நிறைவடைந்த இந்திய மக்களவைத் தேர்தல் பல சுவாரசியமான அம்சங்களை கொண்டிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியும், அக்கட்சியின் பிரதமரான நரேந்திர மோடியும் பிரச்சாரத்தில் தெரிவித்தபடி 400 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெறவில்லை. அதற்கு மாறாக ஆட்சி நடத்துவதற்கு போதிய அளவிலான பெரும்பான்மையை மட்டுமே மக்கள் அக்கூட்டணிக்கு வழங்கி இருக்கிறார்கள்.
இதன் மூலம் நாட்டில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு பாஜகவால் இனி தன்னிச்சையாக முடிவெடுக்க இயலாத சூழல் வாக்காளர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய வாக்காளர்கள் வாய்ப்பு வழங்கினாலும். இந்த முறை பாஜக கட்சி, அக்கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ்குமார் ஆகியோரை கலந்து ஆலோசித்த பிறகே செயல்பட முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது என தேர்தல் அரசியலில் அனுபவிக்க அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகளை சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிர்ச்சி அளித்திருக்கும் சம்பவமும் இந்த மக்களவைத் தேர்தலில் அரங்கேறி இருக்கிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலம் காதூர் சாகிப் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் அம்ரித்பால் சிங்- (இவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்) சிறையில் இருந்தபடியே போட்டியிட்ட இவர் அந்தத் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை விட 1,97,220 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இவரது வெற்றி அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்திருப்பதுடன் வியப்படையவும் செய்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டவர் ஷேக் அப்துல் ரஷீத்- பொறியாளரான இவர் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்) இவரும் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு, ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லாவை 2,04,242 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்றிருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சங்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறக்கப்பட்ட சஞ்சய் பாட்டீல் என்பவரை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் கட்சியிலிருந்து அனுமதி கிடைக்காததால்... அக்கட்சியினைச் சேர்ந்த விஷால் பாட்டீல் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் 1,00,053 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
லடாக் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர் முகமது ஹனீபா. இவர் இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர் ஆகிய இருவரையும் வீழ்த்தி 27,903 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
கோவா மாநிலத்தில் உள்ள டையூ & டாமன் எனும் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட பட்டேல் உமேஷ் பாய் பாபு பாய் ... தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 42,523 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
பீஹார் மாநிலம் பூர்னியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ராஜேஷ் ரஞ்சன் எனும் பப்பு யாதவ்- எதிர்த்துப் போட்டியிட்ட ஜனதா தள் வேட்பாளரை விட 23,847 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பியாந்த் சிங்கின் மூத்த மகனான சரப்ஜித் சிங் கல்சா - பஞ்சாப் மாநிலம் ஃபரீத்கோட் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலித்தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை விட 70,053 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியில் அங்கம் வகித்த பத்துக்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமாணிக், மத்திய நீர்வளம் மற்றும் நதி மேம்பாட்டு துறை அமைச்சர் சஞ்சீவ் பல்யான் என பலர் தோல்வியை சந்தித்திருக்கிறார்கள்.
தமிழக அரசியல் அரங்கத்தில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கும் நாம் தமிழர் கட்சி
நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் அந்தக் கட்சி பன்னிரண்டு தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேலான வாக்குகளை பெற்றிருக்கிறது. அத்துடன் ஆறு தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜகவை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறது.
குறிப்பாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், தூத்துக்குடி, திருச்சி, திருவள்ளூர், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், தென்காசி ஆகிய பன்னிரண்டு தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளி இருக்கிறது.
கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருச்சி, ஈரோடு, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் மூன்றாம் இடத்தை இந்த கட்சி பிடித்திருக்கிறது.
தேர்தலில் பதிவான வாக்குகளில் 8.19 சதவீத வாக்குகளை பெற்றிருப்பதால் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்டு சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்றால் மாநிலக் கட்சிக்கான அந்தஸ்தை வழங்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. இந்த விதிமுறையின் படி நாம் தமிழர் கட்சி எட்டு சதவீதத்தை விட கூடுதல் வாக்குகளை பெற்றிருப்பதால் இந்த முறை மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை நாம் தமிழர் கட்சி பெறுகிறது. இதற்குரிய ஆவணங்களை விரைவில் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தின் தாக்கல் செய்யப்படும் என்றும், அதன் பிறகு மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அக்கட்சிக்கு விரும்பும் சின்னம் எதிர்வரும் தேர்தலில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் தொல் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அதிகாரப்பூர்வமான மாநில கட்சி என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். இக்கட்சி போட்டியிட்ட சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால் இந்த கட்சிக்கு மாநில கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி நாற்பது தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சிக்கும், இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் மாநில கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்திருப்பதால் தமிழக வாக்காளர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM