(நா.தனுஜா)
இலங்கையின் ஜனநாயகம் என்பது ஜனாதிபதித்தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களல் வாக்களிப்பதன் ஊடாக பொதுமக்கள் அவர்களது தலைவர்களின் கொள்கைகளை நிராகரிப்பதற்குக் கொண்டிருக்கும் இயலுமையிலேயே தங்கியிருக்கின்றது. எனவே ஜனநாயகத்தைக் கேள்விக்குட்படுத்தக்கூடியவாறான 'தேர்தல் பிற்போடல்' முயற்சிகள் முற்றுமுழுதாக நிராகரிக்கப்படவேண்டும் என சட்டத்தரணிகள் கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கவேண்டும் எனவும், அதனை முன்னிறுத்தி பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றைக் கொண்டுவரவேண்டும் எனவும் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளர்ர.
இருப்பினும் மக்களின் வாக்களிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் உரிய காலப்பகுதியில் தேசிய தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், பாலித்த ரங்கே பண்டாரவின் இக்கருத்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது.
குறிப்பாக இக்கருத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கும் சட்டத்தரணிகள் கூட்டிணைவு, இதனை இலங்கையில் 'ஜனநாயகப் பற்றாக்குறை' என வர்ணித்துள்ளது. அதுமாத்திரமன்றி கடந்த 2022 ஆம் ஆண்டு உருவான 'அரகலய' என அறியப்படும் பாரிய மக்கள் எழுச்சியானது அரசாங்கம் மற்றும் அதன் அதிகாரிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது எனவும், மக்களின் நிராகரிப்புக்கு மத்தியில் ஆட்சியைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜனாதிபதிக்கு ஜனநாயகக்கோட்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கும், மக்கள் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதற்குமான கடப்பாடு இருக்கின்றது எனவும் சட்டத்தரணிகள் கூட்டிணைவு சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும் அத்தகு ஜனாதிபதி 2023 இல் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களை நடத்துவதைத் தாமதப்படுத்தியதாகவும், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள அக்கூட்டிணைவு, அதற்கு மாறாக ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசியலமைப்புத்திருத்தமொன்று அவசியம் எனவும், அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், சர்வசன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அனுமதியும் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு பெரும்பான்மை மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட விடயத்தைக் கோருகின்ற பாலித்த ரங்கே பண்டாரவின் இக்கருத்து மிகவும் ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள் கூட்டிணைவு, இது அரசியலமைப்புக்கு முரணானது எனவும், நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாகவும், பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைத் தவறாகப் பயன்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் விசனம் வெளியிட்டுள்ளது.
'இலங்கையின் ஜனநாயகம் என்பது ஜனாதிபதித்தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களல் வாக்களிப்பதன் ஊடாக பொதுமக்கள் அவர்களது தலைவர்களின் கொள்கைகளை நிராகரிப்பதற்குக் கொண்டிருக்கும் இயலுமையிலேயே தங்கியிருக்கின்றது. எனவே ஜனநாயகத்தைக் கேள்விக்குட்படுத்தக்கூடியவாறான இத்தகைய நடவடிக்கைகள் முற்றுமுழுதாக நிராகரிக்கப்படவேண்டும்' எனவும் சட்டத்தரணிகள் கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM