ஒப்பந்த முறை கொடுப்பனவுகளுக்கு பழக்கப்பட்டுவிட்ட தோட்டத் தொழிலாளர்கள்…!

27 May, 2024 | 11:22 AM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்க வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை தொழில் ஆணையாளர் வெளியிட்டு இன்றோடு 26 நாட்களாகின்றன. கம்பனிகளுக்கு ஆட்சேபனைகளை முன்வைக்கக் கொடுத்த 15 நாட்கள் முடிவடைந்தும் பத்து நாட்கள் கடந்துவிட்டன. வர்த்தமானி அறிவித்தலுக்கு முன்பே தம்மால் இத்தொகையை வழங்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்து விட்டதால், புதிதாக அவர்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

எனினும் அவர்கள் தமது முடிவை  தொழில் ஆணையாளருக்கு எழுத்துமூலமாக அறிவித்துவிட்டதாகவே தகவல்கள் கூறுகின்றன. அதை உத்தியோகபூர்வமாக தொழில் அமைச்சர் அறிவிக்க வேண்டும். கம்பனிகள் 1200 ரூபாய் மாத்திரமே வழங்க முடியும் என்று அறிவித்துள்ளதாகவே தெரிகின்றது. அதாவது நாம் ஏற்கனவே இப்பகுதியில் தொழிலாளர்களின் நாட்சம்பளம் பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டது போன்று அவர்கள் 20% சம்பள அதிகரிப்பை மாத்திரமே வழங்க முன்வந்துள்ளனர். இந்த முறையையே அவர்கள் கூட்டு ஒப்பந்த காலத்திலும் பின்பற்றினர் என்பது முக்கிய விடயம்.

இது இவ்வாறிருக்க, தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபாவை வழங்குவதற்கு ஏன் கம்பனிகள் தயங்குகின்றன அல்லது மறுக்கின்றன என்பது குறித்து சற்று ஆராய வேண்டும். இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர் பற்றாக்குறை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அல்லது வேறு தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்டு தோட்ட நிர்வாகங்கள் அன்றாட பணிகளை முன்னெடுத்து வருகின்றன. 

கடந்த இரண்டு வருடங்களில் இந்த முறையை பல தோட்ட நிர்வாகங்கள் முன்னெடுத்து வருகின்றன. இந்தத் தொழிலாளர்கள் கைக்காசு முறையில் (Casual Workers) அல்லது ஒப்பந்த கூலி அடிப்படையில் (Contract workers)  சம்பளத்தைப் பெற்று வருகின்றனர். இந்த முறைக்கு தொழிலாளர்கள் இப்போது பழக்கப்பட்டு விட்டனர். இவ்வாறான கொடுப்பனவு முறைகள் தோட்ட நிர்வாகங்களுக்கும் முகாமைத்துவம் செய்யும் கம்பனிகளுக்கும் நட்டத்தை ஏற்படுத்துவதில்லை. அதாவது இக்கொடுப்பனவு முறைக்கு தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதி அல்லது நம்பிக்கை நிதியை பெற மாட்டர். அன்றைய தினம் தமது பணியை (இலக்கை) முடித்து விட்டு அதற்குரிய கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புகின்றனர். 

இவர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. மேலதிக கொழுந்து ஒரு கிலோவுக்கு சில தோட்ட நிர்வாகங்கள் 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை வழங்குகின்றன. தற்போது கொழுந்து பருவக் காலமாதலால் ஒரு தொழிலாளி  50 முதல் 70 கிலோ வரை ஒரு நாளைக்கு கொழுந்து பறிக்கின்றார். ஒரு தொழிலாளி மாதமொன்றுக்கு சுமார் 800 கிலோ வரை பறிப்பது சாதாரண விடயமாக உள்ளது. 

இவர்களை குறித்த தோட்டங்களுக்கு அழைத்து வருவதற்கு தற்போது பஸ்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மஸ்கெலியா,பொகவந்தலாவை, கொட்டியாகலை ஆகிய பகுதிகளிலிருந்து அட்டன் பகுதி தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வருகை தருகின்றனர். இந்த தொழிலாளர்களை அழைத்து வரும் பொறுப்பையும் குறித்த தோட்டத்திலுள்ள ஒருவரே முன்னெடுக்கின்றார்.   ஒரு தொழிலாளியை அழைத்து வருவதற்கு இவருக்கு 200–300 ரூபாய் வரை தோட்ட நிர்வாகம் வழங்குகின்றது. மட்டுமின்றி சில தோட்டங்களில் ஒரு கிலோ கொழுந்துக்கு 10 ரூபாய் வீதம் இவ்வாறு தொழிலாளர்களை தலைமை தாங்கி அழைத்து வருபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இவ்வாறான கவர்ச்சிகரமான கொடுப்பனவுகளின் மூலம் தோட்ட நிர்வாகங்கள் தமது உற்பத்தியை அதிகரித்துக்கொள்கின்றன. மறுபக்கம் தொழிலாளர்களுக்கு சட்டரீதியாக கிடைக்க வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் இல்லாமல் போகின்றன. எனினும் அது குறித்து எந்தத் தொழிலாளர்களும் கேள்வியெழுப்புவதில்லை. 

