வைத்தியர்கள் பட்டப்படிப்பை முடித்த பின் குறைந்தது மூன்று வருடங்களாவது தமது மாகாணத்தில் சேவையாற்ற வேண்டும் - டக்ளஸ்

26 May, 2024 | 01:57 PM
image

வைத்தியர்கள் தமது பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது தமது மாகாணத்தில் சேவையாற்ற வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பெண்கள் மருத்துவம் மற்றும் பராமரிப்புக்கான சிறப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர்,  

நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான இலகு கடன் உதவியாக ரூபா 50,320 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிலையமானது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் கர்ப்பவதிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான விசேட சிகிச்சை பிரிவு, இரண்டு சத்திர சிகிச்சை கூடங்கள், இரண்டு கர்ப்பவதிகளுக்கான விடுதிகள், பெண் நோய்கள் விடுதி, தொற்றுநீக்கம் பிரிவு, செயற்கை கருத்தரிப்பு இரசாயன கூடம், கதிரியக்கவியல் பிரிவு என இந்த வைத்திய நிலையம் அமையப் பெற்றுள்ளது.

அத்துடன், இங்கு சூரிய மின்சக்தி வசதி மற்றும் மின்பிறப்பாக்கி வசதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது கிளிநொச்சி வாழ் மக்களுக்கு மாத்திரமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று நான் நம்புகின்றேன்.

இதேவேளை ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி ஒன்று திறக்கப்பட்டது. அதுவும் பல வசதிகளை கொண்டதாக இருக்கின்றது.

அங்கு, யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக்குமாறு ஒரு கோரிக்கை அவரிடம் விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே ஜனாதிபதி என்னோடு அருகில் இருந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது அந்த விடயத்தை கூறி, அடுத்துவரும் அமைச்சரவையில் என்னை அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு கேட்டிருக்கிறார்.

அந்த வகையில் அதை நான் முன்னெடுக்கவிருக்கின்றேன்.

அத்துடன் அப்படியான எண்ணம் அவருக்கு இருந்தமையையிட்டு அவருக்கு நான் எமது மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். 

2005ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தபோது தமிழ் மக்கள் அன்றே அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் இன்று தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்பானதாக அமைந்திருக்கும். ஆனால், அன்று தவறவிட்டுவிட்டோம். ஏனென்றால், தமிழ் மக்களது வாக்குகள் ஊடாகத்தான் ஜனாதிபதி ஒருவர் வெல்லக்கூடிய வாய்ப்பு 2005இல் இருந்தது.

அன்று அந்த வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த பாழாய்ப்போன யுத்தமோ அல்லது இத்தனை துன்பங்கள், துயரங்கள், இடம்பெயர்வுகளையோ எமது மக்கள் சந்தித்திருக்க மாட்டார்கள்.

அதேவேளை, எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி  நாங்கள் இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக  நாடும் எங்களுடைய மக்களும் அதிக பயன்களை பெறலாம்.

இதேநேரம் நான் அடிக்கடி கூறி வருவதுபோன்று, இந்த நாடு பொருளாதார ரீதியாக அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தபோது தென்னிலங்கை தலைவர்கள் பலரிடம் நாட்டை பொறுப்பெடுக்குமாறு கோரிக்கை விடுத்தபோது அவர்கள் எவரும் அதை பொறுப்பெடுக்க முன்வரவில்லை. ஆனால், ஜனாதிபதி ரணில் அதை பொறுப்பெடுக்க முன்வந்தார்.

நான் அவருக்கு சொல்வதுண்டு... நீங்கள் ஒரு பிஸ்ரலோடு வந்து இன்று மல்டிபிள் ஆற்றலோடு இருக்கின்றீர்கள் என்று.

உங்களுக்கு தெரியும், இந்த நாட்டை ஜனாதிபதி பொறுப்பெடுத்தபோது தென்னிலங்கையில் அராஜகம் தலைவிரித்தாடியது.  அதை தொடர விட்டிருந்தால் அது வடக்கு கிழக்குக்கும் பரவியிருக்கும்.

அதேவேளை எடுத்ததற்கெல்லாம் வரிசையில் தான் நின்று பொருட்களை பெறக்கூடிய நிலைமை இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஜனாதிபதி தன்னுடைய ஆற்றலால், தன்னுடைய செயற்பாட்டால் எங்களுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறார். அதனால் அவருக்கு நாங்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை முன்வைக்கின்றேன்.

இதேவேளை எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரும் ஜனாதிபதியின் செயற்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள்.

அந்த வகையில், எதிர்வரும் காலங்களிலும் அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு சேர்ந்து பயணிப்பதற்கு ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன்.

மேலும், அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பில் நீண்ட காலமாக எனது கருத்துக்களை நான் பதிந்து வந்திருக்கிறேன்.

அரசியல் உரிமை பிரச்சினை என்பது நான் நீண்ட காலமாக சொல்லிவந்த இலங்கை, இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிப்பது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழர் தரப்பு விட்ட  தவறுகளால் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

இதேவேளை, நேற்று திறந்துவைக்கப்பட்ட யாழ். மருத்துவ பீட கட்டடம், இன்று திறந்துவைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளில் பல்வேறு பற்றாக்குறைகள், ஆளணி பற்றாக்குறைகள் இருக்கின்றன.

அவற்றையும் நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் கவனத்துக்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். நான் மாத்திரம் இல்லை. சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கொண்டுசென்றிருக்கின்றனர். அதற்கும் ஜனாதிபதி நிச்சயம் தீர்வு பெற்றுத் தருவார் என்று நம்புகின்றேன்.

அத்தோடு இந்தியாவோடும் ஒரு நெருக்கமான நிலத் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றொரு அற்புதமான கொள்கையை ஜனாதிபதி முன்வைத்திருக்கிறார். அதனால் அவரோடு சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாம்  விரைவில் கடந்த காலங்களிலிருந்து எமது வரலாற்றை மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும்.

இதேவேளை தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்பு தேர்தல் வந்த உடனே அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டது என்று சொல்வதுண்டு. ஆனால், என்னை பொருத்தவரையில் நான் அப்படி சொல்லப் போவதில்லை. இதை நான் அரசாங்கத்தோடு பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, நிச்சயம் பெற்றுத் தருவேன்.

இறுதியாக தமிழ் மொழியில் படிக்கின்ற வைத்திய மாணவர்களுக்கு நான் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

அவர்கள் படிக்கின்றபோது உணர்ச்சிவசமான கருத்துக்களையும் கொள்கைகளையும் முன்வைப்பார்கள். படித்து முடித்த பின்னர் பட்டதாரிகள் ஆகின்றபோது அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தென்னிலங்கை சென்று தங்களது மேல் கல்வியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்றார்கள்.

அதனால் தயவுசெய்து நீங்கள் உங்களுடைய பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது இந்த மாகாணத்தில் சேவையாற்றும் வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்திருந்தார். 

முன்பாக நெதர்லாந்து அரசின் நிதிப் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் 5320 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடத் தொகுதி இன்று முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதியால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கிளிநொச்சி சென்றிருந்த ஜனாதிபதி மற்றொரு நிகழ்வாக 'உறுமய” உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் சனிக்கிழமை (25) கிளிநொச்சியில் நடைபெற்றது.

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் காணி உரிமம் மற்றும் அது தொடர்பில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுடன் வாழ்ந்துவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வந்த கடும் முயற்சிகளுக்கு தற்போது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள உரிமம் திட்டத்தின் ஊடாக தீர்வு கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் கிளிநொச்சி மாவாட்டத்தில் 1000 பயனாளிகளுக்கு காணி உரிமங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-18 17:05:12
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29