(நெவில் அன்தனி)
ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெற்றுவரும் 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் டி குழுவில், தனது 2ஆவது போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கிய இலங்கை 2 விக்கெட்களால் பங்களாதேஷிடம் தோல்வி அடைந்தது.
ஏற்கனவே தென் ஆபிரிக்காவிடம் தோல்வி அடைந்த இலங்கை, சுப்பர் 8 சுற்றுக்கு செல்வது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
டலாஸ் க்ராண்ட் ப்ரெய்ரீ விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று காலை நடைபெற்ற இந்தப் போட்டியில் சுமாரான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட போதிலும் கடைசிக் கட்டத்தில் விறுவிறுப்பை தோற்றுவித்தது.
பங்களாதேஷின் முதல் 3 விக்கெட்களை 28 ஓட்டங்களுக்குள் வீழ்த்தியதால் இலங்கை உற்சாகம் அடைந்தது.
ஆனால், லிட்டன் தாஸ், தௌஹித் ரிதோய் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகர்ந்து மொத்த எண்ணிக்கையை 91 ஓட்டங்களாக உயர்த்தினர்.
நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய லிட்டன் தாஸ் 36 ஓட்டங்களையும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தௌஹித் ரிதோய் 20 பந்துகளில் ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்களுடன் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
அப்போது (11.3 ஓவர்கள்) வலுவான நிலையில் இருந்த பங்களாதேஷ் இலகுவான வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷின் 5 விக்கெட்களை இலங்கை வீழ்த்தி போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இலங்கையின் முதன்மை பந்துவீச்சாளர்கள் தங்களது 4 ஓவர்களை வீசி முடித்திருந்ததால் கடைசி 2 ஓவர்களை வீசுவதற்கு டெத் ஓவர் பந்துவீச்சாளர்கள் மிஞ்சவில்லை.
கடைசி இரண்டு ஓவர்களில் பங்களாதேஷின் வெற்றிக்கு 2 விக்கெட்கள் மீதமிருக்க 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
19ஆவது ஓவரை தசுன் ஷானக்க வீச முதல் பந்திலேயே மஹ்முதுல்லா சிக்ஸ் விளாசி தனது அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்தார். அதே ஒவரின் கடைசிப் பந்தில் ஓவர் த்ரோ மூலம் 2ஆவது ஓட்டத்தைப் பெற்ற பங்களாதேஷ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.
முன்னாள் அணித் தலைவர் மஹ்முதுல்லா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பந்துவீச்சில் நுவன் துஷார மிகத் துல்லியமாக பந்துவீசி 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
அணித் தலைவர் வனிந்து ஹசரங்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன் மூலம் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 108ஆக உயர்த்திக்கொண்ட வனிந்து ஹசரங்க, சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற மைல்கல் சாதனையை நிலைநாட்டினார்.
லசித் மாலிங்கவின் 107 விக்கெட்கள் என்ற இலங்கைக்கான முன்னைய சாதனையையே வனிந்து ஹசரங்க முறிடியத்தார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது.
தென் ஆபிரிக்காவுடனான போட்டியில் போன்றே கவனக்குறைவான துடுப்பாட்டமே இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமைந்த போதிலும் அதனை ஆரம்ப வீரர்களால் நிலையாக வைத்திருக்க முடியாமல் போனது.
குசல் மெண்டிஸ் (10), கமிந்து மெண்டிஸ் (4) ஆகிய இருவரும் கவன்குறைவான அடி தெரிவுகளால் ஆட்டம் இழந்தனர். 3ஆம் இலக்கத்தில் சாதிக்கக்கூடியவர் என எதிர்பார்க்கப்பட்ட கமிந்து மெண்டிஸ் இரண்டாவது தடவையாக குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
சதீர சமரவிக்ரவுக்குப் பதிலாக இப் போட்டியில் இணைத்துக்கொள்ளப்பட்ட சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைப் பெற்ற வண்ணம் இருந்தார்.
மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க 47 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தது இலங்கைக்கு பேரிடியைக் கொடுத்தது.
தொடர்ந்து உதவி அணித் தலைவர் சரித் அசலன்க (19), அணித் தலைவர் வனிந்து ஹசரங்க (0) ஆகிய இருவரும் 15ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.
வனிந்து ஹசரங்க மீண்டும் மோசமான அடி தெரிவினால் தனது விக்கெட்டைத் தாரைவார்த்தார்.
தனஞ்சய டி சில்வா 21 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிஷாத் ஹொசெயன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ரிஷாத் ஹொசெய்ன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM