வன்னி பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் திருவருவசிலையானது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவில் நேற்றையதினம் மாலை 4மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் சமாதி அமைந்துள்ள கற்சிலைமடு சிலையடி பகுதியிலே இந்த திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

பண்டாரவன்னியன் திருவுருவ படம் தாங்கிய பாரம்பரிய கலை பண்பாட்டு வீதிப்பேரணி கற்சிலைமடு சந்தியிலிருந்து சிலையடி பிரதேசம் வரை அங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக  வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்  விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராசர் கலந்துகொண்டு திருவுருவச்சிலையை திறந்துவைத்திருந்தார். மேலும் இந்த விழாவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.,சிவமோகன் மற்றும் இலங்கை தமிழரசுகட்சியின் மத்தியகுழு உறுப்பினர் குலநாயகம் மற்றும் தமிழரசுகட்சியின் மூத்த உறுப்பினர் கனகசபாபதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் மாந்தைகிழக்கு பிரதேச செயலர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தவிழாவில் பண்டாரவன்னியன் காவிய நாடகம் மற்றும் வரலாற்று நூல்களை எழுதிய மறைந்த எழுத்தாளர் கவிஞர் முல்லைமணிக்கு நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் நிதியொதுக்கீட்டில் பண்டாரவன்னியன் அறங்காவற் கழகத்தால் இந்த சிலை அமைக்கக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.