ஜனாதிபதித் தேர்தலும் மலையக மக்களும்..!

27 May, 2024 | 02:16 PM
image

சி.சிவகுமாரன் 

னாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவலாக இல்லாவிட்டாலும் தமிழத் தேசியவாதிகளாக தம்மை முன்னிறுத்தும் அரசியல் பிரமுகர்கள் அதை வலியுறுத்தி வருகின்றனர். வடக்கு கிழக்கில் செயற்பட்டு வரும் சமூக அமைப்புகள், தமிழ்த் தேசியத்தை மூச்சாகக் கொண்டிருக்கின்றோம் என்று கூறி வரும் கட்சிகள் என்பன ஒன்றிணைந்து  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

யாரை பொதுவேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும் என்ற பிரச்சினைகளே தற்போது பேசப்பட்டு வருகின்றதே ஒழிய எதற்காக பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற தர்க்கரீதியாக விவாதங்கள்/காரணங்கள்  இதுவரை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை சென்றடையவில்லை. 

பொதுவேட்பாளர் விவகாரம் தமிழ்க் கட்சிகளிடையே மாத்திரமே பேசுபொருளாக உள்ளதாகத் தெரிகின்றது. வடக்கு கிழக்கு தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் சார்ந்த சிவில் அமைப்புகள் இது குறித்த விவாதங்களை ஆரம்பித்துள்ளனவா என்று தெரியவில்லை. மக்களாக முன்வந்து கருத்துகள் எதையும் சொல்கின்றார்களா என எந்த ஊடகங்களும் மக்கள் கருத்துகளை அறிய முயற்சி செய்யவில்லை. 

யுத்தத்துக்கு முன்னரும் பின்னரும், தேர்தல்களில் வாக்களித்து களைத்துப்போயுள்ளனர் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள்.     சிங்கள தேசிய  கட்சிகளின் சார்பாக முன்னிறுத்தப்பட்ட கட்சித்தலைவர்கள், அரசியல்வாதிகள்   மற்றும் அவர்களை எதிர்த்து நின்ற கூட்டணிகளின் சார்பாக நிறுத்தப்பட்டவர்கள் என அனைவருக்கும் வாக்களித்து விட்டு நிற்கின்றனர் தமிழ் மக்கள். இவ்வாறு சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களின் வெற்றி –தோல்வி இரண்டிலும் சம்பந்தப்பட்டுள்ளன வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகளும் கூட்டணிகளும். ஆனால் அந்த சந்தர்ப்பங்களில் தமிழ் வேட்பாளராக துணிச்சலாக களமிறங்கிய எவரையும் இக்கட்சிகள் ஆதரித்ததாக வரலாறு இல்லை. 

வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முயற்சிகளை முன்னெடுக்க முன்பே 1978 ஆம் ஆண்டு தனியொரு மனிதராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியவர் குமார் பொன்னம்பலம். அதிலிருந்து 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற கடைசி ஜனாதிபதி தேர்தலில்  சிவாஜிலிங்கம் வரை தமிழர்களும் முஸ்லிம்களும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கின்றனர். 

இது இவ்வாறிருக்க இந்த நாட்டில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியே கணிசமான மக்கள் தொகையை கொண்டு வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி மலையக மக்கள்  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எங்ஙனம் முகங்கொடுக்கப்போகின்றனர் என்பது ஒரு கேள்வி. யார் ஜனாதிபதியாக வந்தாலும் இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வை எவரும் முன்வைக்கப்போவதில்லை என்பதை எவ்வாறு வடக்கு கிழக்கு தமிழர்கள் உணர்ந்துள்ளனரோ அதே போன்று தாம் யாரை தெரிவு செய்தாலும் தமது அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதை மலையக மக்களும் நன்கு உணர்ந்துள்ளனர்.

வடக்கு கிழக்கு அரசியல் சூழ்நிலைகள் அவ்வாறிருக்க, மத்திய, ஊவா,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது அடிப்படை பிரச்சினைகளை  தீர்த்து வைக்கக் கூடிய  மக்கள் தலைவர்களை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றனர்.  1977 ஆம் ஆண்டில் இந்த மக்கள் தமது முதல் பிரதிநிதியை வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய காலத்திலிருந்து மலையகத்தில் இணக்க அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அங்கு எதிர்ப்பு அரசியல் இல்லை. இதன் காரணமாக யார் ஜனாதிபதியானாலும் நாம்  அவர்களுடன் சேர்ந்து   எதையாவது பெற்றுக்கொண்டு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது சிலவற்றை பிய்த்து கொடுத்து காலத்தை கடத்துவோம் என்ற மனநிலையிலேயே மலையக அரசியல்வாதிகள் தமது அரசியலை நகர்த்துகின்றனர். 

இந்த இணக்க அரசியலை மலையக சமூகமும் ஏற்றுக்கொண்டு விட்ட நிலையிலேயே அவர்களும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க முடியாது வெறும் பார்வையாளர்களாகவும் வாக்காளர்களாகவும் மட்டும் இருந்து வருகின்றனர். இதில் யாரை குற்றஞ்சாட்டுவது? இத்தனை சம்பவங்கள் இடம்பெற்றும் கூட வடக்கு கிழக்கு தமிழ்த் தலைமைகள் சிங்கள தலைவர்களின் தேர்தல் அறிக்கைகள் வரும் வரை காத்திருந்து அதன் பின்னர் முடிவெடுப்போம் என்கின்றனர். மலையகத்தில் அப்படியான காத்திருப்புகளுக்கு இடமில்லை. 

மக்கள் தீர்மானிக்கும் முன்பே மலையகக் கட்சிகள் தேசிய கட்சிகளுக்கு முட்டுக்கொடுக்க தயாராகி விடுகின்றன. ஆதரவுக்கான பேரம் பேசுதலில், மக்கள் பிரச்சினைகளுக்கு முன்பதாக அமைச்சுப் பதவிகளே அரசியல்வாதிகளின் கண்களுக்குத்தெரிகின்றன. வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்துக்கும் மலையக சமூகத்துக்குமிடையில் உள்ள பிரச்சினைகளில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் ‘தமிழர்’ என்ற  இன உணர்வும்  ‘தமிழ்’  என்ற மொழி ஒற்றுமையும் உள்ளதே. அதை புதிய பாரம்பரியத்தில் முளைத்த இளம் அரசியல்வாதிகள் இருதரப்பிலிருந்தும்  கட்டியெழுப்ப தவறி விட்டனர். 

அதன் காரணமாகவே அவர்கள் ஜனாதிபதி பொது வேட்பாளரைப் பற்றி கதைத்துக்கொண்டிருக்க இங்கு மக்கள் தமது பிரதிநிதிகளை தமது தொகுதிக்குள் தேடிக்கொண்டிருக்கின்றனர். இது கடினமான காலகட்டம். பிரதிநிதிகளால் தீர்த்து வைக்க முடியாத  பிரச்சினைகளை புதிய ஜனாதிபதியா தீர்த்து வைக்கப்போகின்றார்? இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் என ஒன்று இடம்பெற்றால் அது மலையக மக்களைப் பொறுத்தவரை பத்தோடு பதினொன்றாகவே இருக்கப்போகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காயமடைந்த புலிகளுக்கு மருத்துவ உதவி வழங்கிய...

2024-06-23 18:27:21
news-image

தொழிலாளர்களின் நாட்சம்பளம் எவ்வளவாக இருத்தல் வேண்டும்?

2024-06-23 12:56:32
news-image

நீதித்துறையின் மீதான நிறைவேற்றுத்துறையின் பாய்ச்சல்

2024-06-23 10:42:42
news-image

ஜீவனுக்கு எதிரான முதலாளிமார் சம்மேளனத்தின் போர்க்கொடி 

2024-06-23 10:36:16
news-image

பாத யாத்திரை பாரம்பரியத்தை பேணுவது போல்...

2024-06-23 09:54:12
news-image

Factum Perspective: அனைத்து ஜனாதிபதியின் நபர்கள்...

2024-06-22 13:44:21
news-image

முறைமை மாற்றத்துக்காக வருகின்ற வாய்ப்புக்கள்

2024-06-19 16:07:11
news-image

அணுவாயுதங்களுக்கான செலவிடுதலை அதிகரிக்கும் நாடுகள் !

2024-06-18 16:20:51
news-image

13ஆவது திருத்தத்தில் அரசியல் பந்தாட்டம் ;...

2024-06-18 11:40:13
news-image

Factum Perspective: இலங்கையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்...

2024-06-17 15:40:00
news-image

சமூகமயமாக்கலில் பிரத்தியேக வகுப்புக்களின் திசை திரும்பலும்...

2024-06-17 13:19:42
news-image

பல்திறப்புலமையும் பன்முக ஆற்றலும் கொண்ட ஆளுமை...

2024-06-16 21:16:51