பலஸ்தீன படுகொலைகளை ஆதரிக்கிறதா இலங்கை?

Published By: Vishnu

24 May, 2024 | 06:03 PM
image

'அணிசேராக் கொள்கையாளனாக காண்பித்து வரும் இலங்கை அரசாங்கம் இஸ்ரேல்-பலஸ்தீன் மோதல் விடயத்தில் மனிதாபிமானமின்றி இரட்டை நிலைப்பாட்டைப் பின்பற்றுவதை உடன் நிறுத்த வேண்டும்'

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தனது சகல வழிகளிலுமான பலப்பிரயோகத்தினை கொண்டு முன்னெடுத்து வரும் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இருபத்தோராம் நூற்றாண்டில் பஸ்தீனில் மனிதப் பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கையில், உலகத்தின் பல நாடுகள் அதற்கு தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. 

இளைய சமூகத்தினர் எழுச்சிகொண்டு மோதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு சர்வதேச ரீதியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

குறிப்பாக வல்லாதிக்க நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தாலும் கூட இளைய சமூகத்தினரும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கே அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றார்கள்.

துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கமானது இஸ்ரேல்-பலஸ்தீன் மோதல் விடயத்தில் பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலையும் காட்டுவது போன்று இரட்டை நிலைப்பாட்டில் செயற்படுகின்றது.

விசேடமாக கூறுவதாக இருந்தால் இஸ்ரேல் பண்ணைகளில் பணிபுரிவதற்காக இலங்கைப் பிரஜைகளை அரசாங்கம் தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டிருக்கின்றது. 

அவர்களின் உயிர்ப்பாதுகாப்பு, அவர்களின் குடும்பத்தவர்களின் பதற்றங்கள் உள்ளிட்டவற்றையெல்லாம் பொருட்டாக கொள்ளாமல் தொடர்ச்சியாக தொழிலாளர்களை அனுப்பும் படலத்தினை முன்னெடுத்து வருகின்றது.

மறுபக்கத்தில், பஸ்தீனத்தில் காவுகொள்ளப்படும் உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு காஸா சிறுவர்களுக்கான நிதிசேகரிக்கின்ற செயற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுகின்றது.

உண்மையில் பலஸ்தீன  மக்களுக்காகவும், அந்தச் சிறுவர்களுக்காகவும் அரசாங்கம் நீலிக்கண்ணீர் வடித்தாலும், நிதி சேகரித்தாலும் இஸ்ரேல் பக்கத்தில் தான் இலங்கை உள்ளது என்பது வெளிப்படையான விடயமாகும்.

அதேவேளை, பலஸ்தீன சிறுவர்களுக்கான நிதியத்துக்கான நிதியை அரசாங்கம் தனது கஜானாவில் இருந்து எடுத்து வழங்கவில்லை. மாறாக அது பொதுமக்களிடத்திலேயே இருந்து வழங்கப்படுகின்றது என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகின்றது.

மேலும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தினரும் பலஸ்தீன மக்கள் மீதான நடத்தப்படுகின்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றார்கள். 

அந்த உக்கிரமான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் அவர்கள் வலியுறுத்துவதோடு இஸ்ரேலுடன் வரையறையற்ற இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பிலும் அதிருப்திகளையே கொண்டுள்ளனர்.

இலங்கை வாழ் மக்களின் இத்தகைய மனோநிலையை அறியாது அரசாங்கம் தன்னுடைய சுயநலன்களை அடிப்படையகக் கொண்டு செயற்படுவதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

கடந்த ஆண்டின் ஒக்டோபர் ஏழாம் திகதி ஹாமஸ் அமைப்பினர் இஸ்ரேலின்மீது நடத்திய தாக்குதல்களுடன் ஆரம்பமான மோதல்கள் தற்போது வரையில் உக்கிரமாக நடைபெற்று வருகின்றன.

இஸ்ரேலிய படைகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகளால் இதுவரை 34305 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

77293 பேர் காயம் அடைந்துள்ளனர். கொல்லப்பட்ட மற்றும் காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் சிறுவர்களும் தாராளமாக உள்ளனர்.

இது தவிர இன்னும் ஏழாயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் தமது வாழ்விடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகி கட்டட சிதைவுகளுக்குள் சிக்குண்டு மரணித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

காஸா பிரதேசம் முழுவதிலும் இருந்து சுமார் 20 இலட்சம் மக்கள் பலவந்தமாக வெளியேற வேண்டிய சூழ்நிலையை இஸ்ரேல் ஏற்படுத்தியதால், அந்த மக்கள் எகிப்திய எல்லை ஊடாக நகர்ந்தனர்.

ஏற்கனவே சனநெரிசல் மிக்க ரபா நகரை நோக்கி அம்மக்கள் நகர்ந்துள்ளதால் தற்போது அங்கு பெருமளவான உணவுத் தட்டுப்பாடும் பட்டினி நிலையும் ஏற்பட்டுள்ளது. 

மறுபக்கத்தில் கடந்த ஆறு மாத காலங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் அடங்கிய கப்பல்களை வெள்ளை மாளிகை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது. வருடாந்தம் அமெரிக்கா வழமையாக அனுப்பி வரும் 3பில்லியன் டொலர்கள் உதவிக்கு மேலதிகமாக இவை அனுப்பப்பட்டுள்ளன. 

இஸ்ரேல் திட்டமிட்டு புரிந்துவரும் இனப்படுகொலைக்கான ஆயுதங்களை வழங்குவதற்கான மேலதிக நிதி உதவியாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் கடந்த மாதம் 14.3 பில்லியன்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

அதுமட்டுமன்றி, கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்துக்கு முழு அங்கத்துவ அந்தஸ்த்தை பெறுவதற்காக பலஸ்தீன அதிகார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

அந்த தீர்மானத்தின் மீது வல்லரசான அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்துள்ளதோடு, என்றுமே தாம் இஸ்ரேலுடன் தான் இருப்போம் என்ற செய்தியை அளித்துள்ளது.

இந்த விடயத்தில் இலங்கை எந்தவிதமான வெளிப்படுத்தல்களையும் செய்திருக்கவில்லை. ஆகக்குறைந்தது கண்டனத்தைக் கூடத் தெரிவித்திருக்கவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபாயத்திட்டத்தில் முக்கியமானதொரு நாடாகும். ஆகவே பஸ்தீன மக்களுக்கான இலங்கை இதய சுத்தியுடன் செயற்பட்டு அமெரிக்காவின் மீது சில பேரம்பேசல்களைச் செய்ய முடியும்.

ஆனால், இலங்கை எந்தவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்காது தொடர்ச்சியாக அமைதிகாத்து வருகின்றது. இவ்வாறிருக்கின்ற செயற்பாடானது அமெரிக்கா இஸ்ரேலின் அனைத்து மிலேச்சத்தனமான செயற்பாடுகளை ஆதரிப்பது போன்றே இலங்கையும் அதனை ஏற்றுக்கொள்வதாகவே கருத வேண்டியுள்ளது.

அடுத்தபடியாக காஸா போரில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டியும், ரபாவில் அதன் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரியும் தென்னாப்பிரிக்கா தொடுத்துள்ள வழக்கின் மீதான விசாரணையை ஐநாவின் சர்வதேச நீதிமன்றம் மீண்டும் தொடங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்கா தொடுத்துள்ள வழக்கை 'முற்றிலும் ஆதாரமற்றது' மற்றும் 'தார்மீக ரீதியாக வெறுக்கத்தக்கது' என்று கூறிய இஸ்ரேல்இதன் மீது பதிலளித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்ததில் இருந்து சர்வதேச நீதிமன்றத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

