விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துடன் வேகமாக முன்னேறும் உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதனால் தேரவாத பௌத்தத்தின் உண்மையான நோக்கம் பாதுகாக்கப்பட்டு உலகிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மாத்தளை தர்மராஜா பிரிவேனா விகாரையில் இன்று (23) முற்பகல் நடைபெற்ற அரச வெசாக் விழாவில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச வெசாக் விழாவில் பங்கேற்கவிருந்த போதிலும், சீரற்ற காலநிலையின் காரணமாக ஜனாதிபதி இதில் பங்கேற்கவில்லை. இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக அரச வெசாக் விழாவுடன் இணைந்து கொண்ட ஜனாதிபதி அனைத்து பௌத்த மக்களுக்கும் வெசாக் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
“அத்தனோவ அவேக்கேய கதானி அகதானி சா (மற்றவர்கள் செய்ததை அன்றி தான் செய்தவற்றைப் பற்றி கவனம் செலுத்துவோம்) என்ற தொனிப்பொருளில் மாத்தளை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இவ்வருடம் அரச வெசாக் விழா நடைபெறவுள்ளது. 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரச வெசாக் பண்டிகைக்காக 12 நாடுகளில் இருந்து பௌத்த பிக்குகள் வருகை தந்திருப்பது விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் வெசாக் நினைவு முத்திரை வெளியீடு, விகாரை அபிவிருத்தி உதவிகள், புத்தசாசன நிதியளிப்பு, தகம் பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு வழங்கல், துறவிகளுக்கு புத்தக தொகுப்புகள் வழங்கல், பிக்குமாரின் பெற்றோருக்கு காசோலைகள் வழங்கல் என்பனவும் இடம்பெற்றன.
மாத்தளை மாவட்டத்தில் உள்ள 22 கிராமிய பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்கு 22 மில்லியன் ரூபாவும், அரச வெசாக் பண்டிகையுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் 05 விகாரைகளின் அபிவிருத்திக்காக 2.6 மில்லியன் ரூபாவும், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 03 விகாரைகளின் புனரமைப்புக்கு 0.4 மில்லியன் ரூபாவும், மற்றும் 12 தகம் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 05 மில்லியன் ரூபாவும், புத்தசாசன நிதியத்தின் கீழ் 32 பின்தங்கிய விகாரைகளுக்கு மலசல கூட வசதிகளை வழங்குவதற்காக 32 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனுடன் இணைந்ததாக முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவின் பங்களிப்புடன் மாவட்டத்தில் உள்ள 25 க்கும் மேற்பட்ட விகாரைகளின் புனரைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை சாசனபாதுகாப்புச் சபை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த அலுவல்கள் திணைக்களம், மாத்தளை மாவட்ட செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அரச வெசாக் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ,
மாத்தளை வரலாற்றுச் சிறப்புமிக்க அலுவிகாரையில் திரிபீடகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதன் காரணமாகவே புனித பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். தேரவாத பௌத்தத்தின் முக்கிய இடமாக விளங்கிய மாத்தளை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இவ்வருடம் அரச வெசாக் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தமை குறித்தும் ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.
அநுராதபுர யுகத்தில் இருந்த பிரிவேனாக்களில் இருந்து மகா சங்கத்தினர் மட்டும் உருவாகவில்லை. உலகின் முக்கியமான நீர்ப்பாசன முறையை இலங்கையில் ஆரம்பிக்கும் வாய்ப்பு அந்தக் கல்வி முறையினால் கிடைத்ததாக செனரத் பரணவிதான போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இன்று உலகம் மூடநம்பிக்கையிலிருந்து விலகிச் செல்கிறது. அறிவியலில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தால், பல நூற்றாண்டுகளாக நமது வாழ்க்கை முறை முற்றிலும் மாறி வருகிறது. குறிப்பாக மருத்துவத் துறையும் தொழில்நுட்பத் துறையும் வளர்ச்சியடைந்துள்ளன. அதேநேரம், வானவியல் பற்றிய புதிய அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட அறிவின் வளர்ச்சியுடன், நாம் இன்னும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால் தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அதன் உண்மையான அர்த்தத்தை அறிந்தவர்களுக்கும் இது ஒரு பிரச்சினையல்ல. தேரவாத பௌத்தத்தின் ஊடாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். எனவே, தேரவாத பௌத்தத்தின் உண்மையான நோக்கத்தைப் பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் அனைவருக்கும் வெசாக் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் “ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னகோன், ரோஹன திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கோட்டேகொட, உதயன கிரிதிகொட, பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM