(ந.ஜெகதீஸ்)

சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் இருப்பாரானால் ஏன் தண்ணீர் அருந்த வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத் சாலி கேள்வி எழுப்பினார்.

விமல் வீரவன்சவை போல் சிறையில் உள்ள ஏனைய கைதிகளும் உண்ணாவிரதம் இருந்தால், நீதி வழங்கலில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என நினைப்பது நகைப்புக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

தேசிய ஐக்கிய முன்னனி கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

தற்போது சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருப்பதாக நாட்டுக்கும் மக்களுக்கும் மாயையை ஏற்படுத்திக்கொண்டு சிறைச்சாலைக்குள் தண்ணீர் அருந்துவது உண்ணாவிரதத்தில் உள்ளடங்குமா. 

அத்துடன் உண்ணாவிரதமிருந்து உடல்நிலை மோசமடைந்ததாக தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு “சேலைன்” வழங்கப்பட்டிருந்தது. அப்போதே அவரது உண்ணாவிரதம் கலைந்த விட்டது.

இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதால் என்ன நன்மை ஏற்படப்போகின்றது. என்பதை அவர் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். 

குறித்த உண்ணாவிரதத்தினூடாக நீதி மன்ற தீர்ப்பை மாற்றி எழுதிவிட முடியுமா?. கடந்த காலத்தை பொருத்தவரையில் நீதித்துறையை கூட கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆட்சியாளர்களிடம் இருந்தது. ஆனால் கடந்த காலத்தை போல் அல்லாது தற்போது நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதை அவதானிக்கமுடிகின்றது என்றார்.