முன்னதாக, சர்வதச நீதிமன்றம் ஜனவரி மாதத்தில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய  இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் 'நீதிமன்றத்தின் பார்வையில், உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள்... தென்னாப்பிரிக்காவால் கோரப்படும் விஷயங்களில் சிலவற்றையாவது முடிவு செய்யப் போதுமானது மற்றும் அது பாதுகாப்பைக் கேட்பதற்கான காரணங்கள் நம்பத்தகுந்ததாகும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வார்த்தைகள் சட்ட ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலராலும், காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என்ற கூற்று 'நம்பகத்தகுந்தது' என்று நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

அனால், இந்த விடயத்தில் கூட இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது இருப்பது துரதிஷ்டவசமானது. ஊலகத்தில் உள்ள பல நாடுகள் பஸ்தீனத்துக்கான தென்னாபிரிக்காவின் செயற்பாட்டை வெகுவாகப் பாரட்டியள்ளன. 

அதேநேரம், இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருக்கும் தென்னாபிரிக்காவுக்கு ஆதரவையும், நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகரகம் முன்பாக நடைபெற்ற உடன்நிற்பு போராட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், அவர்கள் இலங்கையில் இடம்பெற்ற மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு தென்னாபிரிக்கா ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆனால் இவைபற்றியெல்லாம் இலங்கை அரசாங்கம் கருத்திற் கொண்டுள்ளதா என்பதில் பல்வேறு கேள்விகள் உள்ளன. அந்த அடிப்படையில் பார்க்கின்றபோது இலங்கை அரசாங்கம் இஸ்ரேலின் பக்கமே அதிகளவில் சார்ந்திருப்பது உறுதியாகின்றது.

இவ்விதமான நிலைமைகளில் இலங்கை அரசாங்கம் பஸ்தீனம் தொடர்பில் தனது உண்மையான நிலைப்பாட்டை பொதுவெளியில் அறிவித்தாக வேண்டும்.

அவ்வாறில்லாது விட்டால் வாழ் முஸ்லிம்களினது வெறுப்பினை மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையர்களினது அபிமானத்தினையும் அரசாங்கம் இழப்பதற்கு நேரிடும். 

அடுத்து தேசிய தேர்தல் காலம் என்பதை மனதில் நிறுத்தி அரசாங்கம் சரியான தீர்வுகளை எடுக்க வேண்டியது மிகமிக அவசியமாகின்றது. அந்தத் தீர்மானங்கள் அடிப்படைய மனிதாபிமானங்களை மையப்படுத்தியாக இருக்க வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Factum விசேட கண்ணோட்டம்: தேர்தலுக்குச் செல்லும்...

2024-06-13 10:04:03
news-image

Factum கண்ணோட்டம்: ரைசியின் மரணத்தின் மூலம்...

2024-06-12 18:03:09
news-image

இலங்கை ஒருகாலத்தில் செய்தது போல இஸ்ரேல்...

2024-06-12 10:58:31
news-image

தேர்தல் நிச்சயமற்ற தன்மையே பொருளாதார மீட்சியை...

2024-06-11 15:21:50
news-image

தமிழ் பொது வேட்பாளர் குறித்த கரிசனைகளை...

2024-06-10 18:29:19
news-image

தமிழ் பொது வேட்பாளரால் தமிழ் கட்சிகளுக்குள்...

2024-06-10 18:24:08
news-image

அரசாங்கத்தின் மறைமுக எச்சரிக்கையை உணரவில்லையா கம்பனிகள்?...

2024-06-10 17:59:48
news-image

இடம்பெயர்ந்து வரும் பாலஸ்தீனியர்கள் போல வந்து...

2024-06-10 16:19:25
news-image

இரத்தினபுரி மாவட்ட தமிழர் அரசியல்…! :  ...

2024-06-10 10:50:01
news-image

ஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

2024-06-10 10:38:40
news-image

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த தமிழ்...

2024-06-10 10:27:47
news-image

வெளியிடப்படாத நவாஸ் ஆணைக்குழு அறிக்கை ஏற்புடைய...

2024-06-09 17:31:23