'புரட்சித் தமிழன்' சத்யராஜ் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் 'மழை பிடிக்காத மனிதன்'

21 May, 2024 | 05:47 PM
image

தமிழ் திரையுலகில் பன்முக திறமையுடன் முன்னணி நட்சத்திர கலைஞராக ஜொலிக்கும் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படத்தில் விஜய் அண்டனி, 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார், 'டாலி' தனஞ்செயா, மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன், 'தலைவாசல்' விஜய், ஏ. எல். அழகப்பன், இயக்குநர் திருமலை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் 'புரட்சித் தமிழன்' சத்யராஜ் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி மற்றும் விஜய் அண்டனி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.  எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல் போஹ்ரா- பங்கஜ் போஹ்ரா+ டி. லலிதா+ பி. பிரதீப் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காகக்  காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் மே 29 ஆம் திகதியன்று தொடங்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். அன்றைய திகதியில் படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும், இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே சமயத்தில் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்த சமூகம் தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி நடத்துகிறது என்பதையும், அவர்களின் எதிர்காலத்தை மாற்றும் நாயகன் கதாபாத்திரத்தின் வலுவான மற்றும் உணர்வுபூர்வமான பின்னணியை விவரிக்கும் திரைப்படமாகவும் உருவாகி இருக்கிறது. சக மனிதர்கள் மீது அளவு கடந்த கருணை காட்டும் மனிதன் ஒருவன் எப்படி புதிதாக  இருக்கும் ஒரு தீவில் நுழைந்து.. அங்குள்ள மற்றவர்களின் எதிர்காலமாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் கதை '' என்றார்.

விஜய் அண்டனி- சத்யராஜ்- சரத்குமார் என முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்திருப்பதால், 'மழை பிடிக்காத மனிதன்' படத்தினைப் பற்றிய எதிர்பார்த்து ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right