குர்பாஸ் துடுப்பாட்டத்திலும் பாறூக்கி, ராஷித் பந்துவீச்சிலும் அசத்தல்; சாதனைகள் பொழிந்து நியூஸிலாந்தை பந்தாடியது ஆப்கானிஸ்தான்

08 Jun, 2024 | 01:05 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக கயானா, ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் இன்று (8) காலை (இலங்கை நேரப்படி) நடைபெற்ற சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்தாடிய ஆப்கானிஸ்தான் சகலதுறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்ததுடன் சாதனைகளையும் பொழிந்து 84 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.

ஏற்கனவே உகண்டாவை 125 ஓட்டங்களால் வெற்றிகொண்டிருந்த ஆப்கானிஸ்தான் இந்த வெற்றியுடன் தனது குழுவில் 4 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் உள்ளது.

ரஹ்மானுல்லா குர்பாஸ் குவித்த தொடர்ச்சியான இரண்டாவது அரைச் சதம், பஸால் பாறூக்கி, அணித் தலைவர் ராஷித் கான் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன ஆப்கானிஸ்தானுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் முதல் தடவையாக நியூஸிலாந்தை ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டுள்ளது.

இதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 4 சந்தர்ப்பங்களிலும் (2015, 2019, 2023 உலகக் கிண்ணம், 2021 ரி20 உலகக் கிண்ணம்) நியூஸிலாந்தே வெற்றிபெற்றிருந்தது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் 87 பந்துகளில் 103 ஓட்டங்க்ளைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அத்துடன் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் 100க்கும் மெற்பட்ட ஓட்டங்களைப் பகிர்ந்த முதலாவது ஆரம்ப ஜோடி என்ற சாதனையை குர்பாஸும் ஸத்ரானும் நிலைநாட்டினர்.

அவர்கள் இருவரும் உகண்டாவுக்கு எதிராக  ஆரம்ப விக்கெட்கல் 154 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதுவே ரி20 உலகக் கிணணப் போட்டியில் ஆப்காஸ்தானின் சகல விக்கெட்களுக்குமான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாகப் பதிவானது. 

அத்துடன் அடுத்தடுத்த போட்டிகளில் குர்பாஸ் அரைச் சதங்கள் குவித்தமை மற்றொரு விசேட அம்சமாகும்.

உகண்டாவுக்கு எதிராக 76 ஓட்டங்களைப் பெற்ற ரஹ்மானுல்லா குர்பாஸ், இந்தப் போட்டியில் 56 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன் மூலம் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் குர்பாஸ் அபூர்வ சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.

உகண்டாவுனான போட்டியில் குர்பாஸ் பெற்ற 76 ஓட்டங்களைவிட குறைவான மொத்த எண்ணிக்கையையே (58 ஓட்டங்கள்) உகண்டா பெற்றது.

இந்தப் போட்டியில் அவர் பெற்ற 80 ஓட்டங்களைவிட குறைந்த மொத்த எண்ணிக்கையையே (75 ஓட்டங்கள்) நியூஸிலாந்து பெற்றது.

அவரைவிட, இப்ராஹிம் ஸத்ரான் 44 ஓட்டங்களையும் 3ஆம் இலக்க வீரர் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆனால், மொஹமத் நபி (0), ராஷித் கான் (6), குல்பாதின் நய்ப் (0) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெட் ஹென்றி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சில் சிக்கித் திணறிய நியூஸிலாந்து 15.2 ஓவர்களில் சகல விக்கெட்ளையும் இழந்து 75 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நியூஸிலாந்து பெற்ற இரண்டாவது மிகக்குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும். பங்களாதேஷில் 2014இல் இலங்கைக்கு எதிராக பெற்ற 60 ஓட்டங்களே நியூஸிலாந்தின் மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.

நியூஸிலாந்து இன்னிங்ஸில் மத்திய வரிசை வீரர் க்ளென் பிலிப்ஸ் (18), பின்வரிசை வீரர் மெட் ஹென்றி (12) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராஷித் கான் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில்  அடுத்தடுத்த போட்டிகளில் 4 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த முதலாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை பஸால்ஹக் பாறூக்கி தனதாக்கிக்கொண்டார். 

உகண்டாவுடனான போட்டியில் பஸால்ஹக் பாறூக்கி 9 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இதேவேளை, ராஷித் கான் சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் 17ஆவது 4 விக்கெட் குவியலைப் பதிவுசெய்துள்ளார். சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அவர் 8 தடவைகள் 4 விக்கெட் குவியலை பதிவுசெய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை...

2024-09-18 16:51:08
news-image

நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள்...

2024-09-18 12:34:13
news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41