் காத்திகேசுவைத் தொடர்ந்து அவரது புதல்வரான காத்திகேசு நடேசன் ஆலயத்தை முன் நடத்திச் சென்றதோடு அவரைத் தொடர்ந்து நடேசன் இராஜநாதன், நடேசன் திருக்குமாரன் ஆகியோர் வாழையடி வாழையாக பூஜை வழிபாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
புளியடியில் அமைக்கப்பட்ட இந்த வைரவர் ஆலயம் ஆரம்பத்திலேயே சுண்ணாம்புச் சுவர்களால் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன. கடந்த 2003ஆம் ஆண்டில் ஆலய ஸ்தாபகர் வைரவநாதர் கார்த்திகேசுவின் வம்ச கொள்ளுப்பேரனாகிய திருக்குமாரன் நடேசன் தலைமையில் புனருத்தாபனம் செய்யப்பட்டு 2006இல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
எனினும் தற்போது ஆலயம் மீண்டும் கும்பாபிஷேகம் காண்கின்றது. ஆலயத்தின் தர்மகர்த்தாவும் வம்சாவளி பேரனுமான வேதநெறிச்செல்வன் திருக்குமாரன் நடேசன் தலைமையில் இம்முறை ஆலயம் முற்றும் முழுவதும் கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்துள்ள இவ்வாலயத்தில் மூலமூர்த்தியாக ஐம்பொன்னினால் அமையப் பெற்ற முத்தலைச் சூலமும், எழுந்தருளி மூர்த்தியாக ஐம்பொன்னினால் உருவாக்கப்பட்ட வைரவர் திருவிக்கிரகமும், பரிவார மூர்த்தியாக விநாயகப் பெருமானும் இருக்கின்றனர்.
இவ்வாலயத்தின் தலவிருட்சமான புளியமரம் ஆலயத்தின் ஈசான மூலையில் தற்பொழுதும் உள்ளது. இவ்வாலயத்தின் தீர்த்தக் கிணறு ஆலயத்தின் வடக்கு வீதியில் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.
நகேந்திரமடம் வீதியூடாக வருகின்றபோது வீதியின் தெற்குத் திசையிலே வடக்கு நோக்கியதாக கருங்கற்களின் தூண்களை சிங்கங்கள் தாங்கி நிற்க இராஜகோபுரம் மூலஸ்தானம், விமானம், அர்த்தமண்டபம், வசந்தமண்டபம் பரிவார விநாயகர் ஆலயம் என்பவற்றோடு கலையம்சமாக ஆலயம் காட்சி தருகின்றது.
ஆலயத்தில் மொத்தம் 28 கருங்கற்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்களை கீழிருந்து சிங்கங்கள் தம்தலையில் தாங்கி நிற்கின்றன. முன்னமைந்துள்ள இரண்டு சிங்கங்களும் நாக்கை கீழே தொங்க விட்டவையாக கர்ஜனையுடன் இருப்பதைப் போன்றும் வசந்த மண்டப வாசலிலே அமைந்துள்ள சிங்கங்கள் முன்னங்கால்களை தூக்கிய வண்ணம் எழுந்து நிற்பவையாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தின் முன்னே அமைக்கப்பட்டுள்ள இராஜகோபுரத்தின் இரண்டு கரைகளிலும் இரண்டு நாசித் தலைகளும் நடுவில் கருங்கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கலசங்கள் ஐந்தும் காணப்படுவதோடு முற்பகுதியில் வைரப்பெருமானின் திருவிக்கிரகமும் நான்கு நந்திகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இராஜகோபுரத்தில் காணப்படும் கருங்கல்லிலான கலசங்களும் கோபுரத்தை அடுத்து இருமருங்கும் இருக்கும் நாசித் தலைகளும் சிறந்த கட்டடக்கலை மரபாக உள்ளது.
அடுத்து இவ்வாலயத்தில் சிறப்புப் பெறுவது மூலஸ்தானமாகும். வடக்கு நோக்கியதான மூலஸ்தானம் வாசலின் இரு பகுதிகளிலும் இரண்டு யானைக் கற்சிற்பங்களையும் வாயுவின் மேற்பகுதியில் கஜலக்சுமி அம்பாள் விக்கிரகத்தையும் வெளிப்பக்கத்தில் ஐந்து மாடக்கோவில்கள் அமைக்கப்பட்டு அவற்றில் முறையே நர்த்தன கணபதி, பிரம்ம ஹாத்தா, தெட்சணாமூர்த்தி, லிங்கோற்பவம், விஷ்ணு, துர்க்கை ஆகியோரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
மூலஸ்தானத்தின் மேற்பகுதியில் எண்கோணப் பண்டிகை அமைப்பில் விமானம் அமைக்கப்பட்டுள்ளதோடு கருண கூடுசாலைகள், நந்திகள் மற்றும் பூதநாதர்களின் சிற்பங்கள் என்பன கருங்கல்லினால் செய்யப்பட்டுள்ளன.
