(நெவில் அன்தனி)
நியூயோர்க் நசவ் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் டி குழுவுக்கான ஆரம்ப போட்டியில் இலங்கையை 77 ஓட்டங்களுக்கு சுருட்டிய தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
அன்றிச் நோக்கியாவின் 4 விக்கெட் குவியலுடனான துல்லியமான பந்துவீச்சு தென் ஆபிரிக்காவின் வெற்றியை இலகுவாக்கியது.
இந்தப் போட்டியில் இலங்கை பெற்ற 77 ஓட்டங்கள் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கையினால் பெறப்பட்ட மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை ஆகும்.
நசவ் செயற்கை ஆடுகளத்தில் முதல் தடவையாக விளையாடப்பட்ட இந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளினதும் வீரர்கள் துடுப்பெடுத்தாடுவதில் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்தப் போட்டி இலங்கையின் பந்துவீச்சுக்கும் தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்டத்துக்கும் இடையிலான போட்டியாக அமையும் என எதிர்வுகூறப்பட்டது.
ஆனால் இரண்டு அணிகளினதும் பந்துவீச்சாளர்களுக்கும் துடுப்பாட்ட வீரர்களுக்கும் இடையிலான போட்டியாக இது அமைந்திருந்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களை சரியாக எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை அணியில் மூவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் மத்திய வரிசையில் இருவரும் பின்வரிசையில் இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.
ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க (3), கமிந்து மெண்டிஸ் (11), அணித் தலைவர் வனிந்து ஹசரங்க (0), சதீர சமரவீர (0), குசல் மெண்டிஸ் (19), சரித் அசலன்க (6) ஆகிய அறுவரும் ஆட்டம் இழக்க 12 ஆவது ஓவரில் இலங்கையின் மொத்த எண்ணிக்கை வெறும் 45 ஓட்டங்களாக இருந்தது.
ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 23 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தசுன் ஷானக்க 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அவர்கள் இருவரது இணைப்பாட்டமே இலங்கை இன்னிங்ஸில் அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது.
அவரைத் தொடர்ந்து ஏஞ்சலோ மெத்யூஸ் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
மதீஷ பத்திரண, நுவன் துஷார ஆகிய இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.
மஹீஷ் தீக்ஷன 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் அன்றிச் நோக்கியா 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கேஷவ் மகாராஜ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
78 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 16.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
தென் ஆபிரிக்காவுக்கும் துடுப்பாட்டம் இலகுவாக அமையவில்லை.
ஆரம்ப வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் 4 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தார்.
மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது ட்ரைஸ்டன் ஸ்டப்ஸின் சற்று கடினமான பிடியை விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் தவறவிட்டார்.
குவின்டன் டி கொக், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 28 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது குவின்டன் டி கொக் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (51 - 3 விக்.)
மேலும் 7 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தபோது ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஆனால், ஹென்றிச் க்ளாசன் (19 ஆ.இ.), டேவிட் மில்லர் (6 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 20 ஓட்டங்களைப் பெற்றுகொடுத்தனர்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தசுன் ஷானக்க ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நுவன் துஷார 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை யும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன்: அன்றிச் நோக்கியா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM