நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

28 May, 2024 | 06:05 AM
image

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான 'எக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மார்டின்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌

இயக்குநர் ஏ. பி. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மார்டின்' எனும் திரைப்படத்தில் துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, சாது கோகிலா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நவாப் ஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் மற்றும் மணி சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வாசவி என்டர்பிரைசஸ் மற்றும் உதய் கே. மேத்தா புரொடக்ஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறது.

இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு மூன்று தினங்களில் எழுபது மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்நிலையில் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.‌

இதனிடையே நடிகர் துருவா சர்ஜா நடிப்பில் உருவான ' பொகரு' எனும் திரைப்படம் 2021 ஆம் ஆண்டில் வெளியானது என்பதும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் 'மார்டின்' திரைப்படத்திற்கு அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right