ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி  ஐபிஎல் கிண்ணத்தை 3ஆவது தடவையாக சுவீகரித்தது  கொல்கத்தா 

Published By: Vishnu

27 May, 2024 | 01:37 AM
image

(நெவில் அன்தனி)

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்களால் அமோக வெற்றிகொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

ஐபிஎல் இறுதி ஆட்டம் ஒன்றில் 114 ஓட்டங்கள் என்ற மிகக் குறைந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிட்டியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது துடுப்பாட்டத்தை நிதானத்துடன் ஆரம்பித்தது.

எனினும் 2ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 11 ஓட்டங்களாக இருந்தபோது சுனில் நரேன் 6 ஓட்டங்களுடன் பெட் கமின்ஸின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஆனால், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர்.

ரஹ்மானுல்லா குர்பாஸ் 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஷாஹ்பாஸ் அஹ்மதின் பந்துவீச்சில் எல் பி டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.

வெங்கடேஷ் ஐயர் 26 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 52 ஓட்டங்களை பெற்றார். அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஐபிஎல் இறுதிப் போட்டி வரலாற்றில் அணி ஒன்று பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஆரம்பம் எந்த வகையிலும் சிறப்பாக அமையவில்லை. பவர் ப்ளேயில் 3 விக்கெட்களை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்று பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிகச் சிறந்த வியூகங்களை அமைத்து முதல் 7 ஓவர்களில் தனது வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு சன்ரைசர்ஸ்  ஹைதராபாத்தின் முன்வரிசை துடுப்பாட்டத்தை ஆட்டம் காணச் செய்தது.

அத்துடன் பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட ஆறு பந்துவீச்சாளர்களும் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி குறைந்தது ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

முதலாவது ஓவரின் 5ஆவது பந்தில் அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை மிச்செல் ஸ்டார்க் நேரடியாகப் பதம் பார்த்தார்.

இரண்டாவது ஓவரில் கடைசிப் பந்தில் ட்ரவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வைபவ் அரோரா வீழ்த்தினார்.

தொடர்ந்து மிச்செல் தனது 3ஆவது ஓவரில் ராகுல் த்ரிபதியை களம் விட்டகலச் செய்தார்.

போட்டியின் 7ஆவது ஓவரை வீச அழைக்கப்பட்ட மூன்றாவது வேகப்பந்துவீச்சாளரான ஹர்ஷித் ரானா தனது கடைசிப் பந்தில் நிட்டிஷ் குமார் ரெட்டியை ஆட்டம் இழக்கச் செய்தார்.

அபிஷேக் ஷர்மா 2 ஓட்டங்களையும் ட்ரவிஸ் ஹெட் ஓட்டம் பெறாமலும் ராகுல் த்ரிபதி 9 ஓட்டங்களுடனும் நிட்டிஷ் குமார் ரெட்டி 13 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

போட்டியில் முதல் 11 பந்துகளை எதிர்கொள்ளாமல் மறுபக்கத்தில் இருந்த ட்ரவிஸ் ஹெட் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழக்க நேரிட்டது.

தொடர்ந்து ஏய்டன் மார்க்ராமும் ஹென்றிச் க்ளாசனும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை மீட்டெடுக்க முயற்சித்தனர். ஆனால், மார்க்ராம் 20 ஓட்டங்கள் பெற்ற நிலையில் அண்ட்றே ரசலின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (62 - 5 விக்.)

மொத்த எண்ணிக்கை 71 ஓட்டங்களாக இருந்தபோது வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் ஷாஹ்பாஸ் அஹ்மத் (8) ஆட்டம் இழந்தார்.

மேலும் 6 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்த நிலையில் அப்துல் சமாத் 4 ஓட்டங்களுடன் அண்ட்றே ரசலின் பந்துவீச்சில் களம் விட்டகன்றார்.

ஹென்றிச் க்ளாசன், நீக்கல் போட்டியில் போன்று நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஓட்டங்ளைப் பெற முயற்சித்தார்.

ஆனால், ஹர்ஷித் ரானாவின் பந்துவீச்சில் இன்சைட் எஜ் மூலம் போல்ட் ஆன க்ளாசன் 16 ஒட்டங்களைப் பெற்றார். (90 - 8 விக்.)

எனினும், அணித் தலைவர் பெட் கமின்ஸ், ஜெய்தேவ் உனந்த்கட் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 23 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

இந்த இணைப்பாட்டம் அணியில் இரண்டாவது சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

நிட்டிஷ் குமார் ரெட்டி, எய்டன் மார்க்ராம் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 26 ஓட்டங்களே அணியின் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

மொத்த எண்ணிக்கை 113 ஓட்டங்களாக இருந்தபோது   ஜெய்தேவ் உனந்த்கட்,  பெட் கமின்ஸ்  ஆகிய இருவரும்  4 பந்துகள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

சுனில் நரேனின் பந்துவீச்சில் ஜெய்தேவ் உனந்த்கட் 4 ஓட்டங்களுடனும் அண்ட்றே ரசலின் பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

அணி சார்பாக 9ஆம் இலக்க வீரர் பெட் கமின்ஸே அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அண்ட்றே ரசல் 2.3 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 3 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அவர்களை விட வைபவ் அரோரா, சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதனைவிட இந்த சுற்றுப் போட்டியில் 741 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராத் கோஹ்லி, மொத்தமாக 24 விக்கெட்களை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஹர்ஷால் பட்டேல் ஆகிய இருவரும் முறையே இளம்மஞ்சள் (ஒரேஞ் கெப்) தொப்பி மற்றும் ஊதா (பேர்ப்ள்) தொப்பி ஆகியவற்றை தமதாக்கியதற்காக தலா 54 இலட்சம் ரூபா பணப்பரிசை வென்றெடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் ரி20...

2025-01-25 16:43:40
news-image

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ரி20...

2025-01-25 15:24:21
news-image

2024க்கான ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து...

2025-01-24 17:21:02
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் புதுமுகம் சொனால்...

2025-01-24 16:49:52
news-image

2024ஆம் வருடத்துக்கான ஐசிசி ஒருநாள் அணிக்கு ...

2025-01-24 15:25:27
news-image

2024க்கான ஐசிசி மகளிர் ஒருநாள் அணியில் ...

2025-01-24 15:07:41
news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49