(நா.தனுஜா)
வீரகேசரி வார இதழில் தொடர்ச்சியாக வெளியான பேராசிரியர் சி.பத்மநாதனின் 'ஆதிகால யாழ்ப்பாணம்' நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய அறிஞர்கள், இந்நூல் தற்கால சூழ்நிலையில் மிகவும் அவசியமானது என வலியுறுத்தியதுடன், இதனை சிங்களமொழியிலும் வெளியிடவேண்டும் எனச் சுட்டிக்காட்டினர்.
பேராசிரியர் சி.பத்மநாதனால் எழுதப்பட்டு 'வீரகேசரி' வார இதழில் 'இலங்கைத் தமிழர் வரலாறு' எனும் தலைப்பில் தொடர்ச்சியாக வெளியான கட்டுரைகளின் தொகுப்பான 'ஒரு மறைந்துபோன நாகரிகத்தின் தரிசனங்கள் - ஆதிகால யாழ்ப்பாணம்' நூல் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 5.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி க.கனக ஈஸ்வரன், 'ஒரு மறைந்துபோன நாகரிகத்தின் தரிசனங்கள் - ஆதிகால யாழ்ப்பாணம் - சமுதாயம், பண்பாடு எனும் இந்நூலில் கி.மு 300 - கி.பி 500 வரை உள்வாங்கப்பட்டிருக்கின்றது. இதுவொரு முக்கிய வெளியீடாகும். மிகவும் அவசியமானதொரு காலகட்டத்தில் வெளியாகியிருக்கின்றது. இது ஏன் அவசியமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த நூலில் அடங்கிய தொல்லியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை முதன்முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது வீரகேசரி வார இதழ் தான். ஒருநாள் யாழ்ப்பாணத்தில் ஞாயிறு வீரகேசரியைப் பார்த்தபோது பேராசிரியர் பத்மநாதனின் புகைப்படம் இருந்தது. அவர் என்ன எழுதுகிறார் என்று வாசித்துப் பார்த்தேன். சுமார் ஒருவருடகாலமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வீரகேசரி பத்திரிகையில் இந்தக் கட்டுரைகள் பிரசுரமாகியிருந்தன. எனவே இக்கட்டுரைத்தொகுப்பு வீணாகிவிடக்கூடாது எனவும், இதனை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புத்தக வடிவில் பிரசுரிக்கவேண்டும் எனவும் விரும்பினேன். அந்நேரத்தில் எனது நண்பர் சிரேஷ்ட சட்டத்தரணி காண்டீபன் என்னை தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டார். தான் தமிழ்ச்சங்கத்தில் தலைவராகத் தெரிவாகியிருப்பதாகவும், அவர்களது ஆலோசனைக்குழுவில் ஒருவராக நானும் இணைந்துகொள்ளவேண்டும் எனவும் என்னிடம் கேட்டுக்கொண்டார். அப்போது நான் பேராசிரியர் பத்மநாதன் இவ்வாறு தொடர் கட்டுரைகளை எழுதியிருப்பதாகவும், அவற்றை தமிழ்ச்சங்கம் புத்தகமாகப் பிரசுரிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்தேன். 2022 ஏப்ரல் மாதமளவில் உருவான இந்தக் கனவு இன்று நனவாகியிருக்கின்றது. இந்தப் புத்தகத்தின் பெயரைப் பாருங்கள். மறைந்துபோனதை மறந்துபோகாமல் இருப்பதற்குத் தான் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டிருக்கின்றது. எனவே இக்காலகட்டத்தில் மிகவும் முக்கியமான இந்நூலை நீங்கள் ஆதரிக்கவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
அவரைத்தொடர்ந்து கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் வெளியீட்டுரை ஆற்றினார். அதன்போது 'கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்களாக அறிஞர் பெருமக்கள் 15 பேரை நியமிக்கவேண்டியிருந்தது. அதற்காக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி தொடர்பு கொண்டபோது அவர் அமெரிக்காவில் இருந்தார். அப்போது பேராசிரியர் பத்மநாதனின் கட்டுரைகள் வீரகேசரியில் தொடர்ச்சியாக வெளியாகிவருவதாகவும், அவற்றை நூல் வடிவத்தில் வெளியிடவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். ஈழத்தமிழினத்தின் வேர்களையும், வரலாற்று உண்மைகளையும் வெளிக்கொணரவேண்டிய அவசியம் நிலவிய பின்னணியில் அவர் இந்த முன்மொழிவைச் செய்தார். அதனையடுத்து நாங்கள் பேராசிரியரை தொடர்புகொண்டு பேசியபோது, சங்கத்துடன் இணைந்து இந்த