அதை விட ஒரு தோட்டத்தில் ஒப்பந்த முறையில் சில தொழிலாளர்களைக் கொண்டு பணியை முடித்துக்கொள்ளும் முறை பரவலாக காணப்படுகின்றது. உதாரணமாக ஒரு தோட்டத்தில்  ஐந்து ஏக்கர்  நிலத்தை தேயிலைக்கன்றுகள் நடுவதற்கு சுத்தப்படுத்துவதாக இருந்தால் அத்தோட்டத் தொழிலாளியாக இருக்கும் தொழிற்சங்க தலைவரோ அல்லது நிர்வாகத்துக்கு நெருக்கமான கங்காணியோ இந்த பொறுப்பை ஏற்பார். இதற்காக 35 இலிருந்து 50 ஆயிரம்  ரூபாய் வரை அவர் தோட்ட நிர்வாகத்திடம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவார். அவர் ஐந்து தொழிலாளர்களை நியமித்து சில நேரங்களில் ஐந்து நாட்களில் குறித்த பணியை முடித்துக்கொடுப்பார். நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் படி ஐந்து தொழிலாளர்களுக்கும் ஐந்து நாட்களில் 25 ஆயிரம் கொடுப்பனவு போக மிகுதிப் பணம் இவருக்கு. 

இதே பணியை தோட்ட நிர்வாகம் நாள் ஒன்றுக்கு எல்லா கொடுப்பனவுகளையும் வழங்கி வழமையான பணியாக தொழிலாளர்களுக்கு ஒப்படைத்தால் சில நேரங்களில் இப்பணியை முடிப்பதற்கு மூன்று வாரங்கள் வரை அவர்கள் எடுத்துக்கொள்வர். தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். ஆகவே தோட்ட நிர்வாகங்கள் நிரந்தர தொழிலாளர்களையும் இவ்வாறு ஒப்பந்த முறை வேலைக்கு பழக்கி விட்டுள்ளது. மாத இறுதி வரை காத்திருக்காமல் அவ்வப்போதே கைகளில் சம்பளம் கிடைப்பதால் தொழிலாளர்களும் அடுத்தடுத்த ஒப்பந்த பணிகளுக்கு தம்மை வெகு சீக்கிரமாக தயார்ப்படுத்துகின்றனர். 

இதை விட நாட்சம்பள முறையில், ஞாயிற்றுக்கிழமைகளில் பணி புரிந்தால் ஒன்றரை பெயர் பதிய வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள விடயம். இதையும் பல தோட்ட நிர்வாகங்கள் மாற்றியமைத்து விட்டன. ஞாயிற்றுக்கிழமைகளில் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் படியே அனைவரும் பணிபுரிய வேண்டும். 30 கிலோ எடுக்கும் ஒருவருக்கு 1800 ரூபாய் கிடைக்கின்றது. இது அவர்கள் தற்போது பெறும் நாட்சம்பளத்தொகையோடு ஒப்பிடும் போது அதிகமாகும். இந்த முறைக்கு தொழிலாளர்கள் பழக்கப்பட்டு விட்டனர். பணி முடிந்ததும்   அன்றைய நாள் கொடுப்பனவுகளை வாங்கிக்கொண்டு அவர்கள் செல்கின்றனர். 

இப்படியானதொரு கொடுப்பனவு முறைகள் பல பெருந்தோட்டங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் நாட்சம்பள கோரிக்கைகளை  கம்பனிகளும் ஏன் தொழிலாளர்களும் கூட கண்டு கொள்ளாத தன்மை ஏற்பட்டுள்ளது. தமக்கு நாள் ஒன்றுக்கு 1700 ரூபாயை தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுப்பதை விட , இந்த ஒப்பந்த அடிப்படையிலான கொடுப்பனவுகள் அதிகமாகவும் சுதந்திரமாகவும் பணியாற்ற வாய்ப்பை வழங்கியுள்ளன என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் ஒரு தோட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நிரந்தர தொழிலாளியும் தான் விரும்பிய அயல் தோட்டங்களில் சென்று ஒப்பந்த முறையிலும் கைக்காசு முறையிலும் பணியாற்றுவதற்கு இங்கு எவரும் தடை விதிப்பதில்லை. 

