(நெவில் அன்தனி)
அஹமதாபாத், நரேந்திர மோடி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் முதலாவது தகுதிகாண் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வெற்றிகொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
அப் போட்டியில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய முன்னாள் சம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6.2 ஓவர்கள் மீதமிருக்க மிக இலகுவாக வெற்றிபெற்று நான்காவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
2012இலும் 2014இலும் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2021இல் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 160 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ரஹ்மத்துல்லா குர்பாஸ் (23), சுனில் நரேன் (21) ஆகிய இருவரும் 3.2 ஓவர்களில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
அடுத்து ஜோடி சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர்களான வெங்கடேஷ் ஐயர், அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் எதிரணி பந்துவீச்சாளர்களை மிக இலகுவாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்து வெற்றியை உறுதி செய்தனர்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 58 ஓட்டங்களுடனும் வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 51 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இருவரும் தலா 5 பவுண்டறிகளையும் 4 சிக்ஸ்களையும் விளாசினர்.
தங்கராசு நடராஜன், பெட் கமின்ஸ் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
விஜயகாந்த் வியாஸ்காந்த்துக்கு இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீச முடியாமல் போனது.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
ட்ரவிஸ் ஹெட் (0), அபிஷேக் ஷர்மா (3), நிட்டிஷ் குமார் ரெட்டி (9), ஷாஹ்பாகஸ் அஹ்மத் (0) ஆகிய நால்வரும் வெளியேற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெரும் தடுமாற்றம் அடைந்தது. (5 ஓவர்கள் நிறைவில் 39 - 4 விக்.)
அதன் பின்னர் ராகுல் த்ரிபதியும் ஹென்றிச் க்ளாசனும் 5ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் சரிவை ஓரளவு சீர் செய்தனர்.
எனினும் சீரான இடைவெளியில் அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தனர்.
ராகுல் த்ரிபதி 55 ஓட்டங்களையும் க்ளாசன் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடர்ந்து மேலும் 3 விக்கெட்கள் சரிய 16 ஓவர்கள் நிறைவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் மொத்த எண்ணிக்கை 126 ஓட்டங்களாக இருந்தது.
எனினும் அணித் தலைவர் பெட் கமின்ஸ் (30), விஜயகாந்த் வியாஸ்காந்த் (7 ஆ.இ) ஆகிய இருவரும் கடைசி விக்கெட்டில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 150 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வருண் சக்கரவர்த்தி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM