நம்மவர் படைப்பு!

27 May, 2024 | 05:20 PM
image

(நா.தனுஜா)

'பாடத்தெரிந்த பறவைதான் பாடலாமெனின்,

காடுகள் ஓசையற்றுப்போகவேண்டியதுதான்' என எங்கோ படித்த வரிகளை நினைவுறுத்துகிறது நம் நாட்டு இயக்குநர் ஒருவரின் வளர்ச்சிக்கதை.

கொழும்பு, கொச்சிக்கடையில் பிறந்து, நுவரெலியாவில் வளர்ந்த அன்டன் ஒனாசியஸ் கெத்தீ பெர்னாண்டோ நம் நாட்டின் இளம் படைப்பாளர்களின் ஒருவர். பாடசாலை காலத்தில் 'ஒளி விழா'வில் பாடலொன்றைப் பாடிய அவருக்கு கிடைத்த கைதட்டல்கள் தான் திரைத்துறையை நோக்கிய பயணத்தின் ஆரம்பம். திரைப்படமொன்றை இயக்குதல் தொடர்பான அறிவோ, அனுபவமோ அற்ற 'பாடத்தெரியாத' பறவையாக 2004இல் விளம்பரமொன்றுக்கான கலை உதவியாளராக இணைத்துக்கொள்ளப்படுகிறார் ஒனாசியஸ் பெர்னாண்டோ.

அதில் பெற்ற அனுபவத்தையும், 2006இல் பூர்த்திசெய்த திரைப்பட தொழில்நுட்பம் தொடர்பான டிப்ளோமா கற்கைநெறி மற்றும் 2008 - 2012 வரையான காலப்பகுதியில் இந்தியாவில் பூர்த்திசெய்த திரைப்பட உருவாக்கம் தொடர்பான பட்டப்படிப்பு என்பவற்றின் மூலம் பெற்ற அறிவையும் கொண்டு குறும்படங்களை இயக்க ஆரம்பிக்கிறார் அவர். 2008 இல் அவர் இயக்கிய முதலாவது குறும்படமான 'வித்தகன்' அளித்த நம்பிக்கையை இறுகப்பற்றிக்கொண்டு, அடுத்தடுத்த வருடங்களில் லைன் ஹவுஸ், டம்ளர், தேத்தண்ணீ, டீ பன், போட் என 25க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கிமுடிக்கிறார்.

இந்தியத் திரையுலகுடன் ஒப்பிடுகையில் திரைத்துறையில் நம்மவர்களும், நம்மவர்களின் படைப்புக்களும் பெரிதும் சோபிக்காமல் போனமைக்கான காரணத்தை ஒனாசியஸ் பெர்னாண்டோவுடன் பேசியபோது ஓரளவுக்குப் புரிந்துகொள்ளமுடிந்தது.

நம் நாட்டில் புதிதாக அறிமுகமாகும் படைப்பாளர்கள் தமது படைப்புக்களை வெளியிடுவதற்குப் பெரும்பாலும் யூடியூப்பைத் தெரிவுசெய்கிறார்கள். இருப்பினும் அத்தகைய எண்ணற்ற பார்வையாளர்களைக்கொண்ட தளத்தில் புதியதோர் படைப்பாளியின் படைப்பு அதற்குரிய கவனத்தைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறது. சில சமயங்களில் வெற்றி பெறுகிறது. ஆனால் பல பொழுதுகளில் காணாமல்போகிறது.

இதனை நன்கு புரிந்துகொண்ட ஒனாசியஸ் பெர்னாண்டோ, அவர் இயக்கிய குறும்படங்களை சர்வதேச நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவைப்பதிலேயே முழுக்கவனம் செலுத்துகிறார். அதன்படி இதுவரையில் ரஷ்யா, மலேசியா, சுவிட்ஸர்லாந்து, ஜேர்மனி, கனடா என உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டிருக்கும் அவர், விருதுகளையும் வென்றிருப்பதுடன், எண்ணற்ற திரைத்துறைசார் பயிற்சிப்பட்டறைகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

பின்னாளில் 'சினிமாவுக்கான எனது பங்களிப்பு என்னவாக இருக்கப்போகிறது?' எனும் கேள்வி அவருக்குள் எழுகிறது. அதற்குப் பதில் தேட விளைகிறபோது, இதுவரை காலத்திலும் நாம் பார்த்த சினிமா எப்படி நிலைமாற்றமடைந்திருக்கின்றது என்பதை ஆவணப்படுத்தலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதற்கமைய இந்த நிலைமாற்றத்தில் சகல விதங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கும் நடிகர் ரஜினிகாந்தை அதற்காகத் தெரிவுசெய்கிறார் அவர். இந்த ஆவணப்படத்தின் தயாரிப்புப்பணிகள் அடுத்த வருடம் பூர்த்தியாகும் நிலையில் உள்ளன.

அதேவேளை தந்தை - மகன் பாசப்பிணைப்பைக் கருவாகக்கொண்டு டன்ஸ்டன் மணியின் தயாரிப்பில் ஒனாசியஸ் பெர்னாண்டோவினால் இயக்கப்பட்டிருக்கும் 'மீன்வாழ்' எனும் குறுந்திரைப்படத்தின் First look poster அண்மையில் தென்னிந்தியாவின் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜினால் வெளியிட்டுவைக்கப்பட்டது. இக்குறுந்திரைப்படம் எதிர்வரும் ஜுலை மாதம் இத்தாலியில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள நிலையில், அதன்பின்னரே அக்குறுந்திரைப்படம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்.

ஆக, தன்னுடைய ஆர்வம் எதுவென்பதைத் தானாகவே கண்டறிந்து, சுய முயற்சிகள் ஊடாக அதுசார்ந்த திறன்களை மேம்படுத்திக்கொண்டு, இன்றளவிலே தரமான படைப்புகளை உருவாக்கி, அவற்றின் ஊடாக வருமானத்தையும் ஈட்டிவரும் ஒனாசியஸ் பெர்னாண்டோ, நம் நாட்டின் இளம் படைப்பாளர்களுக்குக் கூறும் அறிவுரை ஒன்றுதான்.

'உங்களுக்கென தனித்துவத்திறன் உண்டு. அதனை அடையாளங்கண்டு அதன்வழி பயணியுங்கள். நீங்கள் உருவாக்கும் படைப்புக்களுக்கென தனிப்பெறுமதி உண்டு. அதனை உணர்ந்து அவற்றை உரிய தளங்களில் காட்சிப்படுத்துங்கள். அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் பொறுமையும், உங்கள் விருப்பத்தெரிவின்பால் கொண்டிருக்கும் விடாமுயற்சியுடன்கூடிய ஈடுபாடுமே உங்களை வெற்றியாளனாக்கும்' 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்