அஸ்வெசும கொடுப்பனவுத் திட்ட புதிய முறைமையை முழுமையாக மாற்றாமல் குறைபாடுகளை நிவர்த்திக்க முடியும் - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

Published By: Selva Loges

04 Jun, 2024 | 05:14 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அஸ்வெசும கொடுப்பனவு நடவடிக்கைகளில் மூன்று தசாப்தங்களுக்கு மேல் நடைமுறையில் இருந்த முறைமையையே நாம் மாற்றியுள்ளோம் அதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்யலாம் எனினும் அந்த முறைமையை முழுமையாக நீக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) எதிர்க்கட்சி எம்பி ஹர்ச டி சில்வா எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானதாகும். இந்த மாதம் 15 ஆம் திகதியளவில் உறுதிப்படுத்தப்படும் இந்த இரண்டாம் கட்ட விடயங்கள் முக்கியமானவை.  மூன்று தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையையே நாம் தற்போது மாற்றியுள்ளோம்.  இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத அல்லது அதனை விரும்பாத தரப்பினரும் உள்ளனர்.

பழைய முறைமையையே முன்னெடுத்து அதிலுள்ள தவறுகள் அது தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என சிந்திக்கும் தரப்பினரும் உள்ளனர்.

எவ்வாறெனினும் இந்த நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அந்த குறைபாடுகளை நாம் தற்போது இனங்கண்டு கொண்டுள்ளோம்.

அது தொடர்பில் அரச அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்தியே குறித்த முறைமையில் மாற்றங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேவேளை, கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி முதல் இன்று வரை பிரதிபலனை பெற்றுக் கொள்ளாத பயனாளிகளும் உள்ளனர். அது தொடர்பான விபரங்களை நாம் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவுக்கு இந்த வாரத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம்.

அந்தக் குழுவின் அங்கீகாரம் கிடைத்ததும் நாம் அடுத்த வாரத்தில் அதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு அதனை நிறைவேற்றி, அடுத்து வரும் திங்கட்கிழமை முதல் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும். 

அந்த வகையில் பிரதிபலன்கள் கிடைக்காதவர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமைக்கு ஏற்ப அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும்.

புதிய பொருளாதார நோக்கத்திற்கு இணங்க புதிய முறைமையுடன் நாம் பயணிக்கும் போது குறைபாடுகள்  இருக்கலாம். எனினும் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். அதிலுள்ள நன்மை தீமைகள் அனைத்தையும் ஆராய்ந்து குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு முன்னோக்கிச் செல்வதே சிறந்தது. 

அந்த வகையில் புதிய முறைமையை முழுமையாக நீக்க முடியாது. எனினும் அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் அர்ப்பணிப்புடன்  செயற்படுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்