அறிவுரை கூறிய தாயாரை மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்ற தனயன்!

ஐ.எஸ். அமைப்பிலிருந்து விலகுமாறு அறிவுரை கூறிய தாயை, அவரது மகன் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்றதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில்,

சிரியாவின் ராக்கா நகரில், அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் லீனா என்ற பெண், ஐ.எஸ். உறுப்பினரான தனது மகன் அலி சாக்கரை (வயது 20) அந்த அமைப்பிலிருந்து விலகுமாறு அறிவுரை கூறியுள்ளார்.

இதை தனது அமைப்பினரிடம் அலி சாக்கர் கூறவே, லீனாவை ஐ.எஸ். 'அதிகாரிகள்' கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, மதத் துரோகத்தில் ஈடுபட்டதாக லீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

லீனா பணியாற்றும் அஞ்சல் அலுவலகம் அருகே, பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது மகன் துப்பாக்கியால் சுட்டு அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளார். மகனே தன் தாயைப் படுகொலை செய்த காட்சியைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.