களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை, மறைத்து வைத்து உதவி வழங்கிய இரண்டு சந்தேகநபர்களே பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சந்தேக நபர்கள் மொரட்டுவை மற்றும் பண்டாரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் திருடப்பட்டுள்ள வேனுக்கு, போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தாக்குதலுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், குற்றச் செயல் முடிந்தவுடன் போலி இலக்கத் தகடை அகற்றிவிட்டு, மீண்டும் உண்மையான இலக்கத்தகடை பொருத்தி மொரகஹஹேன பிரதேசத்தில் வேனை விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட உடைகள் கிதெல்பிட்டிய பிரதேசத்தில் தீயிட்டு எரிக்கப்பட்டதாகவும், குறித்த இடத்திலிருந்து சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக கருதப்படும் 2 போலி இலக்கத் தகடுகள் மற்றும் சில பாதணி ஜோடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.