(நெவில் அன்தனி)
அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (22) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் நீக்கல் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட்களால் வெற்றிகொண்ட ராஜஸ்தான் றோயல்ஸ் 2ஆவது தகுதிகாண் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 6 தொடர்ச்சியான வெற்றிகளுடன் இந்தப் போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. ராஜஸ்தான் றோயல்ஸ் 4 தொடர்ச்சியான தோல்விகளுடன் இந்தப் போட்டியை சற்று அவநம்பிக்கையுடன் எதிர்கொண்டது.
ஆனால் பெங்களூருவின் தொடர் வெற்றிகளுக்கு முடிவுகட்டிய ராஜஸ்தான் அவ்வணியை நொக் அவுட் செய்தது.
முதலாவது தகுதிகாண் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் எதிர்த்தாடும்.
இந்தத் தோல்வியின் மூலம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவினதும் 17 அத்தியாயங்களிலும் அவ்வணிக்காக விளையாடிவந்த விராத் கோஹ்லியினதும் சம்பியனாகும் கனவு மீண்டும் காணல் நீராகிப்போனது.
ஆனால், அப்போட்டியின்போது ஐபிஎல் வரலாற்றில் 8000 ஓட்டங்களைக் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை விராத் கோஹ்லி நிலைநாட்டினார்.
252 போட்டிகளில் 8 சதங்கள், 50 அரைச் சதங்கள் உட்பட 8004 ஓடட்ங்களை விராத் கோஹ்லி குவித்துள்ளார்.
இரண்டு 'றோயல்' அணிகள் மோதிய இந்தப் போட்டியில் அதிரடியின் பிரவாகத்தைக் காண முடியவில்லை. ஆனால், சமயோசிதத்துடனும் நிதானம் கலந்த வேகத்துடனும் ஓட்டங்கள் பெறப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
விராத் கோஹ்லி, பவ் டு ப்ளெசிஸ், ரஜாத் பட்டிடார், கெமரன் க்றீன் ஆகிய பெங்களூரு வீரர்களிடமும் யஷஸ்வி ஜய்ஸ்வால், சஞ்சு செம்சன், ரியான் பரக், த்ருவ் ஜுரெல் ஆகிய ராஜஸ்தான் வீரர்களிடமும் துடுப்பாட்டத்தில் வழமையாக காணப்படும் விசுவரூபம் வெளிப்படவில்லை.
மாறாக இரண்டு அணியினரும் வெற்றியை மாத்திரம் குறிவைத்து விவேகத்துடன் விளையாடியதை அவதானிக்க முடிந்தது. இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.
173 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 19 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
யஷஸ்வி ஜய்ஸ்வால், டொம் கொஹ்லர்-கெட்மோ ஆகிய இருவரும் 33 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். கொஹ்லர்-கெட்மோ 20 ஓட்டங்களுடனும் யஷஸ்வி ஜய்ஸ்வால் 45 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து சஞ்சு செம்சன் 17 ஓட்டங்களையும் ரியான் பரக் 36 ஓட்டங்களையும் ஷிம்ரன் ஹெட்மயர் 26 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு தெம்பூட்டினர்.
18ஆவது ஓவரில் ரியான் பரக் , ஷிம்ரன் ஹெட்மயர் ஆகிய இருவரும் ஆட்டம் இழந்ததால் போட்டியில் திருப்பம் ஏற்படுமோ என எண்ணவைத்தது. அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
லொக்கி பேர்கசன் வீசிய 19ஆவது ஓவரில் ரோவ்மன் பவல் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டறிகளையும் கடைசிப் பந்தில் சிக்ஸையும் விளாசி ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றியை உறுதிசெய்தார்.
அவர் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
விராத் கோஹ்லி, அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஆகிய இருவரும் 28 பந்துகளில் 37 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில் பவ் டு ப்ளெசிஸ் 17 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.
மொத்த எண்ணிக்கை 56 ஓட்டங்களாக இருந்தபோது விராத் கோஹ்லி 33 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
தொடர்ந்து கெமரன் க்றீன் (27), ரஜாத் பட்டிடார் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதுவே அணியின் சிறந்த இணைப்பாட்டாமாக இருந்தது.
அவுஸ்திரேலியர்களான கெமரன் க்றீன், க்ளென் மெக்ஸ்வெல் ஆகிய இருவரும் 12ஆவது ஓவரில் ரவிச்சந்திரன் அஷ்வினின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். இந்த ஆட்டமிழப்புகள் பெங்களூரு அணிக்கு பலத்த நெருக்கடியைக் கொடுத்தது.
பட்டிடார் 34 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
மத்தியவரிசையில் மஹிபால் லொம்ரோர் 17 பந்துகளில் 32 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஆவேஷ் கான் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ரவிச்சந்திரன் அஷ்வின்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM