“ஒரு முறை எனக்கு ஏற்பட்ட கோபத்தினால், களத்தில் இருந்த ஸ்டம்ப் ஒன்றைப் பிடுங்கி கோலியைக் குத்தவும் விரும்பினேன்” என்று கூறியுள்ளார் அவுஸ்திரேலிய முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எட் கோவன்.

இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டிகளும், அதைச் சார்ந்து எழுந்த சர்ச்சைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் நிலையில், அதை மீண்டும் கிளப்பியுள்ளார் எட் கோவன். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியொன்றின்போது, தனக்கு ஏற்பட்ட கோபத்தினால் கோலியை ஸ்டம்ப்பால் குத்த விரும்பியதாகத் தெரிவித்தார்.

“ஒரு போட்டியின் நடுவே நான் கடுமையாக சுகவீனமுற்றேன். அப்போது என்னைப் பார்த்து மிக மிகத் தவறான வார்த்தைப் பிரயோகம் செய்தார் கோலி. எனக்கு வந்த கோபத்திற்கு, களத்தில் இருந்த ஸ்டம்ப்பைப் பிடுங்கி அவரைக் குத்த நினைத்தேன். ஏனெனில், அவர் பயன்படுத்தியது தாங்கிக்கொள்ள முடியாத அளவு தவறான வார்த்தைகள். என்றபோதும், ஒரு கட்டத்தில் அதை நான் அலட்சியம் செய்து விட்டேன். காரணம், ஆங்கிலம் அவரது தாய் மொழி அல்ல. எமக்கு ஹிந்தி தெரியாது. எனவே, அவரது கோபத்தை, அதிருப்தியை நான் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் அப்படிக் கூறியிருக்கலாம். மற்றும்படி கோலியின் தீவிர ரசிகன் நான். அவரது ஆட்டம் மிக மிகத் தனித்துவமானது. அதை நான் மிகவும் மதிக்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.