விமானத்தின் நான்கு திசைகளிலும் முறையே வடக்கில் பிரம்மதேவரும் கிழக்கில் வைரவரும் தெற்கில் கல்லால மரத்தில் அமைந்த தெட்சணாமூர்த்தியும் மேற்கே பத்மாசனத்தில் அமர்ந்த மகாவிஷ்ணுவும் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். விமானத்தின் மேல் பித்தளையிலான கவசம் காணப்படுகிறது.
அதேபோல அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட வசந்த மண்டபம், விநாயகர் ஆலயம் என்பன காணப்படுவதோடு பலிபீடம், சுணைவடிகளம் என்பனவும் பிரதி ஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாலயத்திலே தைப்பொங்கல், மாதவெள்ளி, சித்திராப் பௌர்ணமி, மணவாளக்கோலம் ஆகிய உற்சவங்கள் விசேடமானதாக இருப்பதோடு நித்திய பூசைகள் தினமும் காலை, மாலையில் நடைபெறுகின்றன.
எழில்மிகுந்த இந்த ஆலயத்தின் கட்டட மற்றும் சிற்ப பணிகளை முன்நின்று செய்தவர் தென்னிந்தியாவின் மாமல்லபுரம் ஸ்தபதி கலாநிதி தெட்சணாமூர்த்தியாவார்.
இவர் கன்னியாகுமரி கடற்பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை வடிவமைத்து கட்டிய ஸ்தபதி எஸ்.பி.ஆச்சாரியின் புதல்வரும், குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்து கட்டிய ஸ்தபதி கணபதியின் மருமகனும் ஆவார். அத்துடன் ஸ்தபதி கலாநிதி தெட்சணாமூர்த்தி இந்தியா பூராகவும், சர்வதேச நாடுகளிலும் பல்வேறு கோவில்களை சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைத்துள்ளார் என்பதும் விசேடமாகும்.
“பொன்னம்பலவாணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் உள்ளிட்ட புகழ்பூத்த ஆலய திருப்பணிகளை எனது முன்னோர்கள் மேற்கொண்டுள்ள நிலையில் இடைவெளிக்குப் பின்னர் அராலியூரில் ஞான வைரவர் ஆலயத்திருப்பணிகள் கருகற்களினால் ஆகம முறைகளுடன் முன்னெடுப்பதற்கு எனக்கு வாய்ப்புக் கிட்டியது” என்று ஸ்தபதி கலாநிதி தெட்சணாமூர்த்தி குறிப்பிட்டார்.
அத்துடன், “1300 வருட வரலாற்றைக் கொண்ட பல்லவர் கால கட்டட நுட்பங்களை அடியொற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள எட்டுப்பட்ட சிங்கத் தூண்கள் விசேடமானவையாக உள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம், “பல்லவர்கால நுட்பங்களுடன் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயமானது, ஈழத்தில் மிக முக்கியமானதாக இருப்பதோடு, வரலாற்றை மீளுருவாக்கம் செய்து பரம்பரைகளைக் கடந்தும் பேணிக்காப்பதாகவும் உருவெடுத்திருக்கின்றமை பெருமைக்குரியது” என்றும் ஸ்தபதி கலாநிதி தெட்சணாமூர்த்தி கூறினார்.
கலையம்சம் பொருந்தி, கண்டோரின் கண்களைக் கவரும் இவ்வாலயம் ஈழத்தில் தற்போதுள்ள ஆலயங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருப்பதோடு 21ஆம் நூற்றாண்டிலும் பல்லவர்கால கலையம்சம் சிறப்புற்றிருப்பதற்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.
சைவசித்தாந்தபண்டிதர் அராலியூர்
கணேசமங்களமூர்த்தி
தமிழாசிரியர், யாழ்.இளவாலை மெய்கண்டான் ம.வி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM