(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
வரி குறைப்பு செய்தால் 06 மாத காலத்துக்குள் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்ல நேரிடும்.எக்காரணிகளுக்காகவும் தற்போதைய வரி கொள்கையை மறுசீரமைக்க போவதில்லை.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மக்களை தவறாக வழிநடத்தி அரசியல் வாக்குறுதிகள் வழங்குவதை எதிர்க்கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினர் பொருளாதார பாதிப்பை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளவும்,பிறிதொரு தரப்பினர் தற்போதைய பொருளாதார மீட்சிகளை பலவீனப்படுத்தவும் முயற்சிக்கிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வரி குறைப்பு செய்ததால் 700 பில்லியன் ரூபா அரச வருவாயை அரசாங்கம் இழந்தது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டினார்கள்.அதேபோல் பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்தியுள்ள வரி கொள்கைகளையும் விமர்சித்தார்கள்.
தமது ஆட்சியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள வரிகள் 24 சதவீதத்தால் குறைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிடுகிறது.வரி குறைப்பினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று குறிப்பிடும் தரப்பினர்கள்,தமது ஆட்சியில் மீண்டும் வரிகளை குறைப்பதாக குறிப்பிடுவது ஆச்சரியத்துக்குரியது.
2024 ஆம் ஆண்டு வரி வருமானமாக 3870 பில்லியன் ரூபாவையும், மொத்த வருமானமாக 4127 பில்லியன் ரூபாவையும் திரட்டிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முதல் காலாண்டில் மாத்திரம் 1040 பில்லியன் ரூபா வரி வருமானமும், 1521 பில்லியன் ரூபா மொத்த வருமானமும் திரட்டிக் கொள்ளப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி குறிப்பிடுவது போன்று வரி குறைப்பு செய்தால் அரச வருமானத்தில் 25 சதவீதத்தை இழக்க நேரிடும்.
அரசியல் வாக்குறுதிகளுக்கு அமைய வரி குறைப்பு செய்தால் ஆறு மாத காலத்துக்குள் மீண்டும் 2022 ஆம் ஆண்டு வரிசை யுகத்துக்கு செல்ல நேரிடும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.ஆகவே போலியான அரசியல் வாக்குறுதிகள் வழங்குவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள தீர்மானங்களை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. குறுகிய காலத்துக்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.ஆகவே எக்காரணிகளுக்காவும் தற்போதைய மறுசீரமைப்புக்களை திருத்தம் செய்ய போவதில்லை.
2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஒட்டுமொத்த மக்களுக்கும் தாக்கம் செலுத்தியது.நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதை தடுக்கும் வகையில் நிதி முகாமைத்துவ சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு வரிசை யுகத்தை எதிர்பார்ப்பவர்களே இந்த சட்டமூலங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
மக்கள் விடுதலை முன்னணியினர் தமது பொருளாதார கொள்கை முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டதா அல்லது சமூகவாதத்தை அடிப்படைவாகக் கொண்டதா என்பதை அறியவில்லை என்று குறிப்பிடுகின்றனர்.மறுபுறம் தமது ஆட்சியில் வரி குறைப்பு செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் குறிப்பிடுகின்றனர்.ஆகவே இவ்விரு தரப்பினரும் விவாதத்தில் ஈடுபட வேண்டும் அப்போது தான் நாட்டு மக்கள் உண்மை விளங்கிக் கொள்வார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM