ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேன், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுக்கு குறித்த வெள்ளை வேனை பயன்படுத்தியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்செல்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றினை, சி.ஐ.டி.யினர்  பிலியந்தலை பகுதியில் வைத்து இன்று கைப்பற்றினர்.

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரி மேஜர் புலத்வத்தவின் நண்பியான பெண் ஒருவரின் வீட்டில் இருந்தே குறித்த வெள்ளை வேன் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வேன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், கைப்பற்றிய வேன் லசந்தவின் கொலைக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

2008ம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் மற்றும் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை, ரிவிர ஆசிரியர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவின் சிறப்பு பிரிவு ஒன்று மேற்கொண்டு வருகின்றது.

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐந்து இராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலுமொரு இராணுவ அதிகாரி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.