வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அப்பிரதேச மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தீர்வு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் முஸ்லிம் சிவில் அமைப்புகளிடம் உறுதியளித்துள்ளார். மேலும் அப்பிரதேசம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழும் வர்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அதனை மேற்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைகொப்பிமிட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலினால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையைத் தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அச்சந்திப்பின்போதே செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று பி.ப. 2 மணி முதல் மாலை 4 மணி வரையில் தொடர்ந்த குறித்த சந்திப்பில் மன்னார் அரசாங்க அதிபர் வை.தேஷப்பிரிய, வன விலங்கு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்கள அதிகாரிகள், மகவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சின் அகாரிகள் உட்பட உயர் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

முஸ்லிம் சிவில் அமைப்புகள் சார்பில் ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் எம்.எம். முபாரக் மௌலவி, ஏ.சி. கலீல் மௌலவி, முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என். எம். அமீன், உப தலைவர் ஹில்மி அஹமட், செயலாளர் எஸ். ஏ. அஷ்கர்கான், சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். ஷஹீட் உட்பட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதன்போது குறித்த வர்த்தமானி அறிவித்தலினால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகம் அதானல் அம்மக்கள் தற்போது கொந்தளித்துள்ளதாகவும் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேலும் இன்று (நேற்று) வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கும் திட்டமிட்டிருந்தனர். இருந்தபோதிலும் ஜனாதிபதி, குறித்த பிரச்சினைக்கு எவருக்கும் பாதிப்பில்லாத தீர்வு முன்வைப்பதாகவும் ஆகவே  எதிர்ப்பு நடவடடிக்கைகளை கைவிடுமாறும் வேண்டிக்கொண்டதற்கிணங்க இன்று(நேற்று) ஹர்தால் கைவிடப்பட்டது.

அத்துடன் முஸ்லிம்கள் அமைதியான முறையில் இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கே எதிர்பார்க்கின்றர். ஆகவே ஜனாதிபதி கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள வர்த்மானி அறிவித்தலை இரத்து செய்து அப்பிரதேச மக்களின் காணிகளை அவர்கள் பெற்றுக்கொள்வதற்கான உரித்தை உறுதிசெய்ய வேண்டும். 

மேலும் இவ்விவகாரத்தில் உத்தியோகபூர்வ முடிவெடுக்கும் வரையில் குறித்த வர்த்மானியை இடைநிறுத்தவேண்டும் எனவும் முஸ்லிம் சிவில் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறைப் பேராசிரியர் நௌபல் வில்பத்து தொடர்பான ஒளிப்பட விவரணங்களையும் சமர்ப்பித்து விளக்கமளித்தார்.

ஆகவே வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்ட செயலாளர், அவ்வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் குறித்த பிரதேசங்களை வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அதனை மேற்கொள்ளப்போவதில்லை எனவும் உறுதியளித்தார். 

ஆகவே வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரதேச மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையிலான தீர்வை விரைவில் பெற்றுத்தருவாதாகவும் செயலாளர் உறுதியளித்துள்ளார்.