கவித்துவமான எக்சன் பொழுதுபோக்கு திரைப்படம் தான் 'மழை பிடிக்காத மனிதன்' - இயக்குநர் விஜய் மில்டன்

Published By: Digital Desk 7

29 May, 2024 | 05:20 PM
image

விஜய் அண்டனி , 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார், 'புரட்சித் தமிழன்' சத்யராஜ் ஆகியோர் இணைந்திருக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கமர்ஷியல் திரைப்படம் என்றாலும், கவித்துவமான கமர்சியல் படம்'' என அப்படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் தெரிவித்திருக்கிறார்.‌

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, மேலும் புரட்சித் தமிழன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

 இவர்களுடன் மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன், தனஞ்ஜெயா, தலைவாசல் விஜய், பிருத்வி அம்பெர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  அச்சு ராஜா மணி இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, பிரதீப், லலிதா தனஞ்செயன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழா ஒன்றில் படக் குழுவினர் பங்கு பற்றினர். இந்நிகழ்வில் ஒளிப்பதிவாளர்- இயக்குநர்- கவிஞருமான எஸ். டி. விஜய் மில்டன் எழுதிய 'விலக்கப்பட்ட கனிகளின் கதை 'எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' விஜய் அண்டனியும், நானும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நட்புடன் பழகி வரும் நண்பர்கள்.‌ அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவரை வைத்து இப்போதுதான் 'மழை பிடிக்காத மனிதன்' எனும் படத்தை இயக்கியிருக்கிறேன். இந்தக் கதை விஜய் அண்டனிக்கு பொருத்தமான கதை. 

இந்தக் கதையை மறைந்த கேப்டன் விஜயகாந்த்தை மனதில் வைத்து தான் எழுதத் தொடங்கினேன். அவரை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க பெரிதும் முயற்சித்தோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அவரை திரையில் காண்பிக்கவும் முயற்சித்தோம். ஆனால் அவரது குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வமான அனுமதி கிடைக்கவில்லை. அந்தத் தருணத்தில் புரட்சித் தமிழன் சத்யராஜை சந்தித்து அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவுடன் ஒப்புக்கொண்டார்.  இந்தத் திரைப்படம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் பிடிக்கும் என்றாலும், வணிக அம்சங்களை கடந்து, கவித்துவமான உணர்வு ஒன்றையும் படமாக்கி இருக்கிறோம். இது ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும். '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right