தொழிற்சங்கங்களின்  கோரிக்கையான 1700 ரூபாய் நாட்சம்பளமோ அல்லது அதற்கு மேலதிகமான ஒரு தொகையை வழங்க  கம்பனிகள் அலட்சியமாக இருப்பதும், தொழிலாளர்கள் அதை கண்டு கொள்ளாமலிருப்பதற்கும் அது தான் காரணம். கோரிக்கையின் படி குறித்த தொகை நிர்ணயமானால் ஒப்பந்த அடிப்படையில் இத்தனை காலமும் இடம்பெற்று வந்த பணிகளுக்கு அது இடையூறாக அமையும் என்பதை கம்பனிகள் மாத்திரமல்லாது தொழிலாளர்களும் நினைக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது. 

தற்போதைய சூழலில் தமக்கு வருமானம் வரும் இந்த முறை சிறப்பானதா அல்லது நாட்சம்பளத்தொகையை தொழிலாளர்கள் விரும்புகின்றார்களா என அவர்களிடமே ஆய்வு செய்ய வேண்டிய நிலைமையில் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. தொழிலாளர்களின் வருமானம் குறித்த தெளிவுகள் எந்த தொழிற்சங்கங்களிடமும் இல்லை. ஆனால் அதை கம்பனிகளும் தோட்ட நிர்வாகங்களும் நன்கு அறிந்து வைத்துள்ளன. அதன் படி தொழிலாளர்களை கம்பனிகள் கையாள்கின்றன. இது ஒரு வகையில் தொழிற்சங்கங்களின் பலகீனத்தை எடுத்தியம்புகின்றது. தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்ற வகையில்  தாம் நினைத்த ஒரு தொகையை நிர்ணயித்து கம்பனிகள் அத்தொகையை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள்  வீராவேசம் பேசுவதற்கு முன்பதாக தொழிலாளர்களின் தற்போதைய வருமான முறை பற்றி ஆராய்ந்திருக்க வேண்டும். 

 தோட்டங்களுக்குள்  ஒப்பந்த கொடுப்பனவு முறைகள், அயல் தோட்டங்களுக்குச் சென்று கொழுந்துக்கான கொடுப்பனவை பெறல் போன்ற இந்த வருமானம் பெறும் முறையிலிருந்து தொழிலாளர்களை மீட்டெடுப்பது மிகவும் கடினம். அதற்கான அடித்தளங்களை கம்பனிகளும் தோட்ட நிர்வாகங்களும் எப்போதோ  போட்டு விட்டன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காயமடைந்த புலிகளுக்கு மருத்துவ உதவி வழங்கிய...

2024-06-23 18:27:21
news-image

தொழிலாளர்களின் நாட்சம்பளம் எவ்வளவாக இருத்தல் வேண்டும்?

2024-06-23 12:56:32
news-image

நீதித்துறையின் மீதான நிறைவேற்றுத்துறையின் பாய்ச்சல்

2024-06-23 10:42:42
news-image

ஜீவனுக்கு எதிரான முதலாளிமார் சம்மேளனத்தின் போர்க்கொடி 

2024-06-23 10:36:16
news-image

பாத யாத்திரை பாரம்பரியத்தை பேணுவது போல்...

2024-06-23 09:54:12
news-image

Factum Perspective: அனைத்து ஜனாதிபதியின் நபர்கள்...

2024-06-22 13:44:21
news-image

முறைமை மாற்றத்துக்காக வருகின்ற வாய்ப்புக்கள்

2024-06-19 16:07:11
news-image

அணுவாயுதங்களுக்கான செலவிடுதலை அதிகரிக்கும் நாடுகள் !

2024-06-18 16:20:51
news-image

13ஆவது திருத்தத்தில் அரசியல் பந்தாட்டம் ;...

2024-06-18 11:40:13
news-image

Factum Perspective: இலங்கையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்...

2024-06-17 15:40:00
news-image

சமூகமயமாக்கலில் பிரத்தியேக வகுப்புக்களின் திசை திரும்பலும்...

2024-06-17 13:19:42
news-image

பல்திறப்புலமையும் பன்முக ஆற்றலும் கொண்ட ஆளுமை...

2024-06-16 21:16:51