வெளியீட்டைச் செய்வதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார். அதன்படி எமது நாட்டின் தமிழ்ப்பரப்பில் மிகமுக்கிய வெளியீட்டாளரான குமரனிடம் இந்த விடயத்தை எடுத்துரைத்து, அவருடைய அளப்பரிய பணியின் ஊடாகவே இந்நூல் வெளியாகியிருக்கின்றது' எனத் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி இவ்வாறான புத்தகங்களை வீட்டுக்குள் இருந்தவாறு எழுதமுடியாது எனவும், மாறாக உரிய சான்றுகளைத்தேடி வட, கிழக்கு மாகாணங்கள் முழுவதும் பயணிக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய காண்டீபன், வெடுக்குநாறிமலையில் தான் அவதானித்த கல் பற்றி பேராசிரியரிடம் கூறியபோது, அது நாகர்காலப் பண்பாட்டுக்குரிய தூண்தாங்கு கல் என அவர் விளக்கமளித்ததாகவும் குறிப்பிட்டு, இதுபோன்ற வேறு சம்பவங்களையும் நினைவுகூர்ந்தார். அத்தோடு வட, கிழக்கில் சர்ச்சைக்குரியவையாகப் பார்க்கப்படும் சகல விடயங்களையும் கையாண்டுவரும் ஒருவராக பேராசிரியர் பத்மநாதனை தான் கருதுவதாகப் பெருமிதத்துடன் கூறிய அவர், தமிழர்களுடைய வரலாறு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இற்றைக்கால சூழ்நிலையில் இந்நூல் மிக அவசியமானதாகும் என்றார்.
அடுத்ததாக நூல் அறிமுகவுரை ஆற்றிய கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் இந்நூலின் முக்கியத்துவம், உள்ளடக்கம், இத்தகைய வரலாற்று நூல்களை எழுதுபவர்கள் பக்கச்சார்பற்றவர்களாக இருக்கவேண்டியதன் அவசியம், வட-கிழக்கு வரலாறு தொடர்பில் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்படும் திரிபுபடுத்தல்கள் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அதன்படி 'பலரும் நன்கறிந்த, இதற்கு முன்னரும் பல்வேறு வரலாற்று நூல்களை எழுதியிருக்கின்ற பேராசிரியர் பத்மநாதனால் எழுதப்பட்டு வீரகேசரியில் தொடர்ச்சியாக வெளியான கட்டுரை இன்று நூல்வடிவம் பெற்றிருப்பதுடன், இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதாக அறிந்துகொண்டேன். தமிழை விட ஆங்கிலத்தில், இயலுமெனில் சிங்களத்திலும் இந்த நூல் வெளிவருவதுதான் மிகப்பொருத்தமானது என்பது எனது அபிப்பிராயமாகும். ஏனெனில் இந்த நூலில் உள்ள செய்திகள் நிச்சயமாக சிங்கள மக்களைச் சென்றடையவேண்டும். அதன்படி கி.மு 300 - கி.பி 500 வரையான காலப்பகுதியில் வாழ்ந்த நாகர்களைப் பற்றிய விளக்கங்களை இந்த நூல் தருகின்றது. குறிப்பாக நாகர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பரந்து வாழ்ந்தார்கள் என்ற செய்தி வலுவான ஆதாரங்களுடன் இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது' என பேராசிரியர் சர்வேஸ்வரன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாகர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் தமிழ்மொழி பேசுபவர்களாக இருந்தார்கள் என்ற விடயம் இந்நூலின் ஊடாக நிறுவப்பட்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிறைவாக ஏற்புரை ஆற்றிய பேராசியர் சி.பத்மநாதன், யாழ்ப்பாணத்தில் தமிழ்மொழியின் வரலாறு கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனவும், அது அவ்வாறே வன்னி, மட்டக்களப்பு, மன்னார் போன்ற பகுதிகளிலும் பரந்திருந்தது எனவும் தெரிவித்ததுடன் இந்நூலின் உள்ளடக்கம் தொடர்பில் மேலும் விரிவாக விபரித்தார். அத்தோடு எமது சமூகம் நிலைத்திருக்கவேண்டுமாயின், இளைஞர்களை வளர்த்தெடுக்கவேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு சிறந்த கல்வி, ஆரோக்கியமான உணவு, முறையான வேலைவாய்ப்பு என்பவற்றை வழங்கவேண்டும் எனவும், அதனுடன் இணைந்ததாகத்தான் தேசியம் பற்றிப் பேசவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
(படப்பிடிப்பு :- எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM